எம்.ஜி.ஆர் சமாதிக்கு வைகோ சென்றது ஏன்? | This Is Why Vaiko Went to MGR Memorial!

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (31/03/2017)

கடைசி தொடர்பு:18:52 (31/03/2017)

எம்.ஜி.ஆர் சமாதிக்கு வைகோ சென்றது ஏன்?

சமாதி (எம்.ஜி.ஆர்.)

ந்தாரை வாழவைக்கும் அன்னையாக விளங்கும் சென்னையில், அதன் செல்லக் குழந்தையாக இருந்து அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் மெரினா கடற்கரைக்கு தனிப்பங்கு உண்டு. இது, 'சென்னைப் பெருநகரத்தின் நுரையீரல்' என அழைக்கப்படுவதுடன், நகரின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. உலகின் இரண்டாவது மிக நீளமானக் கடற்கரையைக் கொண்டு திகழும் மெரினா பீச், சென்னையின் பொழுதுபோக்கு அம்சமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இதற்குக் காரணம், மெரினா கடற்கரையில்தான் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகளும், பல தலைவர்களின் சிலைகளும் அமைந்துள்ளன. இவைதவிர மாநகராட்சி சார்பில் சிறுவர்களுக்கான நீச்சல் குளம் மற்றும் கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியனவும் இடம்பெற்று கூடுதல் சிறப்புச் சேர்க்கின்றன.

பிரபலமடைந்த மெரினா!

கடற்கரையில் வீசும் காற்றால் தாலாட்டப்பட்டுக் கண்ணுறங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர்களின் சமாதிகளைப் பார்க்க, மக்கள் கூட்டம் ஒருபுறம் தினந்தோறும் படையெடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் பொதுமக்கள், குழந்தைகள், காதலர்கள் என ஒரு கூட்டம் கடற்கரை மணலில் களிப்புறுகின்றனர். இதனாலேயே மெரினா பீச், தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்திருக்கிறது. சென்னைக்கு வந்திறங்கும் பலரும் மெரினாவைப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள் என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட மெரினாதான், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, வரலாற்றில் அதிக அளவில் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. 

ஜல்லிக்கட்டுப் போராட்டம்

வெற்றிக்கு மூலகாரணம்!

ஆங்கிலேயரை எதிர்த்து மகாத்மா காந்தி கையிலெடுத்த சத்யாகிரக அறப்போராட்டத்தினால், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதேபோன்று, தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த ஜனவரி மாதத்தில் இளைஞர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்துக்கும் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு மூலகாரணமாக இருந்தது மெரினா. ஆனால், அந்த வெற்றியைச் சுவைக்க வேண்டிய நேரத்தில்தான், போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திச் சிறையில் அடைத்தது. இதனால், 'அந்தப் பகுதியில் அப்போது இனிமேல் போராட்டம் நடத்தக்கூடாது' என அறிவிக்கப்பட்டதுடன், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, மெரினாவைப் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் சிலர், அண்மையில் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தினர். இப்படிச் சென்றுகொண்டிருக்கும் மெரினா வரலாற்றின் பதிவுகளில்தான், கீழ்வருவனவும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

தமிழக அரசியலில் மாற்றம்!

ஜெயலலிதா மறைந்து நான்கு மாதங்கள் முடிந்திருக்கும் நிலையில், 'அண்ணன் எப்போ சாவான்... திண்ணை எப்போ காலியாகும்' என்ற முதுமொழிக்கு ஏற்ப, தமிழக அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்துள்ளன. அந்தக் கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், பணத்தால் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியையும், கட்சியையும் நிர்வகிக்க முயலுகையில், அதிலிருந்து வெளியேறியது ஓர் அணி. கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி அன்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு அமர்ந்து நாற்பது நிமிடங்கள் தியானம் மேற்கொண்டார். அதன்பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் அளித்த பேட்டி, தமிழக அரசியலில் திருப்புமுனையானது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சசிகலாவும், ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, முதல் முறையாகக் கட்சி அலுவலகத்தில் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கினார்.

ஜெ. சமாதியில் ஓ.பி.எஸ்...

மன்னிப்புக் கடிதம்!

''கட்சியிலும், ஆட்சியிலும் தனக்குப் பங்கு வேண்டாம்; என்றும் தங்களுக்குச் (ஜெ-வுக்கு) சேவை செய்யவே நான் இருக்கிறேன்'' என்று கடந்த 2012-ம் ஆண்டு, மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்த சசிகலா, ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற நினைத்தார். அதற்குள், ஒருபுறம் அணியில் பிளவு; மறுபுறம் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர... சிறைக்குச் சென்றார் சசிகலா. சிறைக்குச் செல்லும் முன், ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அடித்துச் சத்தியம் செய்தார்.

ஜெ. சமாதிக்குப் படையெடுப்பு!

இதையடுத்து, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகச் சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதுபோல், முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும் அங்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், ஜெ-வின் அண்ணன் மகளான தீபாவும் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்துடன், அரசியல் களத்திலும் கால் பதிக்கத் தொடங்கினார். இவருடைய கணவர் மாதவனும், ஜெ-வின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுப் புதுக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். சமீபத்தில் நடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர்  டி.ஜெயக்குமார், தான் தாக்கல் செய்யவிருந்த பட்ஜெட்டை, ஜெ. சமாதிக்கு எடுத்துச் சென்று, அங்குவைத்து வணங்கிய பின்னரே சட்டசபைக்கு வந்தார்.

ஜெ. சமாதியில் சசிகலா...

இதற்கு, தி.மு.க தரப்பில் கடும் விமர்சனம் எழுந்தது. தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கும் தீபா, டி.டி.வி.தினகரன், மதுசூதனன் ஆகியோர் மீண்டும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இப்படி அ.தி.மு.க-வினர் பலரும் ஜெயலலிதா சமாதிக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, நேற்று (30-03-17) திடீரென எம்.ஜி.ஆர் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு அரசியல்வாதிகள் படையெடுப்பது மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

''தண்டனை கிடைத்தது!''

''அம்மா சமாதியில் அமர்ந்து ஓ.பி.எஸ் தியானம் செய்ததால்தான், அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அதுமுதல், சசியின் கூட்டுக்குத் துணை போகாமல், அவர் வெளியேறியதால் இன்றும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர், அம்மாவின் உண்மையான விசுவாசி என்று பேசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால், அம்மா கூடவே இருந்த சசிகலாவுக்குக் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்ததால், தக்க தண்டனை கிடைத்தது. இதற்கெல்லாம் காரணம், ஜெயலலிதாவின் ஆன்மாதான் எனக் கருதப்படுகிறது. தீபாவும் அங்கு சென்று தியானம் செய்த பிறகுதான், அவருக்கான அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளது. எனினும், எல்லாவற்றுக்கும் அம்மா சமாதிக்குச் செல்வது நல்லதல்ல. இது, தற்போது புது ட்ரெண்டாகி வருகிறது. தொட்டதற்கு எல்லாம் அம்மா சமாதிக்குச் செல்லும் அரசியல்வாதிகள், நாளை கட்சியிலோ... ஆட்சியிலோ இல்லாவிட்டால், அந்தப் பக்கம் செல்வார்களா எனத் தெரியவில்லை'' என்கின்றனர் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள்.

எம்.ஜி.ஆர். சமாதியில் வைகோ

''அ.தி.மு.க-வினர் கண்டுகொள்ளவில்லை!''

ஆனால் ம.தி.மு.க நிர்வாகிகளோ, ''அ.தி.மு.க-வை ஆரம்பித்த எம்.ஜி.ஆருக்கு, இது நூற்றாண்டு விழா. அந்தக் கட்சியால் வளர்ந்தவர்களும், வாழ்ந்தவர்களும் இந்த விழாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இன்று, அந்தக் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் சுயநலத்துக்காகவே பாடுபடுகின்றனர். இதனால்தான் எம்.ஜி.ஆரைப் போற்றும்வகையில், அவரது நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அதற்கான விழாவைக் கொண்டாடியிருக்கிறார் வைகோ'' என்கின்றனர்.

சமாதிக்குச் சென்று தியானம் மேற்கொள்பவர்கள், அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைத் திறமையுடனும், நேர்மையுடனும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க-வின் அனைத்துத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. 

- ஜெ.பிரகாஷ்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்