"இன்று போலியோ முகாம்... மறக்காதீர்கள் பெற்றோர்களே!"

போலியோ சொட்டு மருந்து


போலியோ நோய் ஒழிப்புக்காக ஆண்டுதோறும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சொட்டு மருந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தமிழகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. சொட்டு மருந்து கொடுப்பதன் அவசியம் மற்றும் கொடுக்கும்போது பெற்றோர் கவனிக்கவேண்டிய விஷயங்களைச் சொல்கிறார், அரசு குழந்தைகள் நல மருத்துவரான கோபாலகிருஷ்ணன். 

"மாசுபட்ட உணவு, நீர் மற்றும் சுகாதாரமற்ற முறையில் பொதுவெளியில் மலம் கழிப்பது போன்ற பிரதான காரணங்களால் நோய்த் தொற்று ஏற்பட்டு, போலியோ எனப்படும் டாக்டர் கோபாலகிருஷ்ணன்இளம்பிள்ளைவாத நோய் உண்டாகிறது. முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்த போலியோவை ஒழிக்க, 1995-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் முறையாக அனைத்து வளர் இளம் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து கொடுக்கப்படுகிறது. இதனால், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்திலும், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா முழுவதிலும் எந்த ஒரு குழந்தைக்கும் போலியோ பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. அரசும் மக்களும் இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்படுவதாலேயே, இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. 

ஆண்டுதோறும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுக்கப்படும். ஆனால், தமிழகத்தில் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதால், ஒரு மாதம் கழித்து தற்போது சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 2 மற்றும் 30-ம் தேதிகளில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் குழந்தைகளுக்குச் சொட்டு மருத்து வழங்கப்படும். பிறந்த குழந்தைகள் முதல் 60 மாதக் குழந்தைகள் (5 வயது) வரை சொட்டுமருந்துக் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து, ஆரோக்கியமாக இருப்பார்கள்'' என்கிற டாக்டர், சொட்டு மருந்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

அதிகமான காய்ச்சல் உள்ள குழந்தைகள், உள்நோயாளியாக மருத்துவமனையில் அல்லது வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள், ஏதாவது ஒரு பிரச்னைக்காக அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் குழந்தைகள், அடிக்கடி வலிப்பு வரும் குழந்தைகள், நரம்புத் தளர்ச்சி உள்ள குழந்தைகளுக்குக் கட்டாயம் சொட்டு மருந்து கொடுக்கக் கூடாது. ஒருவேளை உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்க விருப்பப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். குழந்தைகள் சாப்பிட்ட உடனே சொட்டு மருந்து கொடுப்பதையும், சொட்டு மருந்து கொடுத்த பின்னர் 20 நிமிடங்களுக்கு எவ்வித உணவுப் பொருட்களையும் குழந்தைக்குச் சாப்பிடக் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பின்னர் எப்போதும் போல செயல்படலாம். 

பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாத நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இருக்கும் முக்கியப் பகுதியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சுகாதாரத் துறையினர் தயார்நிலையில் இருப்பார்கள். அந்தப் பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று சொட்டு மருந்து ஊற்றிக்கொள்ளலாம். ஒருவேளை நாளை சொட்டு மருந்து கொடுக்கமுடியாமல் போனால், அடுத்த ஐந்து நாட்கள் வரை வீடு வீடாக மருத்துவக் குழுவினர் சென்று, விடுபட்ட குழந்தைகளுக்குச் சொட்டுமருந்து கொடுப்பார்கள்'' என்கிறார் டாக்டர் கோபாலகிருஷ்ணன். 

முடிந்தவரை நாளையே உங்கள் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுத்து, தேவையில்லாத அலைச்சலைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்" 

- கு.ஆனந்தராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!