வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (31/03/2017)

கடைசி தொடர்பு:16:12 (31/03/2017)

‘சசிகலா நீக்கினார்... டி.டி.வி.தினகரன் சேர்த்தார்!’ இது, அ.தி.மு.க. கலாட்டா

ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக்

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதும், ஜெ.எம்.பஷீர் என்பவரை நீக்கினார். அவர், டி.டி.வி.தினகரனுக்காக தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அ.தி.மு.க-வில் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். அடுத்து, சசிகலாவுடன் ஏற்பட்ட அதிகார மோதலால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதிய அணியை உருவாக்கினார். இந்தச் சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், சசிகலா அணி வேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் டி.டி.வி.தினகரன் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில், வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக,  சசிகலா பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதும் நீக்கப்பட்ட ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக், ஆர்.கே.நகர் தொகுதியில் படுபிஸியாக வாக்கு சேகரித்துக்கொண்டு இருந்தார். எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேனுடன் இணைந்து, பிரசார பிட்நோட்டீஸைக் கொடுத்த ஜெ.எம்.பஷீரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக்

உங்களைக் கட்சியிலிருந்து சசிகலா நீக்கினாரே... மீண்டும் கட்சியில் சேர்ந்துவிட்டீர்களா?

 “என் மீது உள்ள காழ்ப்புஉணர்ச்சி காரணமாக, கட்சியின் தலைமைக்கு தவறான தகவல்களைச் சிலர் கொடுத்துவிட்டனர். அதன்படி சின்னம்மா, என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். கட்சி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்ததோடு, என்தரப்பு விளக்கத்தையும் தெரிவித்தேன். உடனே, என்னை தேர்தல் பணிகளைச் செய்யுமாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். என்னை மீண்டும் கட்சியில் சேர்த்த அறிவிப்புக்காகக் காத்திருக்கிறேன். நான் என்றுமே அம்மாவின் விசுவாசிதான்.”  

உங்கள் மீது கார் மோசடி வழக்கு உள்ளதே?

“அந்த மோசடி வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஜாமீனில் வெளியில் வந்துள்ளேன். காரை வாங்கியவருக்கும் அதை விற்றவருக்கும் உள்ள பிரச்னையில், எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. தற்போது, புகார் கொடுத்தவர், வழக்கைத் திரும்ப வாபஸ் பெற்றுவிடுவதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் நீதிமன்றம்மூலம் இந்த வழக்கு தள்ளுபடியாகிவிடும்.” 

அ.தி.மு.க. உள்கட்சிப் பூசலால், இரண்டு அணிகள் உருவாகியுள்ள நிலையில்... டி.டி.வி.தினகரனின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும்?

 “இந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, பெரும்பாலான முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அவருக்குக் கிடைத்தன. அப்போது, தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட சமுதாயத்தின் முன்னணி கட்சி நிர்வாகிகள், ஒற்றுமையாக பிரசாரத்தில் ஈடுபட்டோம். அதுபோல தற்போது, தமிழ்மகன் உசேன் தலைமையில், பள்ளிவாசலுக்குச் சென்று, ஜமாத் தலைவர்களைச் சந்தித்து தொப்பி சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வருகிறோம். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோரின் உண்மை விசுவாசிகள் அனைவரும் சசிகலாவை ஆதரித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்துகூட எனக்கு அழைப்பு வந்தது. இரட்டை இலைச் சின்னம்  முடக்கப்பட்டதுக்கு, ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம். இந்தத் தேர்தலில், டி.டி.வி.தினகரன் நிச்சயம் வெற்றிபெறுவார்.”

- எஸ்.மகேஷ்


டிரெண்டிங் @ விகடன்