’அரசியல்வாதிகளின் அநீதிக்கு எதிராக கோபம் கொள்!’ இளைஞர்களை அழைக்கும் சகாயம் | Sahayam IAS calls youngsters to protest against political scams

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/04/2017)

கடைசி தொடர்பு:17:29 (03/04/2017)

’அரசியல்வாதிகளின் அநீதிக்கு எதிராக கோபம் கொள்!’ இளைஞர்களை அழைக்கும் சகாயம்

சகாயம்

.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை தலைவராகக் கொண்டு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது 'மக்கள் பாதை' என்னும் இயக்கம். இதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில், இறந்த விவசாயிகளின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கான தொகை மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சகாயம் வழங்கினார். இந்த நல உதவிகள் வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

விழாவில், கலப்பை, தறி, திண்ணை, திடல், மக்கள் மருந்தகம், நீரின்றி அமையாது உலகு, கூத்து, ஊன்றுகோல், குருதி ஆகிய அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த அமைப்புகள் விவசாயிகள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், கிராமப்புறங்களில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதற்காகவும் அமைக்கப்பட்டவை. இவ்விழா, 'தவறு செய்யும் அரசியல்வாதிகளைத் தட்டிக் கேட்க அனைத்து இளைஞர்களும் கோபம் கொள்ள வேண்டும்' என்ற அழைப்புடன் நடத்தப்பட்டது. 

தேவ சகாயம்

நிகழ்ச்சியில்,  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் விழாவில் பேசியபோது, "ஒரு காலத்தில் தமிழன் என்றாலே அனைவரும் தலைநிமிர்ந்து பார்த்தனர். ஆனால், இன்று கேவலமாகப் பார்க்கிறார்கள். இந்த நிலைக்குக் காரணம் ஊழல் செய்வதற்காகவே வாழ்ந்துவரும் நம் அரசியல்வாதிகள்தான். இதையெல்லாம் வேரறுக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். நமக்கு நல்ல அரசியல்வாதிகள் தேவை. தப்புகளைத் தட்டிக் கேட்கும் இளைஞர்கள் பட்டாளம் தேவை. ஒருதவறு சில கெட்டவர்களால் மட்டும் நடக்கவில்லை. பல நல்லவர்கள் அமைதியாக இருப்பதாலும் நடக்கிறது. நாட்டை வீணாக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஒன்றுபடுங்கள். ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது விவசாயத்துறையின் வளர்ச்சியாகும். நம் நாட்டில், விவசாயிகளே உயிரிழந்து கொண்டிருக்கும்போது விவசாயம் எப்படி வளர்ச்சி அடையும்? நம் மக்கள், சுயமரியாதையை இழந்து யாரவது இலவசம் கொடுப்பார்களா? என்று காத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இன்று நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள். இந்த சமூகத்தை மாற்ற வேண்டுமானால் இளைஞர்களால் மட்டுமே முடியும். மீண்டும் என் தமிழ்ச்சமூகம் தலைநிமிர வேண்டுமானால் அநீதிக்கு எதிராக போராட அனைவரும் தயாராகுங்கள்." என்றார். 

விழாவில் கலந்துக்கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசும்போது, "மக்கள் பாதை இயக்கமானது அரசியலுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. டெல்லியில் ஒரு மாதமாகப் போராடி வரும் விவசாயிகளை யாருமே கண்டு கொள்ளவில்லை. விவசாயிகள் அழிந்தால், அந்த நாடும் அழிந்துவிடும். விவசாயிகளே ஒரு நாட்டின் சிறப்புமிக்கவர்கள். ஆனால் அவர்களின் நிலைமை இன்று கவலைக்கிடமாக உள்ளது. மதுவாலும், சினிமாவாலும் சீரழிந்து கொண்டிருந்த என் தமிழ்ச் சமூக இளைஞர்கள், சமீப காலமாக மாபெரும் சாதனைகளைச் செய்து வருகிறார்கள். தவறைத்தட்டிக் கேட்கிறார்கள். ஒன்றாக இணைந்து போராடுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இளைஞர்களின் இந்தக் கோபம் போதாது. விவசாயிகளைக் காக்க நீங்கள் இன்னும் அதிகமாகக் கோபப்பட வேண்டும். உங்களின் 'அறக்கோபத்தைக்' கண்டு அரசியல்வாதிகள் பயம் கொள்ள வேண்டும். என் தமிழ்ச் சமூகம் மீண்டும் தலைநிமிர வேண்டுமானால் அது இந்த இளைஞர்களால் மட்டுமே சாத்தியம்." என்றார்.

'லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து' மட்டுமல்ல 'அநீதியைக் கண்டால் அறக்கோபம் கொள்' இனி இதுவும் இளைஞர்களின் வேத வாக்குதான்!

- ஜெ.அன்பரசன், படங்கள்: மீ. நிவேதன்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close