வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (01/04/2017)

கடைசி தொடர்பு:07:59 (02/04/2017)

மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மீது மெரினா போராட்டக்காரர்கள் புகார்!

சென்னை மெரினாவில் விவசாயிகளுக்காக கடலில் இறங்கி போராடிய இளைஞர்களை கீழ்த்தரமாக பேசிய மயிலாப்பூர் காவல்துறை ஆய்வாளர் மோகன் தாஸ் மீது காவல் ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Marina Protestors

டெல்லியில் தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதராகவும் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட முயன்ற இளைஞர்களுக்கு மெரினாவில் போராட அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கடலில் இறங்கிப்  போராடினர்.

சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, மயிலாப்பூர் சமூக நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்ட அவர்களிடம், மயிலாப்பூர் ஆய்வாளர் மோகன் தாஸ், தகாத வார்த்தைகளில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து போராட்டக்காரர்கள், சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளனர். மேலும், தங்களை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு மாணவர்-இளையோர் கூட்டமைப்பு சார்பில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதற்கிடையே, இளைஞர்கள் சார்பில் முறையான அனுமதி பெற்று போராட்டம் துவங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.