எடப்பாடி பழனிசாமிக்கு 4-வது இடம்தான்...! - இது தினகரன் போட்ட கணக்கு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி, மார்க்சிஸ்ட், தி.மு.க, அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சைகளையும் சேர்த்து மொத்தம் 62 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, 'ஸ்டார் பேச்சாளர்கள்" என்ற வகையில் ஒவ்வொரு கட்சிக்கும் 40 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும். அந்த வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஸ்டார் பேச்சாளர் என்று மொத்தம் 261 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

பி.ஜே.பி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேச வருகிறார் என்று அனுமதி வாங்கி இருக்கிறார்கள். தமிழக பி.ஜே.பி டெல்லி பார்வையாளர்கள் முரளிதர் ராவ், சந்தோஷ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை, ராஜ்ய சபா எம்.பி இல.கணேசன், முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர்கள் மோகன் ராஜுலு, வானதி சீனிவாசன் என்று 40 பேர் அனுமதி பெற்ற ஸ்டார் பேச்சாளர்களாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

தி.மு.க சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று 40 பேரும் தே.மு.தி.க சார்பில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஷ், ஏ.ஆர்.இளங்கோவன், பார்த்தசாரதி, ஆர்.உமாநாத், ஷாகிர் உசேன் என்று 40 பேருக்கு அனுமதி வாங்கி இருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் என்று 38 பேருக்கு ஸ்டார் பேச்சாளர் என்று தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளார்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட அக்கட்சி சார்பில் 20 பேருக்கு அனுமதி பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க அம்மா அணி சார்பில் டி.டி.வி. தினகரன் வேட்பாளராக போட்டியில் இருக்கிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்ய 40 ஸ்டார் பேச்சாளர்களுக்கு அனுமதி வாங்கி  இருக்கிறார்கள். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.பி வைத்திலிங்கம் ஆகியோருக்கு அடுத்ததாக 4-வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் இருக்கிறது. அ.தி.மு.க அம்மா அணி ஸ்டார் பேச்சாளர் லிஸ்ட்டில் முதல்வர் எடப்பாடிக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்த அணி சார்பிலும் 40 பேருக்கு அனுமதி பெற்றுள்ளனர். அதில் முதல் ஆளாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!