தவித்த விருதுநகர் மாணவனுக்கு மாஸ்கோவில் இருந்து நீண்ட உதவிக்கரம்! | Virudhunagar student got financial help from moscow

வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (31/03/2017)

கடைசி தொடர்பு:12:49 (31/03/2017)

தவித்த விருதுநகர் மாணவனுக்கு மாஸ்கோவில் இருந்து நீண்ட உதவிக்கரம்!

ஷ்ய விண்வெளி மையத்தில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தும், பணம் இல்லாமல் தவித்த ஏழை மாணவனின் பயணச் செலவுக்கான 2 லட்ச ரூபாயை ரஷ்ய வாழ் தமிழர் விஜயகுமார் ஏற்றுக் கொண்டுள்ளார். 

தவித்த மாணவனுக்கு ரஷ்யாவில் இருந்து கிடைத்த உதவி

சிவகாசி நகரம் பட்டாசுக்கு பெயர் போனது. வெடி விபத்து அடிக்கடி ஏற்படும். வெடி விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க ஜெயக்குமார் என்ற மாணவர் கண்டுபிடித்த கருவி, விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவையே கவர, தற்போது சிறுவன் மாஸ்கோ செல்லவிருக்கிறான். விருதுநகர் மாவட்டம் நாரணாபுரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும், ஜெயக்குமார் தந்தையை இழந்தவர். தாய் பட்டாசு ஆலையில் பணிபுரிகிறார். மாணவன் ஜெயக்குமாரின் உறவினர்கள் பட்டாசு ஆலை தீவிபத்தில் பலியாகி விட்டனர். அதனால், பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் கருவி ஒன்றை கண்டுபிடித்தான் ஜெயக்குமார். நாரணாபுரம் பள்ளி ஆசிரியர் கருணைதாசும் மாணவனுக்கு ஊக்கமளித்தார்.

மாணவன் கண்டுபிடித்த கருவியை பட்டாசு ஆலையில் பொருத்தி விட்டால், அறையில் வெப்பம் அதிகமாவதைக் கண்டுபிடித்து விடும். எச்சரிக்கை மணி ஒலிக்கும். தீ விபத்து ஏற்பட்டால், அந்தக் கருவியே தீயை அணைக்க மண்ணைக் கொட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அண்மையில், சென்னை ரஷ்ய தூதரகத்தில் 'ஸ்பேஸ்கிட்ஸ்' நிகழ்ச்சி நடைபெற்றது. இளம் விஞ்ஞானிகளைத் தேர்வு செய்து, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி அளிப்பதுதான் 'ஸ்பேஸ் கிட்ஸ் நிகழ்ச்சியின் நோக்கம். 

ரஷ்யா செல்லும் மாணவன் ஜெயக்குமார்

ஜெயக்குமாரின் கண்டுபிடிப்பு நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் கவர்ந்தது. இறுதிக்கட்டத் தேர்வு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா முன்னிலையில் நடைபெற்றது. அதில், 'உங்களுக்கு விஞ்ஞானியாக ஆசை... ஆனால், பெற்றோர் டாக்டராக வேண்டும்' என்று நிர்பந்திக்கின்றனர். 'நீங்கள் என்ன செய்வீர்கள்' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சிறுவன் ஜெயக்குமார்,  'எங்க ஊர்ல டாக்டர் குப்புசாமினு ஒருத்தர் இருக்காரு... அவரை உங்களில் யாருக்காவது தெரியுமா... அல்லது டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் என்கிற விஞ்ஞானியைத் தெரியுமா?'. டாக்டரானா ஒரு ஊருக்குத்தான் சேவை செய்ய முடியும். விஞ்ஞானியான மனித குலத்துக்கே சேவை செய்யலாம் என பெற்றோரை சமாதானப்படுத்துவேன் ' என்று பதில் அளித்தான். மாணவன் பதிலைப் பார்த்து விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா வியந்து போனார்.

இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் ஜெயக்குமார்,  மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டான். ஏப்ரல் 24-ம் தேதி முதல் மே1-ம் தேதி வரை 8 நாட்கள் மாஸ்கோவில் சிறுவனுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.ஆனால், ரஷ்யா செல்வதற்கு சுமார் 2 லட்சம் தேவைப்படும். மாணவனோ ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். மாணவனின் நிலைகுறித்து அவனது ஆசிரியர் கருணைதாஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த ரஷ்ய வாழ் தமிழரான விஜயகுமார் ஆசிரியர் கருணைதாசை தொடர்பு கொண்டுள்ளார். இதில் விஷேசம் என்னவென்றால், விஜயகுமாரும் நாரணாபுரத்தைச் சேர்ந்தவர்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யாவில் செட்டில் ஆகி விட்டவர். அங்கே கண் மருத்துவக் கருவிகள் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார், கருணைதாஸை தொடர்பு கொண்ட, விஜயகுமார், 'மாணவனின் பயணச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஊர் மாணவன் ரஷ்யா வருவதற்கு உதவி செய்யும் வாய்ப்பை எனக்குத் தாருங்கள்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், உடனடியாக 2 லட்ச ரூபாயையும் அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆசிரியர் கருணைதாசும் மாணவன் ஜெயக்குமாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மாணவனின் ரஷ்ய பயணத்துககுத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் கருணைதாஸ் செய்து வருகிறார். 

மாணவனுக்கு உதவிய ரஷ்யத் தமிழர் விஜயக்குமார்

மாணவனுக்கு உதவிய விஜயகுமாரைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “மற்ற நாடுகள் மாதிரி ரஷ்யால தமிழர்கள் அதிகம் வசிக்க மாட்டாங்க. மாஸ்கோல மொத்தமே 60 குடும்பத்தான் இருக்கும். இப்போதான் படிக்கிறதுக்கு நிறைய தமிழ் மாணவர்கள் மாஸ்கோவுக்கு வர்றாங்க. தமிழ்நாட்டுல இருந்து யாராவது வந்தாலே எங்களுக்கு சந்தோஷமா இருக்கும். என்னோட மனைவிதான் ஃபேஸ்புக்ல ஜெயக்குமார் பற்றி படிச்சுட்டு சொன்னாங்க. அதுவும் எங்க ஊரு பையன் ரஷ்ய விண்வெளி மையத்துக்கு பயிற்சிக்கு தேர்வுனதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பணம் இல்லாம அவன் இத்தகயை அருமையான வாய்ப்பை இழந்துடக் கூடாதுனு நினைச்சேன். அதனாலத்தான் உடனடியா பணம் அனுப்பி வச்சேன். மாஸ்கோவுக்கு சிறுவன் வரும்போது, அவனுக்கு எல்லாவிதமான உதவியும் செய்யத் தயாராக உள்ளோம். ரஷ்ய தமிழ்ச் சங்கத்துல சின்ன விழாவுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். ஜெயக்குமார் மாதிரி நாடு முழுவதும் ஏராளமான திறமை வாய்ந்த சிறுவர்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும்'' என்றார். 

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்