'ஜெயலலிதாவுக்கு துரோகம்செய்தவர் டி.டி.வி. தினகரன்' : ஸ்டாலின் அதிரடி!

ஆர்.கே.நகர் தேர்தல், ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில், அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.  தி.மு.க-வில் மருது கணேஷ், தே.மு.தி.க-வில் மதிவாணன், பா.ஜ.க-வில் கங்கை அமரன், சி.பி.எம் சார்பில் லோகநாதன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Stalin

சுயேச்சைகள் உள்பட, மொத்தம் 62 பேர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், அங்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து, அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஆர்.கே.நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைக்கும். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷின் எளிமையைக் கண்டு மக்கள் வரவேற்கின்றனர். அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை மறைத்த அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்துள்ளது. ஃபெரா மாஃபியா அணியும், மணல் மாஃபியா அணியும் போட்டியிடுகின்றனர். ஜெயலலிதாவை தி.மு.க. எதிர்த்ததே தவிர, துரோகம் செய்யவில்லை.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் டி.டி.வி. தினகரன். பண மோசடியில் ஈடுபட்டதால், ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர் பன்னீர்செல்வம். நான், கருணாநிதியின் மகன் என்பதால், எதையும் ஆதாரத்துடனே பேசுவேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!