சிறுமிக்கு அளித்த வாக்குறுதியை நிதிதிரட்டி நிறைவேற்றிய உம்மன் சாண்டி! | Oommen Chandy fulfils his promise made to a little girl

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (31/03/2017)

கடைசி தொடர்பு:15:46 (31/03/2017)

சிறுமிக்கு அளித்த வாக்குறுதியை நிதிதிரட்டி நிறைவேற்றிய உம்மன் சாண்டி!

கேரளத்தில் உம்மன் சாண்டி முதல்வராக இருந்த சமயம். ஆட்சி முடியும் தருவாயில் கோழிக்கோடு அருகே, நடக்காவு என்ற கிராமத்தில் ஒரு அரசு விழா. விழாவில் பங்கேற்ற உம்மன் சாண்டி,  நிகழ்ச்சி முடிந்து, மேடையை விட்டு இறங்கி காரில் ஏற சென்று கொண்டிருந்த போது, "உம்மன்சாண்டி" என்று ஒரு குரல் கேட்டது.  திரும்பி பார்த்தால்... பள்ளி சிறுமி ஒருவர் நின்று கொண்டு இருந்தார்' பதற்றத்தோடு அந்தச் சிறுமியைக் கூப்பிட்டு  உம்மன்சாண்டி விசாரிக்க, சிறுமி சொன்ன புகார் சற்று வித்தியாசமாக இருந்தது.

வீட்டுச் சாவியை அளிக்கும் உம்மன் சாண்டி

'எனக்கு கிருஷ்ணானு ஒரு கிளாஸ்மேட் இருக்கிறான். எங்க கிளாஸ்ல எல்லாத்துக்கும் சொந்த வீடு இருக்குது. ஆனா, கிருஷ்ணாவுக்கு மட்டும் சொந்த வீடு இல்ல. அவனுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுப்பீங்களா உம்மன் சாண்டி'  என்று  கள்ளம் கபடமில்லாமல் அந்த சிறுமி கேட்க, வாய்விட்டே சிரித்து விட்டார்  உம்மன்.  அதே இடத்தில் கிருஷ்ணாவுக்கு சொந்த வீடு கட்ட 3 லட்ச ரூபாயையும் வழங்க உத்தரவிட்டார். சிறுமியைப் பார்த்து, 'இப்போ உனக்கு சந்தோஷமானு' கன்னத்தைக் கிள்ளிவிட்டு புறப்பட்டார் உம்மன் சாண்டி. மாநில முதல்வரையே பெயர் சொல்லி அழைத்து, தனது தோழனுக்கு உதவி செய்ய வைத்த சிறுமியின் பெயர் ஷிவானி. 

தொடர்ந்து, கேரள சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு, ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால், உம்மன் சாண்டியின் உத்தரவு காற்றில் பறந்தது. கிருஷ்ணாவின் பெற்றோருக்கு  நிதி கிடைத்தபாடில்லை. ஆனால், உம்மன் சாண்டியோ சிறுமி ஷிவானிக்கு தான் அளித்த வாக்குறுதியை மறக்கவில்லை. கேரள அரசு, நிதி வழங்கவில்லை என்றாலும் அவரே ஷிவானியின் தோழன் கிருஷ்ணாவுக்கு வீடு கட்ட நிதி திரட்டத் தொடங்கினார். உம்மன் சாண்டியின் முயற்சியைக் கேள்விப்பட்டு பி.சி.தாகீர் என்ற தொழிலதிபர் ரூ.2 லட்சம் வழங்கினார். முகமது ஷபி என்ற மற்றொருவர் ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார். திரண்ட நிதியை கிருஷ்ணாவின் பெற்றோரிடம் உம்மன் சாண்டி வழங்கினார். 

பின்னர் நடக்காவு கிராமத்தில் கிருஷ்ணாவுக்கு வீடு கட்டவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. நடக்காவு தொடக்கப்பள்ளி முதல்வர் ரோஸ்மேரி,  குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். நடக்காவு கிராமத்தைச் சேர்ந்த மக்களும் கிருஷ்ணாவின் சொந்த வீடு கனவை நனவாக்க  முடிந்த நிதியை அளித்தனர். கடந்த அக்டோபர் மாதம் வீடு கட்டும் பணிகள் தொடங்கின. சுமார் நாலரை  மாதத்தில் வீடு கட்டும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்தது. நான்கு படுக்கை அறைகள், பிரமாண்டமான ஹால், கிச்சன் வசதியுடன் நடுக்காவு கிராமத்தில் தற்போது கிருஷ்ணாவின் வீடு கம்பீரமாக எழுந்து நிற்கிறது.அதோடு, ஏழ்மை நிலையில் உள்ள கிருஷ்ணாவின் குடும்பத்துக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில், மாடி அறைகளை வாடகைக்கு விடுமாறு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.  

கிருஷ்ணா வீட்டின்  புதுமனைப் புகுவிழா கடந்த புதன்கிழமை நடந்தது. நிகழ்ச்சியில்  உம்மன் சாண்டியும் பங்கேற்றார். குத்துவிளக்கேற்றி வைத்தததுடன், வீட்டுச் சாவியை கிருஷ்ணாவின் பெற்றோர், சுஜீஸ் மற்றும் அனீஷாவிடம் அளித்தார். தனது நண்பன் கிருஷ்ணா, பெற்றோருடன் புதிய வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பதை பார்த்து ஷிவானியின் கண்களின் ஆனந்தக் கண்ணீர். தனது வேண்டுகோளை நிறைவேற்றிய உம்மன் சாண்டியின் காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டாள் ஷிவானி. 

- எம்.குமரேசன்

PHOTO :MANORAMA
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்