''வற்புறுத்தி செஸ் சேர்த்தோம்... ஆனால், கிராண்ட்ஸ்லாம் வென்றான்!'' - நெகிழும் ஶ்ரீநாத் தாய்! | We compelled him to train chess...But he won Grandslam! - Srinath mother expressed joyfully

வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (30/03/2017)

கடைசி தொடர்பு:19:30 (30/03/2017)

''வற்புறுத்தி செஸ் சேர்த்தோம்... ஆனால், கிராண்ட்ஸ்லாம் வென்றான்!'' - நெகிழும் ஶ்ரீநாத் தாய்!

செஸ் கிராண்ட் மாஸ்டர் ஶ்ரீநாத்

செஸ் விளையாட்டின் மிகச்சிறந்த சாதனை உயரங்களில் ஒன்றான 'கிராண்ட் மாஸ்டர் பட்டம்' பெற்று, சாதனைப்படைத்துள்ளார் இளம் செஸ் வீரரான சென்னையைச் சேர்ந்த ஶ்ரீநாத் நாராயணன். மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஶ்ரீநாத்தின் பெற்றோர்தான், அவரது சாதனை பயணத்துக்கு உறுதுணையாக இருந்தவர்கள். அளவில்லா மகிழ்ச்சியுடன் உற்சாகமாகப் பேசத் துவங்குகிறார், ஶ்ரீநாத்தின் தாய் பிரசன்னா நாராயணன்.

"எங்கக் குடும்பத்துல யாருக்குமே செஸ்ல பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஒருமுறை குடும்பத்தோடு நாங்க ட்ரெயின்ல போயிட்டு இருக்குறப்போ ஶ்ரீநாத்தும், அவனோட பெரியம்மா பையனும் செஸ் விளையாடினாங்க. சொல்லிக்குற அளவுக்குப் பெரிய பயிற்சி எடுத்துக்காத நிலையில ஶ்ரீநாத் நல்லாவே செஸ் விளையாடினதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டோம். என் கணவரும் நானும் வேலைக்குப் போறதால,  அவனைப் பார்த்துக்குக்க போதிய நேரம் எங்களுக்குக் கிடைக்கல. அப்போதான் எங்க வீட்டுக்குக்குப் பக்கத்துலயே ஒரு செஸ் அகாடமி ஒண்ணு ஆரம்பிச்சாங்க. ஶ்ரீநாத்தை அவனோட ஐஞ்சு வயசுல நாங்களாவேதான் வற்புறுத்தி செஸ் கிளாஸ்க்கு அனுப்பி வெச்சோம்.

குடும்பத்தினருடன் ஶ்ரீநாத்

அவனும் எங்க விருப்பத்துக்கு ஏற்ப செஸ் கிளாஸ் போனான். கொஞ்ச நாள்லயே செஸ் விளையாட்டு அவனுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. தொடர்ந்து ஆர்வத்தோட பல செஸ் போட்டிகள்ல விளையாடினான். ஒரு வருஷத்துக்குள்ளயே எட்டு வயசுக்கு உட்பட்டோர் பிரிவுல, 'ஸ்டேட் சாம்பியன்' பட்டம் வாங்குற அளவுக்கு உயர்ந்தான். அந்த தருணத்துலதான் உண்மையாகவே பையனுக்குள்ள இருக்குற செஸ் திறமையை நாங்க கண்டுபிடிச்சோம். கூடவே 'அவனை தொடர்ந்து விளையாட விடுங்க'ன்னு அவனோட டிரெய்னர்ஸூம் சொன்னாங்க. இந்த செஸ் ஃபீல்டுதான் பிள்ளைக்கான சரியான சாய்ஸ்னு அவன் போக்குலயே நாங்க விட்டுட்டோம். கூடவே அவனோட எல்லா தேவைகளையும் பூர்த்தி செஞ்சு, ஒத்துழைப்புக் கொடுத்தோம். குறிப்பா என்னோட கணவர்தான், 'பையன் என்னைக்காச்சும் ஒரு நாள் செஸ்ல எல்லோரும் பாராட்டுற மாதிரி பெரிய உயரத்துக்கு வருவான்'னு சொல்லிட்டே இருப்பாரு.

படிப்புலயும் அதிக கவனம் செலுத்துடான்னு நான் அடிக்கடிச் சொன்னாலும், அசால்ட்டா எக்ஸாம் டைம்ல மட்டும் படிச்சு சூப்பர் மார்க் வாங்குவான். அதனால ஒரு பெற்றோரா எங்களுக்கு அவன் எதிர்காலத்து மேல பெரிய பயம் எதுவும் இல்லை. அவனும் செஸ்ல ஒவ்வொரு கட்டமா உயர்ந்த நிலைக்குப் போயிட்டு இருந்தான். அந்த டைம்லதான், 'உலக அளவுல பல அனுபவங்களைப் பெறட்டும். வெற்றி தோல்வியெல்லாம் முக்கியமில்லை'ன்னு சொல்லி, பிரான்ஸ்ல நடந்த இன்டர்நேஷனல் லெவல் போட்டிக்கு அனுப்பினோம். அது பத்து வயசுக்கு உட்பட்டோர்க்கான பிரிவு. அப்போ அவனுக்கு எட்டு வயசு. அதுல கலந்துகிட்டு 'சர்வதேச சாம்பியன் பட்டம்' வாங்கினான். இதுல 2000-ம் வருஷம் விளையாட ஆரம்பிச்சு 2005-ம் வருஷம் உலக சாம்பியன் ஆனது எங்களால மறக்க முடியாத தருணம். அப்படியே இதுவரைக்கும் ஐஞ்சு மாஸ்டர் பட்டம் வாங்கி, ஶ்ரீநாத் இப்போ செஸ்ல உயர்ந்த நிலையான 'இந்திய கிராண்ட் மாஸ்டர் பட்டம்' வாங்கியிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்க வற்புறுத்தி செஸ் கிளாஸூக்கு அனுப்பினாலும், இப்போ கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கி எங்களை பெருமைப்படுத்திட்டான், ஶ்ரீநாத். பி.காம்., முடிச்சுட்டு, இப்போ முழு நேரமா செஸ் போட்டிகள்ல கவனம் செலுத்திட்டு இருக்கான். 2,800 புள்ளிகளுடன் இருக்குற நார்வே நாட்டின் கார்ல்சன்னுடன் மோதும் இலக்குலதான் ஶ்ரீநாத் தொடர்ந்து பயிற்சி எடுத்துட்டு இருக்கான்" என உற்சாகமாக சிரிக்கிறார் பிரசன்னா நாராயணன்".

ஶ்ரீநாத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த அவர் தந்தை நாராயணன், "ஏற்கெனவே இன்டர்நேஷனல் லெவல்ல மாஸ்டர் பட்டம் வாங்கின நிலையில, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்குறதுக்குத் தேவையான நாம்ஸ் வெச்சுருந்தான் ஶ்ரீநாத். ஆனா வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி பெறுவதுல இருந்த சில சிக்கல்களாக பட்டம் பெறத் தேவையான 2,500 புள்ளிகளை ரீச் செய்றதுலதான் கொஞ்சம் தாமதம் ஆகிட்டே இருந்துச்சு. இப்போ ஷார்ஜாவுல நடந்த போட்டியில கலந்துகிட்டு 2,500 புள்ளிகளை ரீச் செய்து 'கிராண்ட் மாஸ்டர் பட்டம்' வாங்கியிருக்கான், ஶ்ரீநாத். ஏற்கெனவே நம்ம இந்தியாவுல விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 45 பேர், இந்திய 'கிராண்ட் மாஸ்டர் பட்டம்' வாங்கியிருக்காங்க. எங்க புள்ள 46-வது 'இந்திய கிராண்ட் மாஸ்டர் பட்டம்' வாங்கியிருக்கான். பெற்றோரா நாங்க ஶ்ரீநாத்தின் சாதனையை நினைச்சுப் பெருமைப்படுறோம்" என புன்னகைக்கிறார்.

- கு.ஆனந்தராஜ்


டிரெண்டிங் @ விகடன்