வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (30/03/2017)

கடைசி தொடர்பு:14:42 (30/03/2017)

"ஓ.பி.எஸ், தீபா சண்டைக்கு இதுதான் காரணம்!" - ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஆர்ப்பரிக்கும் இரு அணிகள்

 தீபா

ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே கருத்துமோதல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பன்னீர்செல்வத்தை தீபா குற்றம்சாட்டிப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருதரப்பினர் தீபாவை ஆதரித்தனர். தமிழகம் முழுவதும் தீபாவின் அனுமதியின்றி பேரவை தொடங்கப்பட்டு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக தீபா தெரிவித்தார். ஆனால், அதற்கு முன்பே அரசியல் பயணத்துக்கு அவர் அச்சாரமிட்டார். அவர், அறிவித்தபடியே பிப்ரவரி 24-ம் தேதி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கியதோடு கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். அடுத்து, மாநில நிர்வாகிகளை நியமித்தார். மாநிலத் தலைவர், மாநிலச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் கணவன், மனைவிக்குக் கொடுத்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.  மாநிலச் செயலாளர் பதவி வகித்த ராஜா, நீக்கம் செய்யப்பட்டார்.  இதற்கிடையில், சசிகலாவின் தலைமை பிடிக்காமல் பிரிந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனி அணியை உருவாக்கினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தீபாவுக்கு அழைப்பு விடுத்தார். எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற கோட்பாட்டில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் இணைந்து செயல்படுவதாக அறிவித்தனர். இருவரும் ஜெயலலிதா சமாதியில் சந்தித்தனர். பிறகு, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்றார் தீபா. இது, சசிகலா அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தச் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், தீபா ஆதரவாளர்களுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன்பிறகு இருவரும் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடரவில்லை. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் அணி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்குக்கூட தீபா செல்லவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதாவின் மரண விவகாரத்தைக் கையில் எடுத்து மக்கள் மேடைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மத்திய அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதே கோரிக்கையை தீபாவும் வலியுறுத்தினார். 

தீபா


ஓ.பன்னீர்செல்வம் அணியும், தீபா அணியும் ஒன்றுசேர்ந்து அரசியல் பயணத்தைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும் இருதுருவங்களாக மாறியுள்ளனர். இதற்கு உண்மையான காரணத்தை இருதரப்பு அணிகளைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் விவரித்தனர். 
தீபா அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி நம்மிடம், "ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தீபாவுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு ஏற்பட்டது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டனர். இதற்காக தீபாவுக்கு அழைப்புவிடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். அந்தச் சமயத்தில் தீபா அமைதியாகவே இருந்தார். ஜெயலலிதா சமாதிக்கு தீபா செல்வதையறிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் அங்கு வந்தனர். இருவரும் சந்தித்துப் பேசினர். அந்த அணியில் உள்ள எம்.பி. ஒருவர், தீபாவை ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் தீபாவும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாகச் சேர்ந்து பேட்டி அளித்தனர். அந்தப்பேட்டியில் இருவரும் இருகரங்களாக இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தனர். 

இந்தச் சமயத்தில் தீபாவுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடம் கோரிக்கை வைத்தோம். இதுதொடர்பாக இருதரப்பைச் சேர்ந்தவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். முதல்வர் பதவி ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் பதவி தீபாவுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தோம். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியில் சிலர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இன்னொரு தரப்பினர் சம்மதிக்கவில்லை. அடுத்து, தீபாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுப்பதாக பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்தனர். ஆனால், அதை தீபா ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. 

ஏற்கெனவே தீபா, ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டதும் பன்னீர்செல்வம் அணியினர் தீபாவை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் மதுசூதனை வேட்பாளராக அறிவித்துவிட்டனர். இதனால் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்ததால் தீபாவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தேர்தலில் தீபாவுக்குப் போட்டி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ்தான். மதுசூதனனும், டி.டி.வி.தினகரனும் இல்லை”என்கின்றனர். 

மதுசூதனன்

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், “தீபாவுக்கு அரசியல் அனுபவமே இல்லை. அரசியலுக்கு வந்தவுடன் பொதுச்செயலாளர் பதவிக்கு அவர் ஆசைப்பட்டார். அந்தப்பதவி இல்லை என்றதும் நான்தான் முதல்வர் என்று எங்களிடம் சொல்கிறார். இதுவே, எங்களுக்கும் தீபா அணியினருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தீபா, தொடங்கிய பேரவையில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் உள்ளன. அதைச் சரிசெய்ய முடியாமல் அவர் திணறுகிறார். ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அமைதியாக இருக்கிறோம். எங்களைப்பற்றி அவர், அவதூறாகப் பேசினால், அவரைக் குறித்தும் நாங்களும் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே கணவர் மாதவனுடன் பிரச்னை, பேரவை நிர்வாகிகள் நியமிப்பதில் சிக்கல், அரசியலில் போதிய வழிகாட்டி இல்லாமல் தீபா சிரமப்படுகிறார். இந்தத் தேர்தல் அவருக்கு ஒருபாடமாக அமையும். ஆர்.கே.நகர்த் தொகுதியில் அவரைப் பார்க்கவே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதெல்லாம் ஓட்டுகளாக விழாது” என்றனர். 

- எஸ்.மகேஷ்


டிரெண்டிங் @ விகடன்