வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (04/04/2017)

கடைசி தொடர்பு:15:06 (04/04/2017)

’எழுபதாயிரம் இளைஞர்களே... என்னை ஆதரியுங்கள்..!’  -யாரை அழைக்கிறார் சீமான்?

சீமான்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவின் இரு அணிகளும் பிரசாரத்தில் வேகத்தைக் கூட்டத் தொடங்கிவிட்டன. தி.மு.க முகாம்களில் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை. ' மக்கள் மனதில் மாற்றம் உருவானால், மிகப் பெரிய திருப்புமுனையாக தேர்தல் நாள் அமையும். அதற்கு முன்னால், இந்த நோட்டாவுக்கு ஓட்டுப் போடுகிறவர்களின் மனநிலையிலும் மாற்றம் வர வேண்டும்' எனக் கொந்தளிக்கிறார் சீமான். 

அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரனும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் வேட்பாளர் மதுசூதனனும் ஆர்.கே.நகரில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர். தெருவுக்குத் தெரு தொப்பிச் சின்னத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் அ.தி.மு.க அமைச்சர்கள் வேகம் காட்டுகின்றனர். பூத் வாரியாக பணத்தைத் தண்ணீராக இறைக்கின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள். பன்னீர்செல்வம் தரப்பில் நிர்வாகிகள் பலம் இல்லாவிட்டாலும், ஜெயலலிதா மரணத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு தொகுதிக்குள் வலம் வருகின்றனர். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.கவின் கங்கை அமரன், சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன் உள்ளிட்டவர்களும் தீவிரமாக வலம் வருகின்றனர். " இப்போது பிரசாரத்துக்காக தொகுதிக்குள் வந்திருக்கிறேன். எனக்கு முன்னால் தினகரன் பேசிக்கொண்டு போகிறார். மிகுந்த நெரிசலாக இருக்கிறது. குறுகலான தெருவுக்குள் வாக்காளர் பட்டியலுடன் சிலர் அமர்ந்து கொண்டு, பணத்தை விநியோகிக்கின்றனர். இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போதே அருவருப்பாக இருக்கிறது" எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் பேசினார்.

" வழக்கத்துக்கு மாறாக பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. ஆர்.கே.நகர்த் தொகுதியில் மழையைப் போலப் பணம் பொழிகிறது. இதையும் மீறி இளைஞர்கள் கூட்டம், எங்களை நம்பிக்கையோடு பார்க்கிறது. மாற்றத்துக்கான தொடக்கமாகவும் இந்தத் தேர்தல் அமையலாம். எழுபதாயிரம் இளைஞர் வாக்குகள் ஆர்.கே.நகரில் நிறைந்திருக்கின்றன. இவர்கள் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வரலாம். எங்களைப்போல் வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் வேலையில் எந்த வேட்பாளரும் இறங்கவில்லை. பணம் கொடுப்பவர்களை அரசியலை விட்டே அப்புறப்படுத்த வேண்டும். மிகப் பெரிய புரட்சி வராமல், இவற்றையெல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது. அதேபோல், நோட்டாவுக்குப் போடும் இளைஞர்களும் மாற வேண்டும். நோட்டாவுக்குப் போடுகின்றவர்கள் அரசியலுக்கு வரட்டும். நான் அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறேன். எதுவுமே சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தால், அது ஒரு பைத்தியக்கார மனநிலை. தவறைச் சரி செய்யக் களமிறங்குபவன் செயல்வீரன். வெறுமனே ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு எதுவும் சரியில்லை என்றால், எப்படிச் சரியாகும்? 

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, மதுரை செல்லும் விமானத்தில் என்னுடன் ஒருவர் பயணித்தார். அப்போது நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ' ஓட்டுப் போடுவதற்காக வந்திருக்கேன்' என்றார். 'பரவாயில்லை. இவ்வளவு பொறுப்பாக இருக்கிறாரே' என மனதில் நினைத்துக்கொண்டு, 'யாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்கள்?' என்றேன். 'நான் நோட்டாவுக்குத்தான் போடுவேன்' என்றார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, அரை மணி நேரம் அவருக்குப் பாடம் நடத்தினேன். யாருக்கும் போடாமல் இருப்பதும் நோட்டாவுக்குப் போடுவதும் ஒன்றுதான். நன்றாக சமைத்துவிட்டு அந்த உணவைக் குப்பையில் கொட்டுவதைப் போலத்தான் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவதும். இதனால் என்ன நடந்துவிடப் போகிறது? இந்த நாட்டின் ஜனநாயகம், தேர்தல் முறை, வேட்பாளர் என யாரையும் பிடிக்கவில்லை என்றாலும், அந்த எதிர்ப்பைக் களத்தில் நின்றுதான் பதிவு செய்ய வேண்டும்.

ஆர்.கே.நகரில் 61 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யாரையும் பிடிக்கவில்லையென்றால், என்ன மனநிலையில்தான் இந்த இளைஞர்கள் இருக்கிறார்கள்? வைக்கோலை நாயும் தின்னாது. தின்ன வரும் மாட்டையும் தின்ன விடாது என்பது போலத்தான் நோட்டா வாக்குகள் வீணாகின்றன. இதனால் எந்தப் பயனும் கிடையாது. அதிகப்படியான வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தாலும், அதனால் யாருக்கு என்ன பலன் வந்துவிடப் போகிறது? நோட்டா என்பதே பயனற்றது. வேட்பாளர்களில் நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள். இல்லாவிட்டால் நோட்டா என்ற பெயரிலேயே அமைப்பைத் தொடங்கி, நீங்களே தேர்தலில் நில்லுங்கள். உங்கள் கருத்தாக, எதையாவது வந்து சொல்லுங்கள். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 'என்ன காரணத்துக்காக நோட்டாவுக்குப் போட்டோம்?' என்பதைத் தெரிந்து கொள்ளவும் இங்கு வாய்ப்பில்லை. படித்த இளைஞர்கள்தான் இதுபோன்று செய்கின்றனர். முதலில் இவர்கள் மனதில் மாற்றம் வரட்டும்" என்றார் சீற்றத்தோடு. 

சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளால் தி.மு.க, மக்கள் நலக் கூட்டணி உள்பட பல கட்சிகளுக்கும் பெருத்த சரிவு ஏற்பட்டது. ' இளைஞர்களை மையப்படுத்தி பிரசாரம் செய்து வரும் சீமான், நோட்டா மீதுள்ள ஆதங்கத்தை பல இடங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். தொகுதி இளைஞர்கள் நோட்டா பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகத்தான் மாற்று அரசியலை முன்வைக்கிறார்' என்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். 

-ஆ.விஜயானந்த் 


டிரெண்டிங் @ விகடன்