‘அவரை பிரசாரத்துக்கு அனுப்ப வேண்டாம்!’ அதிரடிகாட்டிய சீனியர் அமைச்சர் #VikatanExclusive

டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சசிகலா அணியில் உள்ள மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவரை, பிரசாரத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று இன்னொரு சீனியர் அமைச்சர் சொன்ன விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற, சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் பம்பரமாகச் சுழன்று வேலைபார்த்து வருகிறார். பிரசார வாகனத்தைத் தவிர்த்து, நடந்துசென்று வாக்கு சேகரித்துவருகிறார். வ.உ.சி.நகர் பகுதியில் நடந்துசென்ற டி.டி.வி.தினகரனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களை நேரடியாகச் சந்திப்பதற்காக இந்த யுக்தியை டி.டி.வி.தினகரன் பயன்படுத்தி வருகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளிமாவட்ட கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கும் டி.டி.வி.தினகரன், 'இந்தத் தேர்தலில் என்னுடைய வெற்றி மட்டுமல்ல... நம்முடைய எதிர்காலமே அடங்கியிருக்கிறது' என்று சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். பிரசாரத்தில் ஈடுபடும்போது, மக்களின் குறைகளை உடனுக்குடன் செய்துகொடுக்க, இந்தத் தொகுதியிலேயே வீடு எடுத்து தங்க உள்ளேன் என்று சொல்வதை வாடிக்கையாகவைத்துள்ளார். தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகில் உள்ள டி.டி.வி.தினகரனின் தேர்தல் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி முக்கிய பணிகளை மேற்கொண்டுவருகிறார். நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரத்துக்கான வாகனம், பேசும் இடம் ஆகியவற்றை ஒதுக்குவதில் அவர் பிஸியாக இருக்கிறார். நட்சத்திரப் பேச்சாளர் சரவணன், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியாமல் நேற்று மாலை தாமதமாக வந்துள்ளார். உடனே வளர்மதி, சீக்கிரம் புறப்படுங்கள், உங்களுக்காக வாகனம் காத்திருக்கிறது என்று சொல்லி வாகனம் வரைச் சென்று வழியனுப்பிவைத்துள்ளார்.

வடசென்னை மாவட்ட நிர்வாகி அலுவலகத்தில், தேர்தல் பிரசார ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது, சீனியர் அமைச்சர்கள் பங்கேற்று சில ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். கூட்டத்தில், முன்னாள் சீனியர் அமைச்சர் ஒருவரை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது குறித்த பேச்சு எழுந்துள்ளது. சீனியர் அமைச்சர் அதற்கு தடைவிதித்துள்ளார்.

இதுகுறித்து கட்சியின் உள்வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவிவருகிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்துச்செல்ல போதிய சீனியர்கள் இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியினர் செயல்பட்டனர். சசிகலா, பொதுச் செயலாளரான பிறகு, நிலைமை மாறிவிட்டது. வடசென்னையில் உள்ள கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவர், சசிகலாவுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார். இதனால், அவர், பெரும்பாலான அமைச்சர்களையும் எம்எல்ஏ-க்களையும், மாவட்டச் செயலாளர்களையும் பெயர் சொல்லி அழைப்பதோடு, ஒருமையில் பேசுகிறார். அவரை எதிர்த்துப் பேச முடியாமல் அமைதியாக சம்பந்தப்பட்டவர்கள் சென்றுவிடுகின்றனர். 
 ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.காலத்தில் அ.தி.மு.க-வில் இருந்த முன்னாள் சீனியர் அமைச்சர் ஒருவருக்கு பிரசார பயணத்திட்டம் குறித்து பேசப்பட்டது. அப்போது, சீனியர் அமைச்சர் ஒருவர், குறுக்கிட்டு, 'அவரை பிரசாரத்துக்கு அனுப்ப வேண்டாம். வயதுமுதிர்ச்சி காரணமாக அவரால் பிரசாரத்தில் ஈடுபடமுடியாது' என்று தெரிவித்துள்ளார். இதனால், அவரது பிரசார பயணத்திட்டம் ரத்தாகிவிட்டது. இதுபோல சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. சசிகலா அணியினரால் ஒரங்கப்பட்டப்படும் சீனியர் மற்றும் கட்சியினர், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறலாமா என்ற யோசனையில் உள்ளனர்"என்றனர். 

டி.டி.வி.தினகரன்

யார் அந்த சீனியர் முன்னாள் அமைச்சர் என்று கேட்டதற்கு, "எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு புதியதாகத்  தொடங்கிய ஒருகட்சியில் சேர்ந்தார். அங்கும் அவருக்குரிய மரியாதை வழங்கப்படாததால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தார். எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமாசெய்தார். ஆனால், திடீரென ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். உடனடியாக அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தார். சசிகலா, சிறைக்குச் சென்ற பிறகு, அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்துள்ளது. அவரை முன்னிலைப்படுத்தினால், தன்னுடைய சீனியராட்டி பறிப்போய்விடும் என்று தற்போதைய சீனியர் அமைச்சர் ஒருவர் கருதுகிறார். இதனால்தான், முன்னாள் சீனியர் அமைச்சரைப் பிரசாரத்துக்குச் செல்ல அனுமதிக்கவில்லை"என்றார் சூசகமாக கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவர்.  


- நமது நிருபர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!