வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (03/04/2017)

கடைசி தொடர்பு:09:36 (03/04/2017)

“தமிழர்களை அழித்து ஒழிக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்படுகிறது” : சுப. உதயகுமார்

‘கூடங்குளம் அணு உலை விரிவாக்கப் பணிகளைக் கண்டித்து பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்படும்' என அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.

S. P. Udayakumar

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், 3-வது மற்றும் 4-வது அணு உலைகளை அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இந்த விரிவாக்கப் பணியை தடுக்கக் கோரி ஒருமித்த கருத்துக் கொண்ட அமைப்புகளுடன், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக பாளையங்கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பலரும், 'பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் உள்ள அணு உலை வளாகத்தில் கூடுதல் உலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது' என்பதை வலியுறுத்திப் பேசினார்கள். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், ''கூடங்குளத்தில் இயங்கி வரும் இரு அணு உலைகளையும் உடனடியாக மூட வேண்டும். அங்கு நடைபெற்று வரும் அணு உலை விரிவாக்கப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன், நெல்லை மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. ஆற்று நீரை குடி தண்ணீருக்கும் விவசாயத்துக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுப. உதயகுமார்எனவே, தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கக் கோரியும் கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதைக் கண்டித்தும் நெல்லையில் மே13-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும். அத்துடன், அணு உலையின் தீமைகளை விளக்கி மாநிலம் முழுவதும் தெருமுனைப் பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதோடு பொதுக்கூட்டங்களும் நடத்தப்படும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், இந்த வழக்குகள் காரணமாக, அவர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். எனவே, அந்த வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 

ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற பல்வேறு நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்தி தமிழர்களை அழித்து ஒழிக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதனால் இதுதொடர்பாக மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் பணிகளில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் செயல்படும். முதல் கட்டமாக, நெல்லை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து நெல்லை மாவட்டம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளோம். அணு உலைகளை எதிர்ப்பது, தாமிரபரணி நதியைக் காப்பது என்பது இனிமேல் எங்களது போராட்ட வியூகமாக இருக்கும்'' என்றார்.

- ஆண்டனிராஜ்


டிரெண்டிங் @ விகடன்