ஹைட்ரோகார்பன் திட்டம்: நெடுவாசலில் மீண்டும் போராட்டம்!

நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக, நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Neduvasal protest

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 21 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்த பின், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

குறிப்பாக, கடந்த மாதம் 22-ம் தேதி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, போராட்டக்குழுவினர் சந்தித்தனர். அப்போது, 'மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும்  செயல்படுத்த மாட்டோம்' என்று அவர் உறுதியளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்தத் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களுக்கு மார்ச் 27-ம் தேதி மத்திய அரசு கையெழுத்திட்டு, அனுமதி வழங்கியது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள்மீது நம்பிக்கை இல்லாததால் மீண்டும் போராட்டத்தைத் துவங்க உள்ளதாக, நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வரும் 6-ம் தேதி நம்மாழ்வார் பிறந்த தினத்தில், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுடன் கலந்தாலோசித்து, போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என, போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!