வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (29/03/2017)

கடைசி தொடர்பு:15:04 (29/03/2017)

ஆச்சு ஐந்து ஆண்டுகள்... என்ன ஆச்சு ராமஜெயம் கொலை வழக்கு?

ராமஜெயம்


“எனது ஆட்சியில் தமிழக காவல் துறை, ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக விளங்குகிறது” என அடிக்கடி சொல்வார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் உயிரோடு இருந்தபோது, தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இதுவரை கொலைக்கான காரணத்தைத் தமிழக காவல் துறையால் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் கொடுமை.

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி, தில்லை நகர் பகுதியில் வாக்கிங் போன ராமஜெயம், திருவளர்ச்சோலை அருகே கைகால்கள் கட்டப்பட்டு பிணமாகத்தான் கண்டெடுக்கப்பட்டார். தமிழகத்தில் மிகவும் பரபரப்பை உண்டாக்கிய இந்த வழக்கை முதலில், திருச்சி மாநகர போலீஸார் தீவிரமாக விசாரித்துவந்தனர். அடுத்து, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டப் பிறகு, 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த 10.12.2014 அன்று, ‘'ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’' என அவரது மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த வழக்கை விசாரிப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு மேலாக, நீதிமன்றத்தில் கால அவகாசம் வாங்கிவருகின்றனர். ‘'இதுதான் கடைசி’' என ஒவ்வொருமுறையும் எச்சரிக்கும் நீதிபதிகள், அவகாசம் வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரிக்கும், நீதிபதிகள், இதுவரை எட்டுப் பேர் மாற்றப்பட்டுள்ளார்கள். 11 முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாகக் கடந்த ஜனவரி 19-ம் தேதி, நீதிபதி கோகுல்ராஜிடம், '‘குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்'' என ஏப்ரல் 19-ம் தேதிவரை மூன்று மாத கால அவகாசம் வாங்கியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ். இன்று (29-03-17) ராமஜெயத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள். இதனையொட்டி திருச்சி முழுவதும், இதய ஓவியமே, வாரி வழங்கிய வள்ளலே, அழியா வரலாறே, காவல் தெய்வமே, ஏழைகளின் சிரிப்பே என ராமஜெயம் நினைவாக, அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்தி உள்ளனர்.

ராமஜெயம்

இதுகுறித்துப் பேசிய ராமஜெயம் ஆதரவாளர்கள், “ராமஜெயம் சாவுக்கு பல்வேறு  கதைகளை போலீஸார் சொன்னார்கள். இன்று வரை, உண்மைக்குற்றவாளியை போலீஸார் பிடித்தபாடில்லை. ராமஜெயம் உயிருடன் இருந்தபோது ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜை காரோடு எரித்துக்கொன்றதாகவும், அவரது அண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரத்திலும் வீண் பழியை ராமஜெயத்தின் மீது சுமத்தினார்கள். ராமஜெயம் இறந்த பிறகு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வேறு ஒரு வழக்கில் கைதானார். போலீஸ் விசாரணையில், புது தகவலைச் சொன்னார். துரைராஜை கொன்றதாக ஒப்புக்கொண்டார். கண்ணன் தற்போது சிறையில் இருக்கிறார். கண்ணன் மீதான வழக்கு  இப்போது விசாரணைக்கு வந்துள்ளது. இதில், 80-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் கடந்த வாரம்முதல் விசாரணை நடப்பதால், ஒட்டுமொத்த திருச்சி சி.பி.சி.ஐ.டி டீமும் துரைராஜ் கொலை வழக்கிலேயே கவனம் செலுத்துகிறது. ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை காவல் துறை எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸார், துறையூர் வெடிமருந்து தொழிற்சாலை விபத்துக்குப் பிறகு, அந்த வழக்கில் படு பிஸி. மேலும், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த திருச்சி சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி மலைச்சாமி ஓய்வுபெற்று பல மாதங்கள் ஆகின்றன. இன்னும், அந்த இடத்துக்கு யாரும் வரவில்லை. மதுரை டி.எஸ்.பி ராஜேந்திரன்தான் பொறுப்பு வகிக்கிறார். இப்படியான விஷயங்களால்தான் ராமஜெயம் கொலை வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. இதை, சி.பி.ஐ-க்கு மாற்றியிருந்தால்கூட, அந்த வழக்கில் இந்நேரம் கொலையாளிகள் பிடிபட்டிருப்பார்கள். ஆனால், கொலையாளியை பிடிக்கவே கூடாது என்கிற நோக்கத்துடன் அ.தி.மு.கழக அரசு செயல்படுகிறது. இந்த அரசு இருக்கும்வரை ராமஜெயம் சாவுக்கு நீதி கிடைக்காது'' என்றனர்.

‘'அடுத்தமாதம் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது கூட, சி.பி.சி.ஐ.டி போலீஸார் உண்மையை வெளியே கொண்டுவருவார்கள் என நம்பிக்கையில்லை. சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்'' என்கின்றனர் ராமஜெயம் குடும்பத்தினர்.

- சி.ய.ஆனந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்