வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (04/04/2017)

கடைசி தொடர்பு:21:35 (04/04/2017)

நாளை 'உழவே தலை' மாநாடு தொடக்கம்!

ஆவடியை அடுத்துள்ள பாண்டீஸ்வரத்தில் நாளை 'உழவே தலை' என்ற பெயரில் விவசாய மாநாடு நடக்கவிருக்கிறது. சென்னை நந்தனத்தில் நடக்கவிருந்த இம்மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் பாண்டீஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம், நீர் மேலாண்மை உள்ளிட்ட விவசாய கொள்கைகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அறப்போர் இயக்கம் சார்பில் விவசாயத்தின் பிரச்னைகளை விளக்கும் 'உழவே தலை' மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. மார்ச் 31-ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கவிருந்த இம்மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.சந்திரமோகன் மனுதாக்கல் செய்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டில் கலந்துகொள்ள விவசாயிகள் வருகின்றனர். ஆனால், காவல்துறை அனுமதி தர மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை வைத்தார். மேலும், பாண்டீஸ்வரம் கிராமத்தில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையின் உரிய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தார். காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் எனவும், நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவளித்தார்.


இதையடுத்து, நாளை பாண்டீஸ்வரத்தில் 'உழவே தலை' மாநாடு நடைபெறுகிறது. நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கும் இம்மாநாட்டில், இயற்கை விவசாயம், நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.