வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (04/04/2017)

கடைசி தொடர்பு:15:12 (04/04/2017)

சொத்து மதிப்பு முதல் கிரிமினல் வழக்கு வரை... ஆர்.கே.நகர் வேட்பாளர்களின் மறுபக்கம்! #VikatanExclusive

 

தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன்

ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மறுபக்கங்களை, அறப்போர் இயக்கமும்  ஜனநாயக சீர்திருத்த அமைப்பும் ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சொத்து மதிப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டு உதயம் முதலிடத்திலும், கிரிமினல் வழக்கில் தே.மு.தி.க.வேட்பாளர் மதிவாணன் முதலிடத்திலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க.வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், பா.ஜ.க.வேட்பாளர் கங்கைஅமரன், தே.மு.தி.க.வேட்பாளர் மதிவாணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர். தொகுதி முழுவதும், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்... ஜனநாயக சீர்திருத்த அமைப்பும் அறப்போர் இயக்கமும்  இணைந்து, வேட்பாளர்களின் சொத்து மற்றும் கிரிமினல் வழக்குகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். ஒரு வார ஆய்வுக்குப் பிறகு, அதன் அறிக்கையை இன்று வெளியிட்டனர். மாலை மூன்று மணியளவில் நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த அறிக்கை  விவரத்தைத் தெரிவிக்க உள்ளனர்.

டி.டி.வி.தினகரன்


ஜெயராம் வெங்கடேஷ்இதுகுறித்து, அறப்போர் இயக்க கன்வீனர் ஜெயராம் வெங்கடேஷ் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
 
"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்குறித்து மக்கள் தெரிந்துகொள்ள இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கம். இந்தத் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்கள் குறித்த விவரங்களைக் கடந்த ஒரு வாரமாக 20 பேர் கொண்ட குழுவினர் சேகரித்தனர்.

சொத்து மதிப்பில் முதலிடத்தில், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டு உதயம் உள்ளார். இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், 14 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தாக்கல்செய்த வேட்பு மனுவில், 11 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் புரட்சித் தலைவி அம்மா அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் தாக்கல்செய்த வேட்பு மனுவில், ஐந்தரைக் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கைப் பொறுத்தவரை, தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன் முதலிடத்தில் உள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இரண்டாவது இடத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் இருக்கிறார்" என்றார். 

- எஸ்.மகேஷ் 


டிரெண்டிங் @ விகடன்