வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (30/03/2017)

கடைசி தொடர்பு:16:15 (30/03/2017)

108 அம்சங்கள்! ஆர்.கே.நகர் தேர்தல் அறிக்கையில் அதிரடி காட்டினார் பன்னீர்செல்வம்!

Panneerselvam

சென்னை, ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டார். நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட 108 அம்சங்கள், இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சென்னை, ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சசிகலா அணியின் அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வம் அணியின் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனனும், எம்.ஜி.ஆர் அம்மா பேரவை சார்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுகின்றனர். மேலும், தி.மு.க., பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க அம்மா கட்சி மற்றும் எம்.ஜி.ஆர் அம்மா பேரவை ஆகியவை ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டன. இந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் இன்று தண்டையார்பேட்டையில், தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தீபம் மற்றும் ஆரத்தி எடுத்து ஓ.பன்னீர்செல்வம் 108 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் விவரம்:

 

* முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொழில்நுட்பங்களுடன்கூடிய நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும்.

* எழில் நகரில் சுற்றுலா மையம் அமைக்கப்படும்.

* ஆர்.கே.நகரில், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும்.

* அனைவருக்கும் பட்டா, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் தரப்படும்.

* ஆரம்ப சுகாதார மையங்களில் போதுமான மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* தரமான சாலை, பாதுகாப்பான சாக்கடை வசதிகள் செய்து தரப்படும்.

* ஆர்.கே.நகரில், மேலும் இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், ஒரு மேல்நிலைப் பள்ளி கொண்டு வரப்படும்.

* ஆர்.கே.நகரில், தற்போது நடந்துவரும் 11 பணிகளை விரைந்து நிறைவேற்றுவோம்.

* ஆர்.கே.நகர் கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம்.

* கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு அகற்றப்பட்டு, தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

* ஆர்.கே.நகர் தொகுதியில், பெண்களை தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுத்துறை வங்கிகள், நூலக வசதி ஏற்படுத்தப்படும்.

* 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு நியாயவிலைக்கடை கொண்டு வரப்படும்.

* 'மை ஆர்.கே.நகர்' என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலிமூலம் தொகுதிப் பிரச்னைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.

படம்: வி.ஸ்ரீனிவாசலு