வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (03/04/2017)

கடைசி தொடர்பு:20:55 (03/04/2017)

அரசியலுக்காக ஜல்லிக்கட்டு நடத்துகிறாரா புல்லட் மகேஸ்வரி?

மாணவர்களுடன் இணைந்து பொதுமக்கள், சமூக அமைப்புகள், சினிமாவில் உள்ள சில இயக்குநர்கள் எனப் பலரும் போராடி பெற்றுத்தந்ததுதான் ஜல்லிக்கட்டு. அலங்காநல்லூரில் பற்றிய ஜல்லிக்கட்டுத் தீ, மெரினா புரட்சியாக வெடித்து, டெல்லி செங்கோட்டையை கிடுகிடுக்க வைத்தது. கடைசி நேரத்தில் கல்லூரி மாணவர்கள் போலீஸாரின் லத்திக்கு ரத்தம் சிந்தி பெற்றுத் தந்த உரிமை அது. அப்படிப் போராடிப் பெற்றுதந்த உண்மையான ஆட்களை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டில் உள்ளேயே விடாமல் போலீஸ் விரட்டியடித்தது. இவர்களின் மனவேதனையைப் போக்கவும் போராட்டக்காரர்களைக் கௌரவப்படுத்தவும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த புல்லட் மகேஸ்வரி. சிவகங்கை மாவட்டம், சிராவயலில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருக்கும் அவரிடம் பேசினோம்...

புல்லட் மகேஸ்வரி''அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பார்க்க பாஸ் இருந்தும் எங்களை அனுமதிக்கவில்லை. உண்மையாகப் போராடியவர்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இது எங்களுக்கு மிகவும் மனவேதனையை அளித்தது. அதனால்தான், இப்படி ஒரு முயற்சியை எடுத்திருக்கிறோம். ஏன் அலங்காநல்லூரைத் தேர்ந்தெடுக்காமல் சிவகங்கை சிராவயல் என்று கேட்டார்கள். அலங்காநல்லூர் வாடிவாசல் சிறியது. அனுமதியும் கிடைக்கவில்லை. குறைந்தது ஐந்து லட்சம் பேர் ஒன்றுசேர இருக்கிறோம். அதற்கு ஏற்ற இடம் சிராவயல்தான். சிராவயல் வேலுச்சாமி அய்யா, அவருக்குச் சொந்தமான நூறு ஏக்கர் இடத்தை ஜல்லிக்கட்டு நடத்த வழங்கி இருக்கிறார். நிறையப் பேர் இந்த முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள்'' என்கிற மகேஸ்வரி, இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே ஜல்லிக்கட்டைப் பார்த்திருக்கிறாராம்.

புல்லட் மகேஸ்வரி

''என்னைப் போல ஜல்லிக்கட்டைப் பார்த்திராத பலரும் தமிழர் பண்பாட்டுக்காகக் களத்தில் இறங்கிப் போராடினார்கள். இவர்கள் எல்லோரும் நேரடியாக ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து காளைகளை கொண்டுவர அழைப்பு கொடுத்துள்ளோம். ஃபேஸ்புக் மூலமாக மாணவர்களை ஒன்று திரட்ட இருக்கிறோம். அந்தந்தப் பகுதிகளில் ஆரம்பம் முதல் போராடியவர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளோம். அவர்கள் அழைக்கப்பட்டு, கௌரவிக்கப்படுவார்கள். கடந்த மூன்று மாதங்களாக இதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம். மாவட்ட கலெக்டர் அனுமதிக்காகக் காத்திருந்தோம். மார்ச் இருபத்து ஏழாம் தேதி அனுமதி கிடைத்தது. ஜல்லிக்கட்டுக்காகக் குரல் கொடுத்த சினிமாத் துறையைச் சேர்ந்த கமலஹாசன், ஜி.வி.பிரகாஷ், விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி, அமீர், ராகவா லான்ஸ் போன்றவர்களையும் அழைக்க இருக்கிறோம். தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், எதிர்க் கட்சி தலைவர் என அரசியல் தலைவர்களையும் அழைக்க இருக்கிறோம்'' என்றார்.

'நீங்கள் தனிப்பட்ட முறையில் பெயர் வாங்குவற்காகவும், எதிர்கால அரசியலை நோக்கிச் செல்வதற்காகவுமே இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக சிலர் சொல்லுகிறார்களே...' என்றதற்கு நிதானமாகப் பதில் அளிக்கிறார்.

''அரசியலுக்கு வரும் எண்ணமோ, தகுதியோ எனக்கு இல்லை. அதற்கெல்லாம் இன்னும் நாள் இருக்கிறது. இது போராட்டக் களத்தில் இருந்த இளைஞர்களுக்கான பாராட்டு விழாதானே தவிர என்னுடைய சுய விளம்பரத்துக்கானது அல்ல. இதற்கான செலவுகள் எல்லாம் ஸ்பான்ஸார்கள் மூலம்தான் செய்கிறோம். குறைந்தது ஐம்பது லட்சம் செலவாகும் என்று திட்டமிட்டிருக்கிறோம். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கும் இனியும் யாராலும் இப்படி நடத்த முடியாது என்கிற அளவுக்கும் இந்த ஜல்லிக்கட்டு நடக்கும். பாராட்டு விழாவுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்படும். ஏப்ரல் முப்பது ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடக்கும். அடுத்த நாள் தொழிலாளர் தினம். எல்லோருக்கும் விடுமுறையாகவும் இருக்கும். எனவே, நாங்கள் எதிர்பார்க்கும் கூட்டம் நிச்சயம் வரும்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மகேஸ்வரி.

இது குறித்து சில மாணவ அமைப்புகளிடம் கேட்டதற்கு, ''மகேஸ்வரி ஏற்பாடு செய்திருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், நடந்த முடிந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அவரை கவுரவப்படுத்தவில்லை. மரியாதை செலுத்தவில்லை என்பதற்காக இப்படியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதே எங்களுக்குள் சில கேள்விகளை எழுப்புகிறது'' என்கிறார்கள்.

நல்ல விஷயம் சுய லாபங்கள் இன்றி நடந்தால் சரிதான்!

 

- தெ.பாலமுருகன்.
படங்கள். சாய்தர்மராஜ்


டிரெண்டிங் @ விகடன்