’5.2 அடி உயர ஃபிட், 8 கமாண்டோஸ்!’ - லத்திகா சரண் ஐபிஎஸ்ஸின் பெர்சனல் | Letika Saran talks about her life as IPS!

வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (04/04/2017)

கடைசி தொடர்பு:20:38 (04/04/2017)

’5.2 அடி உயர ஃபிட், 8 கமாண்டோஸ்!’ - லத்திகா சரண் ஐபிஎஸ்ஸின் பெர்சனல்

 

மிழக காவல் துறையில் முதல் பெண் சட்ட ஒழுங்கு டிஜிபி என்ற பெருமையுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர், லத்திகா சரண் ஐபிஎஸ். சக அதிகாரிகளிடம் நல்ஒத்துழைப்புடன் செயல்பட்டவர் என்ற பாராட்டுடன் காவல் துறையிலிருந்து விடைபெற்றவர். தற்போது ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார். தன் முந்தைய, தற்போதைய செயல்பாடுகளை புன்னகையுடன் பகிர்கிறார்... 

"நான் பிறந்தது கேரளா. பள்ளிப் படிப்பை ஊட்டி, கொடைக்கானல்ல முடிச்சேன். அந்தப் பருவத்துல, எதிர்காலக் கனவுகள்னு எதுவும் இல்லை. ஸ்கூல் லைஃப் முடிஞ்சு, சென்னையில பி.எஸ்சி., மேத்ஸ் படிச்சுட்டு இருந்த சமயத்துலதான் ஐபிஎஸ் ஆகும் ஆசை வந்தது. அப்போ நான் நிறைய க்ரைம் புக்ஸ், நாவல்ஸ் படிப்பேன். அதனால காவல்துறை மேல எனக்கு நிறைய நன்மதிப்பு ஏற்பட்டுடுச்சு. அதுதான் நான் ஐபிஎஸ் ஆனதுக்கான அச்சாரம். அதுமட்டுமில்லாம அப்போ காவல்துறையில பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவா இருந்ததும், இத்துறையை ஒரு சவாலா நான் தேர்வுசெய்ய மற்றொரு காரணமா இருந்துச்சு. 

எங்க வீட்டுல, 'நீ நல்லா படிச்சு எந்தத் துறைக்கு வேணாலும் போ. ஆனா எந்தச் சூழல்லயும் இன்னொருத்தரை சார்ந்து வாழக்கூடாது'ன்னு சொன்னாங்க. படிக்கிறது மட்டும்தான் பிரதானமா இருந்துச்சு. அதனால சரியா திட்டமிட்டு படிச்சு எக்ஸாம் எழுதினேன். முதல் முயற்சியில தோல்வியடைஞ்சாலும், 1976-ம் வருஷம், ரெண்டாவது முயற்சியில செலெக்ட் ஆனேன். நான் ஆசைப்பட்ட ஐபிஎஸ் பணியே எனக்கு ஒதுக்கப்பட்டுச்சு.

தன் வளர்ப்பு நாய்களுடன் லத்திகா சரண் ஐபிஎஸ்

சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகள் முடிஞ்சு, திருச்சியில ட்ரெயினிங் காலத்தை முடிச்சு, சேலத்துல ஏஎஸ்பியா நியமிக்கப்பட்டேன். அப்போ சில பெண்களைத் தவிர்த்து, கூட வேலை செய்றது பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருந்தாங்க. 'ஆண் பெண் பாகுபாடு இல்லாம எல்லா துறையிலயும், வேலையிலயும் பெண்கள் சாதிக்கணும்'னு சின்ன வயசுல இருந்து என் பெற்றோர் சொன்னதுதான் எனக்கு அப்போ அடிக்கடி ஞாபகம் வரும். அதுபடியே நான் என்னோட வேலையை சரியா செஞ்சுட்டு இருந்தேன். அப்போ எனக்கு தமிழ்ல பேசத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமா தமிழ்ல பேசவும் எழுதவும் கத்துக்கிட்டேன். போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு வந்த பிறகு, சமூகத்துல இருக்கிற பிரச்னைகளைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்க முடிஞ்சுது. சக அதிகாரிகள் ஒத்துழைப்போட பணி செஞ்சேன்" என்பவர் தன் பணி அனுபவத்தில் எதிர்கொண்ட வழக்குகளைப் பற்றிச் சொல்கிறார். 

''36 வருஷ பணி அனுபவத்துல, பல சிக்கலான தருணங்களை கடந்துதான் நானும் வந்திருக்கேன். சட்ட ஒழுங்கு பிரச்னை, போராட்டம், கடத்தல் சம்பவங்கள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் பிரச்னைன்னு பல சவாலான வழக்குகள்ல விசாரணையை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கேன். குறிப்பா, நான் சேலத்துல வொர்க் பண்ணின ஆரம்ப காலகட்டத்துல நான் விசாரிச்ச ஒரு வழக்கு என்னால மறக்க முடியாதது. இறந்த நிலையில கிடந்த மூணு மாசக் குழந்தையோட உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினேன். 'மரவள்ளிக் கிழங்கு கொடுத்ததால அடைப்பு ஏற்பட்டு அக்குழந்தை இறந்துடுச்சு'ன்னு டாக்டர் அறிக்கை வந்துச்சு. பல நாள் விசாரணைக்குப் பிறகா அக்குழந்தைக்கு வேண்டப்பட்ட ஒரு ஸ்கூல் படிக்குறப் பையன்தான் விளையாட்டா கிழங்கு ஊட்டி, அதனால குழந்தை இறந்துருச்சுன்னு தெரியவந்துச்சு. இப்படி விசித்திரமான, சவாலான, த்ரில்லிங்கான, மிரட்டல் விடப்பட்ட பல வழக்கு விசாரணையை நான் எதிர்கொண்டிருக்கேன்" என்பவர் தமிழகத்தின் முதல் பெண் சட்ட ஒழுங்கு டிஜிபியானது பற்றிப் பேசுகிறார்.

லத்திகா சரண் ஐபிஎஸ்

"சர்வீஸ், சீனியாரிட்டி அடிப்படையில், மத்திய சிபிஐயில நாலறை வருஷம், நேஷனல் டிஃபென்ஸ் காலேஜ்ல ஒரு வருஷம் தவிர பெரும்பாலான என் பணி தமிழ்நாட்டுல வெவ்வேறு துறையிகளில்தான் இருந்துச்சு. இறுதியா 2010-ம் வருஷம் தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் அந்த பதவியில இருந்த நான், 2012-ம் வருஷம் பணி ஓய்வு பெற்றேன். போலீஸ் டிபார்ட்மென்ட்டுல நான் பணி செஞ்ச 36 வருஷமும், பெண் அதிகாரின்னு நினைச்சு நான் வேலை செய்யவே இல்லை. அப்படி நான் நினைச்சிருந்தா, என்னால பல பிரச்னைகளை தைரியமா எதிர்கொண்டிருக்கவே முடிந்திருக்காது. மேலும், என்னைப் பொருத்தவரை என்னை அணுகுற சீனியர், ஜூனியர்னு யாரா இருந்தாலும் அவங்களோட கருத்தை முழுசா கேட்ட பிறகுதான் நான் பேசவே ஆரம்பிப்பேன். அப்படி என்னோட பணிகாலம் முழுக்க சுமூகமாதான் இருந்துச்சு. அதுக்கு எல்லா காவல்துறை அதிகாரிகளுமே ஒத்துழைப்புக் கொடுத்ததுதான் காரணம்.

'போலீஸ்னா ரொம்பவே ஃபிட்டா, உயரமா இருப்பாங்களே.... ஆனா நீங்க'ன்னு எங்கிட்ட கேட்டதுண்டு. நான் 5.2 அடி உயரம், ஸ்லிம்மான உடல்தான். என்னைப் பொறுத்தவரைக்கும் யூனிஃபார்ம் போட்டதும் ஸ்மார்ட்டா இருக்குறதும், அதை மனசளவுல நினைக்குறதும்தான் போலீஸ்க்கு அழகு.  அப்படி என்னைப் பொறுத்தவரை நான் மனசளவுல ஃபிட்டான, ஸ்மார்ட்டான போலீஸா இருந்தேன். அதனால என்னோட உடல் மொழியை நான் பெருசா எடுத்துக்க மாட்டேன்" என  புன்னகைக்கும் லத்திகா சரண், ஓய்வுக்குப் பிந்தைய தற்போதைய செயல்பாடுகளைக் கூறுகிறார்.

"ஓய்வு பெற்ற பிறகு சென்னையிலதான் இருக்கேன். நிறைய நிறுவனங்கள், கல்லூரிகளுக்கெல்லாம் சிறப்பு விருந்தினரா உரையாற்றப் போயிட்டு இருக்கேன். தவிர, குடும்ப உறுப்பினர்களைப் போல இருக்கிற என்னோட எட்டு செல்ல நாய்களை பராமரிக்கிறது, இப்போதைய என்னுடைய அளவற்ற சந்தோஷத்தைக் கொடுக்குற பணியா இருக்கு. குறிப்பா என்னோட எட்டு நாய்கள்தான், எனக்கு கமாண்டோஸ் மாதிரி இருக்குன்னு எனக்குள்ள அப்பப்போ நினைச்சு சிரிப்பேன். தவிர, புத்தகங்கள் படிக்கிறதும் இப்போ என்னோட ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாக்குது. 1976-ம் ஆண்டைச் சேர்ந்த எங்க சிவில் சர்வீஸ் துறை பேட்ச்மெட்ஸ் பலரும் வருஷத்துக்கு ஒருமுறை சந்திப்போம். அப்படி போன வருஷம் மத்திய பிரதேசத்துல சந்திச்ச நாங்க, இந்த வருஷம் மைசூர்ல சந்திக்க இருக்கிறோம். காலங்கள் கடந்தும் எங்களோட நட்பு தொடர்றதுல்ல ரொம்பவே சந்தோஷம் எனக்கு. அதுல நான் பெருமையா சொல்ற மாதிரி, என்னோட பேட்ச்மெட்டான ஜாய் குமார் சிங் என்பவர், இப்போ மணிப்பூர் மாநில துணை முதல்வரா இருக்கார்.  

காவல்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பெண்கள் நிறைய சாதிக்க விரும்புகிறேன்!" புன்னகைக்கிறார் லத்திகா சரண்.


- கு.ஆனந்தராஜ்


டிரெண்டிங் @ விகடன்