‘இப்படியொரு ஈனச் செயலை எங்கள் தம்பி செய்ய மாட்டான்!’ - ‘வீடியோ’வுக்கு  சீமானின் விளக்கம் #VikatanExclusive | 'My cadre won't do such a disgusting act' - Seeman talks about that viral video

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (29/03/2017)

கடைசி தொடர்பு:15:45 (29/03/2017)

‘இப்படியொரு ஈனச் செயலை எங்கள் தம்பி செய்ய மாட்டான்!’ - ‘வீடியோ’வுக்கு  சீமானின் விளக்கம் #VikatanExclusive

சீமான்

மூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன 'அந்தக்' காட்சிகள். 'நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரின் செயலைப் பாருங்கள். அதுவும் பிரபாகரன் படத்தின் முன்பாகவே, இப்படியொரு செயல் நடக்கிறது. சீமான் கட்சி ஆட்களின் லட்சணம் இதுதான்' என வலைத்தளங்களை வைரலாக்கி வருகின்றனர் சிலர். 'ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் நடக்கும் நேரத்தில் எங்கள் கட்சியின் பெயரைக் கெடுக்கும் வேலையில் சிலர் இறங்கியிருக்கிறார்கள்' எனக் கொந்தளிக்கிறார் சீமான். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். அ.தி.மு.கவின் இரண்டு அணிகள், தி.மு.க, சி.பி.எம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் வேகம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதைவிடவும், ‘பாலியல் காட்சிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என விளக்கம் கொடுத்தே ஓய்ந்துவிட்டார்கள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள். 

சீமானிடம் பேசினோம். 

“ஆர்.கே.நகர் தொகுதிக்குள் 1-ம் தேதியில் இருந்து இரவு பகலாக வேலைகளைத் தொடங்கப் போகிறேன். விவசாயிகள் பிரச்னைக்காக, நாளை டெல்லி செல்கிறேன். அங்கு நம் கட்சித் தொண்டர்களும் இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதிக்குள் இளைஞர் வாக்குகள் மட்டுமே எழுபதாயிரம் இருக்கின்றன. மாற்று சிந்தனையுள்ள இளைஞர்கள் அங்கு நிறைந்து இருக்கிறார்கள். புதிய புதிய இளைஞர்கள் மலர்ச்சியான விழிகளோடு எங்களைப் பார்க்கின்றனர். இப்போதுள்ள அரசியல் சண்டையை அவர்கள் வெறுக்கிறார்கள். 'எல்லோரும் பேசுவதைக் கேளுங்கள். நாங்கள் பேசுவதையும் கேட்டுவிட்டு, வாக்குச் செலுத்துங்கள்' என்றுதான் பிரசாரத்தில் முன்வைக்கிறோம். வாக்குக்குப் பணம் கொடுப்பதாகப் புகார் சொல்பவர்களும் பணம் கொடுக்க இருக்கிறார்கள். இவர்களும் கொடுத்தவர்கள்தான். நேற்று ஸ்டாலின் பேசும்போது, 'இந்த மாஃபியாக்களை எல்லாம் விரட்டுங்கள்' என்கிறார். இவரும் பழைய மாஃபியாதானே... இவர் சேகர் ரெட்டியைப் பற்றிப் பேசுவார். அவர்கள், கே.சி.பழனிசாமியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

தொகுதி மக்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்கிறார்கள். அப்படியானால், இவ்வளவு ஆண்டுகாலம் மக்களைத் தெருவில்தானே நிறுத்தியிருந்தார்கள். 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த கொடுங்கையூர் குப்பையை 300 ஏக்கராக மாற்றியதுதான் இவர்கள் செய்த சாதனை. பிளாஸ்டிக்கை ஒழிக்க இவர்கள் எந்த வழிவகைகளையும் செய்யவில்லை. அது தீப்பிடித்து எரிவதால், ஏராளமான நோய்கள் உருவாகின்றன. சி.பி.சி.எல் பெட்ரோலிய நிறுவனத்தின் குழாய் உடைந்து மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னமும் சரிசெய்யவில்லை. 'நாட்டை எப்படி ஆள்வோம்?' என நாங்கள் செயல்திட்ட அறிக்கைகளை வெளியிட்டோம். தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு, திராவிடக் கட்சிகள் செயல்பட்டிருக்க வேண்டும். அறிக்கை கொடுப்பதற்காகவே பிரச்னைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 'குடிநீர் குழாயில் தண்ணீர் வறண்டது... கண்ணீர் வறண்டது' என்கிறார் ஸ்டாலின். இவர்கள் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஏரி, குழாய்களை பராமரித்தார்கள்? உங்கள் ஆட்சிக் காலத்தில் ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டதா இல்லையா? ஆட்சியில் இல்லாவிட்டால் இவர்கள் புனிதர் ஆகிவிடுவார்களா? 'மேம்பாலம் கட்டுவோம், மருத்துவமனை கட்டுவோம்' என நான்தான் சொல்ல வேண்டும். அதைச் சொல்ல இவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இந்தத் தொகுதியில் இரண்டு முறை வென்று ஜெயலலிதா முதல்வராக இருந்திருக்கிறார். 'முதன்மைத் தொகுதியாக மாற்றுவோம்' என்றால், மற்ற தொகுதிகளின் நிலை என்ன? ஒரு தொகுதிக்குத்தான் முதலமைச்சரா?" எனக் கொந்தளித்தவரிடம், 

‘சமூக ஊடகங்களில் சில காட்சிகள்...'எனக் கேட்கும் முன்னரே, விரிவாகப் பேசத் தொடங்கிவிட்டார். "அதை வெறுமனே பரப்புகிறார்கள். அவர் நாம் தமிழர் கட்சித் தொண்டர் என எப்படிச் சொல்வீர்கள்? நான் உங்களுக்கு சில காட்சிகளை அனுப்புகிறேன்.  என் படத்தை ஒட்டிச் சேர்த்துள்ளனர். இப்படியொரு ஈனச் செயலைச் செய்பவன், மறைவாக இருந்து கொண்டு செய்யலாம். பிரபாகரன் படத்துக்கு முன்னால் நின்று செய்வதற்கு, சில நோக்கம் இருக்கிறது. அதைப் படமாக எடுக்க வேண்டும் என்ற உள்நோக்கமும் இருந்திருக்கிறது. நாங்கள் எங்கெல்லாம் எழுச்சியோடு வேகமாக வருகிறோம் என்பதை உணர்ந்து, தேர்தல் நேரத்தில் இப்படியொரு காட்சியை வெளியிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவன் இப்படியொரு கேடுகெட்ட செயலைச் செய்ய மாட்டான். இப்படிப்பட்ட நபரால் எங்கள் கட்சிக்குள் தாக்குப் பிடிக்க முடியாது. பேருந்து கண்ணாடியை உடைத்த ஒருவரை, கட்சியை விட்டு நீக்கியவன் நான். இதற்கும் நாம் தமிழருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். எங்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றால், கோபப்பட வேண்டிய தேவையில்லை. உண்மை என்றால் கோபப்படும் உரிமை எங்களுக்கு இல்லை. இதற்கு எதிராக நாங்கள் எந்த விளைவையும் காட்டவில்லை. இன்னும் கீழே சென்றுகூட எங்களை வீழ்த்துவார்கள். இதை பரப்ப வேண்டிய தேவை என்ன இருக்கிறது? ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளைக் கடந்து செல்கிறோம். கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க முடியாது. அதையும் எதிர்கொண்டுதான் கடந்து செல்ல வேண்டியுள்ளது" என்றார் பலத்த சிரிப்போடு. 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்