அன்று, செஃப்... இன்று, பிரபலங்கள் விரும்பும் யோகா மாஸ்டர்!

லாரா அபிஷேக்

வெளிநாட்டில் செஃப்பாக வாழ்க்கையைத் தொடங்கியவர், லாரா அபிஷேக். இன்று பிரபலங்கள் விரும்பும் யோகா மாஸ்டராக வலம்வருகிறார். யோகாமூலம்  இவர் அளிக்கும் சிகிச்சையைப் பெற, வெளிநாட்டிலிருந்தும் சென்னைக்கு  வருகின்றனர். 


 சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ள இந்த யோகா சென்டருக்கு, வெளிநாட்டினர் அதிகளவில் வந்து செல்கின்றனர். காலை முதல் மாலை வரை பரபரப்பாகவே காணப்படும் சென்டரில், யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. ரம்மியமான அந்தக் காலைப் பொழுதில், ஓம்... என்ற மந்திரச் சொல்லுடன் ஆரம்பமாகிறது பயிற்சி. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உற்சாகத்துடன் காணப்பட்டனர்.  அவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த மாஸ்டர் லாரா அபிஷேக்கிடம் பேசினோம்.


 "எனக்கு சொந்த ஊர் திருச்சி. துபாயில் செஃப்பாக பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒருநாள், என் கண்ணில் 'உடலே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற புத்தகம் தென்பட்டது. அதை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். படிக்கப் படிக்க, அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட ஒவ்வொரு தகவலும் என்னை ஈர்த்தது. அந்த யோகா புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பற்றிய விவரம் அறிய, புத்தகத்தை வெளியிட்ட விகடன் பிரசுரம் அலுவலகத்துக்கு வந்தேன். அவர்கள் கொடுத்த விவரப்படி,ஶ்ரீ கிருஷ்ணமாச்சாரி  மகன் டி.கே.வி.தேசிகாச்சாரியைச் சந்தித்து , அவரிடம் 10 ஆண்டுகள் யோகா கற்றுக்கொண்டேன். யோகா பயிற்சியில் எல்லோருக்கும் எல்லா வகையான யோகாவும் தேவை இல்லை. யார் யாருக்கு என்ன வேண்டுமோ, அந்தப் பயிற்சியை மட்டும் மேற்கொண்டால் போதும். நம்முடைய உடல்நலக் குறைப்பாட்டுக்கு மனசுதான் முக்கியக் காரணம். மனதை சரியாக வைத்துக்கொண்டால், எந்தவித பாதிப்பும் வராது. 


 உடல் நலம் பாதிக்கப்பட்டதும் சிகிச்சை பெறுகிறோம். உடனடியாக அதற்குத் தீர்வு கிடைத்தாலும், அது நிரந்தரமல்ல. ஆனால், யோகா பயிற்சிமூலம் கிடைக்கும் பயன்கள் நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும். யோகாவில், 'மூச்சே மூலிகை...காற்றே மருந்து'. இந்த அடிப்படையிலேயே இங்கு வருபவர்களுக்கு பயிற்சி எனும் சிகிச்சை அளிக்கிறோம். 

லாரா அபிஷேக்


 ஐந்து வயது முதல் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம்.  ஐந்து வயது முதல் 17 வயது வரையானவர்களுக்கு 'சிக்ஸலன கிரமம்' என்ற பயிற்சி அளிக்கப்படும். 17 வயது முதல் 25 வயது வரை 'ரக்ஸலனா கிரமம்' என்ற பயிற்சியும், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  'சிகிச்சைக் கிரமம்' என்ற பயிற்சி கொடுக்கப்படும். அனைத்து வயதினருக்கும் தேவையான பயிற்சியுடன் கூடிய சிசிக்சை அளிக்கப்படுகிறது.  உதாரணத்துக்கு, சாலிகிராமத்திலிருந்து வரும், 71 வயதான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் என்னிடம் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு, ரத்த அழுத்தம் குறையவே இல்லை. உணவுக் கட்டுப்பாடுடன் சில யோகா பயிற்சிகளைக் கொடுத்தேன். இப்போது, அவருக்கு ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கிறது. இந்தியர்களைவிட, வெளிநாட்டினருக்கு யோகா கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளது. ஜப்பான், கொரியா மற்றும்  ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் பெற்ற பயிற்சியை, அந்த நாட்டில் உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். இதுவே, யோகாவின் வெற்றி. 

லாரா அபிஷேக்


 இன்றைய காலகட்டத்தில், கம்ப்யூட்டர் முன்பு பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகம். நீண்ட நேரம் கம்ப்யூட்டரிலேயே பணியாற்றுபவர்களுக்கு தலைசுற்றல், கழுத்துவலி, முதுகுவலி ஆகியவை ஏற்படும். அவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். ஆனால், யோகாமூலம் அத்தகைய வலிகளுக்கு நிரந்தரத் தீர்வு கொடுக்கலாம். மேலும், உடல் கட்டமைப்பு, இளமை, உற்சாகத்துடன் இருக்க யோகா வழிவகைசெய்கிறது. நம்முடைய லைஃப் ஸ்டைல் மாற்றத்தால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதற்கு ஏற்ப யோகாவை மேற்கொண்டால், என்றுமே உற்சாகத்துடன் இருக்கலாம்" என்றார் உற்சாகமாக.

 உங்களிடம், பிரபலங்கள் பலர் யோகா கற்றுக் கொள்வதாகத் தகவல் உள்ளதே என்று கேட்டதற்கு, "ஆம்.என்றவர், அரசியல் கட்சியினர் மற்றும் பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கிறேன்''. என்றார். 

 

 


- எஸ்.மகேஷ் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!