வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (01/04/2017)

கடைசி தொடர்பு:16:31 (01/04/2017)

இவர்கள் எதிர்காலம் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கையில்!

ஆர்.கே.நகரில் ஸ்டாலின்

சென்னை ஆர்.கே நகர்த் தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க அம்மா அணி, அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி மற்றும் தி.மு.க-வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமைந்துள்ளது. தி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு முதன்முதலாக எதிர்கொள்ளும் இடைத்தேர்தல் இதுவே.

தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே பொதுவாக ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்ற வரலாறு சமீபகாலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி ஆளுங்கட்சியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்கள் அனைத்திலும் ஆளும்கட்சியே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால், இப்போது நடைபெறவுள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சற்றே வித்தியாசமானது. நினைத்ததை செய்து காட்டும் போர்க்குணம் கொண்ட ஜெயலலிதா மறைவுக்குப் பின், அந்தக் கட்சி இரண்டு அணிகளாக உடைந்து, ஜெ-வின் அண்ணன் மகள் தீபா ஒரு அணி ஆக மொத்தம் மூன்று அணிகளாக அந்தக் கட்சி தேர்தலைச் சந்திக்கிறது.

அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே. சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்க...அந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனே வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். ஆர்.கே நகரில் அவருடன், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவருக்குத் தேர்தல் வேலை செய்ய, 200-க்கும் மேற்பட்டோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

சிறிய தொகுதியாக இருந்தாலும், மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட ஆர்.கே நகரின் சின்னச் சின்ன சந்துகளுக்கும் ஒரு பொறுப்பாளரை அ.தி.மு.க அம்மா அணியினர் நியமித்துள்ளனர். அமைச்சர்களுடன் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் என பெரியதொரு பட்டாளமே ஆர்.கே நகரை ஆக்கிரமித்துள்ளது. அ.தி.மு.க-வில் மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தனி அணியாகப் பிரிந்து செயல்படும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 'அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா' அணியை உருவாக்கி களம் காண்கிறார். இதனால் ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரனுக்கு இடையே யார் 'ஒரிஜினல் அ.தி.மு.க' என்பதை இந்தத் தேர்தலில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், வெற்றிபெற்றால்தான், கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் ஆர்.கே நகரில் முகாமிட வைத்து தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார். காலை முதல் இரவு வரை ஆர்.கே நகர் தொகுதி முழுவதும் அவர் சுற்றி வருகிறார் டி.டி.வி தினகரன். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த ஆர்.கே. நகர் அ.தி.மு.க நிர்வாகிகளும் அவர் பக்கம் நின்று தேர்தல் வேலையை சுறுசுறுப்பாக கவனித்து வருகின்றனர். 

ஆர்.கே.நகரில் ஸ்டாலின்

அதுமட்டுமல்லாமல், மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன், பொன்னையன், பாண்டியராஜன், மைத்ரேயன் உள்ளிட்டோரும் ஆர்.கே.நகரில் தொடர்ந்து முகாமிட்டு தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். பிரசாரத்திற்காக தினந்தோறும் வரும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு அளிக்கவும், தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் தனி டீம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்வதுடன், பம்பரமாகச் சுழன்று தங்கள் அணியின் வெற்றிக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் 12 எம்.எல்.ஏ-க்கள், 2 மாவட்ட செயலாளர்களும் டி.டி.வி.தினகரனுக்கு போட்டியாக வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். அம்மாவின் மரணத்துக்கு நீதி வழங்கும் தேர்தல் என்று மக்கள் மனதைத் தொடும் வகையில் ஜெயலலிதாவின் மரணத்தை மர்மங்களை சொல்லிச் சொல்லியே வாக்குக் கேட்கின்றனர்.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால்தான் அ.தி.மு.க-வின் உண்மையான தலைமை தாங்கள்தான் என்பதை ஓ.பி.எஸ் அணியால் நிரூபிக்க முடியும். அதனால், அவர்களுக்கும் இந்த தேர்தல் அக்னிப் பரீட்சையாக அமைந்துள்ளது. அதுபோலவே, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொடங்கி, ஆர்.கே. நகரில் போட்டியிடும் ஜெ.தீபாவுக்கும் இந்தத் தேர்தல், அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.

தீபா

இரட்டை இலை சின்னம் இல்லாதது, அ.தி.மு.க மூன்றாக பிரிந்து தேர்தலைச் சந்திப்பது போன்றவை தங்களுக்கு மிகப்பெரிய சாதகமான விஷயம் என தி.மு.க கருதுகின்றது. செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், அவர் சந்திக்கும் முதல் (இடைத்) தேர்தல் இது. தனது தலைமையை, அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல் என்பதால், ஸ்டாலினும் மிகத் தீவிரமாக தேர்தல் வேலையில் இறங்கியுள்ளார். "கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து, இடைத்தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்" என்கின்றனர் தி.மு.க மூத்தத் தலைவர்கள். 

தே.மு.தி.க, பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் போட்டி என்னவோ தி.மு.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அணிகளுக்கு இடையேதான் உள்ளது. மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோரின் எதிர்காலம் ஆர்.கே நகர்த் தொகுதி மக்கள் கையில்தான் இருக்கிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்