வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (30/03/2017)

கடைசி தொடர்பு:11:31 (31/03/2017)

ஜிர்கான், ருடைல், சிலிமனைட், இலுமனைட்...! - வி.வி.மினரல்ஸின் கொள்ளை மோசடிக்குக் கடிவாளம் #VikatanExclusive

வி.வி.மினரல்ஸ் நிறுவனம்

வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தாதுமணல் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு, கடந்த 27-ம் தேதி உயர்நீதிமன்றம் தடைவிதித்த அதேவேளையில், 'சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாது மணலைக் கணக்கிடுவதற்கு அரசு செயலர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது. எந்தச் சட்டமும் எங்களுக்குப் பொருந்தாது என்ற மனநிலையில் வைகுண்டராஜன் செயல்படுகிறார். இனி வரக் கூடிய நாள்கள் மிகக் கடுமையானதாக இருக்கும்' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம். கடந்த 25 ஆண்டுகளாக 15 கி.மீ பரப்பளவில் உள்ள கடல் எல்லையைக் கணக்கில் கொண்டு தாது மணல் வர்த்தகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கார்னட், இலுமனைட், ருடைல் உள்ளிட்ட தாதுக்களின் மூலம் மிகப் பெரும் அளவில் வருவாயையும் ஈட்டி வருகின்றது. கடந்த 2013-ம் ஆண்டு அ.தி.மு.க பொதுச் செயலாளரும் அப்போதைய முதல்வருமான ஜெயலலிதாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார் வைகுண்டராஜன். இதையடுத்து, வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்துக்குத் தடை விதித்தது மாநில அரசு. இதையும் மீறி, 'சட்டவிரோதமான முறையில் தாதுக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக' சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், கடந்த 13.3.2017 அன்று வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்காக தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் பெயரில் கனிமவளத்துறை அதிகாரிகள் தயாரித்திருந்த போலிக் கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்குக் காரணமான, தூத்துக்குடி மாவட்ட கனிமவளத்துறையின் உதவி இயக்குநர் கிருஷ்ணமோகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மறுநாள், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் குடோன்களை சீல் வைக்கவும் உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம். 

மகேசன் காசிராஜன் நியமன ஆணை

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் அதிபர் வைகுண்டராஜனுக்காக கனிமவளத்துறை அதிகாரிகள் காட்டிய பாசம் ஒருபுறம் இருந்தாலும், தாதுமணல் வர்த்தகத்துக்கு எதிராக விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். கடந்த 27-ம் தேதி தலைமை நீதிபதி (பொறுப்பு) ரமேஷ் மற்றும் நீதியரசர் டீக்காராமன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர், 'இந்திய அணு சக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன்படி தமிழக அரசு விவி.மினரல்ஸுக்குக் குத்தகை உரிமம் அளித்தது. நீதிமன்றத்தின் கோரிக்கைப்படி தாது மணல் கிடங்குகளை ஆய்வு செய்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்துள்ளோம். இதற்கான அரசாணை கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர்கள், 'தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்குத் தாதுமணல் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறோம். வரும் காலங்களில் தாது மணல் கொள்ளை நடக்காமல் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்' என அதிரடியாக உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

மகேசன் காசிராஜன் நியமன ஆணை

"தாதுமணல் கிடங்குகளை ஆய்வு செய்ய, தமிழக அரசின் சர்க்கரை ஆணையாளர் மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு அமைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 25.3.2017 அன்று இதற்கான அரசாணை(G.O. (Ms) No:29) வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐதராபாத்தைச் சேர்ந்த கடற்கரை மணல் அடாமிக் மினரல்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் குமார், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவியல் ஆலோசகர் சௌமன் சின்ஹா உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவானது, கடற்கரையோரத்தில் தோண்டியெடுக்கப்படும் தாதுமணல் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்தக் குழுவுக்குத் தேவையான தரவுகளை திருநெல்வேலி, துத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் அளிக்க இருக்கிறார்கள்" என விவரித்த சென்னை, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர், தாதுமணல் கொள்ளை விவரங்களை நம்முன் பட்டியலிட்டார். 

வைகுண்டராஜன்"வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விரிவான குறிப்புகளைத் தயாரித்திருக்கிறார். கடற்கரையோரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும், பல்லாயிரம் மெட்ரிக் டன் தாதுமணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்த மாவட்டக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், சேரன்மாதேவி சார் ஆட்சியர், சுரங்கத்துறை துணை ஆணையர், மாவட்ட வன அலுவலர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரி, பொதுப் பணித்துறையின் செயற் பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக ராதாபுரம் தாசில்தார் கொடுத்த அறிக்கையும் முன்வைக்கப்பட்டது. தாசில்தார் அளித்த அறிக்கையில், 'வி.வி.மினரல்ஸ் நிறுவனமானது, 2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் 98 லட்சத்து 80 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் தாது மணலை எடுத்துள்ளனர். இதற்கு முறையாக ராயல்டி தொகை செலுத்தியுள்ளனர்.

இதே காலகட்டத்தில், 57 லட்சத்து 71 ஆயிரத்து 688 மெட்ரிக் டன் தாது மணலை ஏற்றுமதிக்காக விற்றுள்ளனர். இதுதொடர்பாக, குமரேசன் மற்றும் தயா தேவதாஸ் ஆகியோர் அளித்த புகார்கள் ஆதாரமற்றவை. சுற்றுச்சூழல் மற்றும் இந்திய சுரங்கத்துறையின் அனுமதியோடுதான் வி.வி.நிறுவனம் செயல்பட்டு வருகின்றது' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், 'இந்த விவகாரத்தில் 2000-ம் ஆண்டு முதல் 31.3.2016-ம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்டுள்ள மொத்த தாது மணலின் அளவைத்தான் அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில், கார்னட், இலுமனைட், ருடைல், சிலிமனைட், லுகாக்சின் உள்ளிட்ட தாதுக்கள் எவ்வளவு எடுக்கப்பட்டன எனத் தனித்தனியாக குறிப்பிடப்படவில்லை. வி.வி. நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட அனுமதிகளை ஆராயும்போது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகப்படியாக ருடைல் மற்றும் ஜிர்கான் தாதுக்களை ஏற்றுமதி செய்துள்ளனர்' என மீட்டிங் மினிட்ஸில் குறிப்பிட்டுள்ளனர். 

வி.வி.மினரல்ஸ் கனிமவள மோசடி ஆவணம்

குறிப்பாக, 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையில் 14 லட்சத்து 4 ஆயிரத்து 692 மெட்ரிக் டன் தாது மணலை, அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக எடுத்துள்ளனர். இதில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 31 மெட்ரிக் டன் கார்னட், 5 லட்சத்து 97 ஆயிரத்து 539 மெட்ரிக் டன் இலுமனைட், 62 ஆயிரத்து 78 மெட்ரிக் டன் ருடைல், 41 ஆயிரத்து 756 மெட்ரிக் டன் ஜிர்கான், 40 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் சிலிமனைட் ஆகியவை கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளன. 2014 மற்றும் 2015-ம் ஆண்டு தாதுமணல் வர்த்தகத்துக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகும் 4 லட்சத்து 41 ஆயிரத்து 447 மெட்ரிக் டன் தாதுமணலை வி.வி.நிறுவனம் தோண்டி எடுத்துள்ளது. இதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. இதேபோல், 2015-16-ம் ஆண்டில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 501 மெட்ரிக் டன் தாது மணல் எடுக்கப்பட்டுள்ளது. 'சட்டத்துக்குப் புறம்பான வகையில் இந்தத் தாதுமணல் எடுக்கப்பட்டதா?' என்பதை ஆய்வு செய்யும்படி சுங்கத்துறை ஆணையர் அலுவலகம், நெல்லை மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொண்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 948 மெட்ரிக் டன் தாதுமணல் எடுக்கப்பட்டிருக்கிறது.

கருணாகரன் ஐ.ஏ.எஸ். 2016 முதல் 2017 மார்ச் வரையில் 86 ஆயிரத்து 587 மெட்ரிக் டன் தாதுமணல் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கின்றன. இதில் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை விதி எண் 62-ன்படி ராயல்டி தொகை குறைத்துக் கூறப்பட்டுள்ளது. விதி எண் 64(D)ன்படி  ஏற்றுமதி மதிப்பில் 3 சதவீதத்தை ராயல்டி தொகையாகச் செலுத்த வேண்டும். அப்படிப் பார்த்தால், 100 கோடி ரூபாய்க்கும் மேல் ராயல்டி தொகையை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாமல், அரசை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து, புவியியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையாளர் பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன். மாவட்டக் குழு கூட்டத்தின் முடிவுகளுக்கு மத்திய அரசின் கனிமவளத்துறையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. வரும் நாள்களில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மகேசன் காசிராஜன் விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார். அந்த நேரத்தில் இந்த ஆவணங்கள் அனைத்தும் வி.வி.மினரல்ஸின் கனிமவள மோசடிகளை உலகுக்கு அறிவிக்கும்" என்றார் மிகுந்த நம்பிக்கையுடன். 

சட்டவிரோத தாதுமணல் ஏற்றுமதி பட்டியல்"தாதுமணல் ஏற்றுமதிக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவையில்லை என்பது வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியும். ஏற்றுமதிக்காக மாவட்ட ஆட்சியரின் கடிதத்தை சுங்கத்துறை அதிகாரி கேட்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நெல்லை மாவட்ட கலெக்டர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். தாது மணல் வர்த்தகம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாகவே வைத்திருக்கிறோம். அரசுக்கு முறையான ராயல்டி தொகையும் செலுத்தியுள்ளோம். எங்களால் எந்தவித நஷ்டமும் ஏற்படவில்லை" என்கின்றனர் வி.வி.மினரல்ஸ் தரப்பில். இதற்குப் பதில் அளிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளோ, 'கடற்கரையோரத்தில் மணல் எடுக்கப்படுவதில் இருந்து தாதுமணலைப் பிரித்தெடுத்து, குடோன்களுக்குக் கொண்டு செல்வது வரையில் மூன்றுவித கேட் பாஸ்களை மாவட்ட நிர்வாகம்தான் வழங்க வேண்டும். அப்படி எந்த ஒப்புதலும் இல்லாமல், எங்கு வேண்டுமானாலும் தாதுமணலைக் கொள்ளையடித்துவிட முடியுமா?' எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

தாதுமணல் வர்த்தக மோசடிகள், ஏற்றுமதிக்குத் தடை, தலைமை அலுவலக கட்டட சர்ச்சை, ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனிக் குழு எனப் பலமுனைத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறார் வைகுண்டராஜன். 'நெல்லை கலெக்டர் கருணாகரனால்தான் இவ்வளவு பிரச்னையும். அவரை இடமாற்றம் செய்யுங்கள்' என ஆளும்கட்சித் தரப்புக்கும் நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். 'ஆர்.கே.நகர்த் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியர் மாற்றப்படுவார்' எனவும் அவர்கள் பேசி வருகின்றனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் வைகுண்டராஜனுக்கு எதிராக வெகு சில அதிகாரிகளே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தாதுமணல் கொள்ளை குறித்த ககன்தீப் சிங் பேடியின் அறிக்கையும் தூங்கிக்கொண்டிருக்கிறது. தாதுமணல் மோசடியின் அடிவேர் வரையில் பயணப்பட்டிருக்கிறார் நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன். இப்போது களத்துக்கு வர இருக்கிறார் மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ். 'நாட்டின் கனிமவளத்தைக் காக்கும் யுத்தத்தில் வீழப் போவது யார்?' என்ற கேள்விகளும் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. 

-ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்