ஸ்டான்லி மருத்துவமனையில் பாதாள சாக்கடைப் பணியின்போது வட மாநில ஊழியர் பலி! | North indian Worker died in Stanley hospital during drinage cleaning work

வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (02/04/2017)

கடைசி தொடர்பு:11:09 (03/04/2017)

ஸ்டான்லி மருத்துவமனையில் பாதாள சாக்கடைப் பணியின்போது வட மாநில ஊழியர் பலி!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், பாதாள சாக்கடைப் பணிகளில் ஈடுபட்டிருந்த வட மாநில பணியாளர், மண் சரிந்து உயிரிழந்தார்.

Stanli hospital

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பாதாள சாக்கடையைச் சுத்தம்செய்யும் பணி நடைபெற்றது. வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் பணியைச் செய்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மணல் சரிவு ஏற்பட்டதால், பணியில் இருந்த புலிசன் ஹிஸ்பு மற்றும் சிராஜுதீன் ஆகியோர் சரிவில் மாட்டிக்கொண்டனர். அப்போது,  அவர்களுக்கு உதவி செய்ய சக பணியாளர்களும் மேற்பார்வையாளர்களும்  அருகில் இல்லாததால், மண் சரிவிலிருந்து விடுபடப் போராடினர். இதையடுத்து, அவர்கள் குரல் கேட்டு வந்தவர்கள், இருவரையும் வெளியே எடுத்தனர். சிராஜுதீன் காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், புலிசன் ஹிஸ்புவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே இறந்துவிட்டார். விபத்துக்குள்ளான இருவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பணியின்போது அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என, தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, விபத்து நடந்த பகுதியைப் பார்வையிட்ட காவல்துறையினர், மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.