மக்களுக்கான அரசியலை கட்டியெழுப்ப ஊர் சுற்றும் ‘ஊர் குருவிகள்’! | 'Oor Kuruvigal' Youths Works On Alternative Politics

வெளியிடப்பட்ட நேரம்: 09:31 (05/04/2017)

கடைசி தொடர்பு:09:32 (05/04/2017)

மக்களுக்கான அரசியலை கட்டியெழுப்ப ஊர் சுற்றும் ‘ஊர் குருவிகள்’!

ஊர் குருவிகள் அமைப்பு

"வளர்ச்சியின் பெயரால் நம் நிலப்பரப்பின் மீது தொடுக்கப்பட்டுள்ள வன்முறைகள் ஏராளம். உதாரணமாக, சென்னையின் தேவைகளுக்காக சென்னையைத் தாண்டி காஞ்சிபுரம் மாவட்டத்தின் வளங்கள் ஏராளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை விடவும், அவை யாவும் சுரண்டப்பட்டு வருகின்றன என்பதே சரியானதாகும்.

பொருள் ஈட்டும் பொருட்டு, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட தமிழ்ச் சமூகத்தின் பொருளியல், அரசியல் என எல்லாவற்றிலும் இருந்து விலகியே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், மீண்டும் இந்தச் சமூகத்தோடு இணைய வேண்டும். நம் நிலப்பரப்பின் மீதான அரசியலை, நம் மண்ணின் பிரச்னைகளை, வரலாற்றை நோக்கிய ஒரு பயணம்தான் இது" பிரச்னைகளின் ஆழத்தை நிதானமாக எடுத்துரைக்கிறார், 'ஊர்க்குருவிகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன்.

"ஊர்க்குருவிகள் என்பது ஒரு பயணத்திட்டம். இதன் மூலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, அங்கு வாழும் மக்களிடையே உரையாடுதல், அவர்கள் எதிர்நோக்கும் சூழலியல் மற்றும் சமூகப் பிரச்னைகளைப் பற்றி விவாதித்தல், அவற்றை ஆவணப்படுத்துதலை மேற்கொள்கின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள். 

2009-ல் 'Save Tamils' என்ற அமைப்பின் மூலமாக ஈழத்தமிழர்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2012-13-ம் ஆண்டுக்குப் பிறகு, நம் தமிழர்களின் மண்சார்ந்த, மரபுசார்ந்த வாழ்வாதாரப் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தத் தொடங்கினோம். அதாவது பிரச்னைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கும், பிரச்னைகளை விவாதிக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தொடர்பை உண்டாக்கும்விதமாக ஊர்க்குருவிகள் அமைப்பைத் தொடங்கினோம்" என்கிறார் அதன் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சங்கர்.

ஊர் குருவிகள் அமைப்பு

முதல் பயணமாக, அப்போது மீத்தேன் எரிவாயுத் திட்டம் அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதிகளுக்கு எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். நாகப்பட்டினம், பூம்புகார் என இயற்கைபிரச்னைகள் சார்ந்த இடங்களைத் தேர்வு செய்தோம். தொடர்ந்து தேவாரம் பகுதியில் 'நியூட்ரினோ ஆய்வகம்' அமைக்கும் பிரச்னை, மாஞ்சோலை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை, கோத்தகிரி, மூணாறு தேயிலை தொழிலாளர்கள் பிரச்னை என நிலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ளும் மக்களைச் சந்தித்தும், உரையாடியும் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

'ஊர்க்குருவிகள்' பயணம் என்றதும், தனியாக வண்டி அமர்த்தி, உயர்ரக விடுதிகளில் தங்கிக்கொள்வது என்றெல்லாம் இருப்பது இல்லை. எங்க 'பேஸ்புக்' பக்கத்தில் எந்தப் பகுதிக்குப் பயணம் என்பதற்கான மொத்த திட்டமும் வெளியிடப்படும். அந்தந்தப் பகுதி மக்களின் வீடுகளில், அரசாங்கப் பள்ளிகளில் தங்கிக் கொள்வோம். அவர்களுடன் சேர்ந்து உணவு உண்போம். இப்படி மக்களோடு, மக்களாக சேர்ந்துவாழும் ஒரு பயணமாகத்தான் எங்கள் பயணம் இருக்கும்.

கூவம் நதி சாக்கடையாகிப் போனதை மறந்து விட்டு, கேன் வாட்டரைக் காசு கொடுத்து வாங்குகிறோம். அம்மா தண்ணீர் 10 ரூபாய்க்குக் கிடைப்பதைப் பற்றிச் சிலாகிக்கிறோம்! ரியல் எஸ்டேட் பிளாட்டுகளாக மாற்றப்பட்ட விளைநிலங்களை ‘எதிர்காலத் தேவைகளுக்காக’ வாங்கிப்போடத் துடிக்கிறோம். வளர்ந்து வரும் சூழலியல் நெருக்கடிகளால் நாம் பாதிக்கப்படப் போவதை முன்கூட்டியே உணராத, வேடிக்கைப் பார்க்கும் பெரும்பாலான படித்த, நடுத்தட்டு மக்களுள் நாமும் ஒருவராக வாழ்ந்து வருகிறோம்.

தொழில்நுட்ப வளர்ச்சியானது உலகை ஒரு கிராமமாகச் சுருக்கி விட்டது. ஆனால், நம்மை தனித் தனித் தீவுகளாக மாற்றி விட்டது. அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும், சொந்த வியாபாரத்திலும் இன்னும் பல வேலைகள் செய்து கொண்டிருக்கும் நம்மில் பெரும்பானோர் நாம் உண்மையிலேயே சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை மறந்து விடுகிறோம். தமிழ்ச் சமூகம் இன்றளவில் இருக்கும் நிலைகுறித்தும், அது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் நாம் பேசுவதில்லை. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, வார இறுதியில் ஃபுல் ரெஸ்ட். போரடித்தால் ஃபீனிக்ஸ் மால், சினிமா தியேட்டர். கண்டிப்பாக, இவை மட்டுமே நமது இலக்குகள் அல்ல! நமது அலுவலகமும், நாம் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் மட்டுமே நமது உலகமும் அல்ல!

ஊர் குருவிகள் அமைப்பு

தாய், தகப்பனும், மனைவி குழந்தைகளும் மட்டுமே நமது உறவுகளல்ல. சோறூட்டும் தஞ்சைக் கிழவனும், ஆடை பின்னும் திருப்பூர் பெண் தொழிலாளியும், மீன் பிடிக்கும் மீனவனும் நமது உறவினரே. பிறந்து வளர்ந்த ஊர் மட்டும் நமது சொந்த ஊரல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்நாடும்தான். குடிப்பதற்கு கேன் வாட்டரும், பயன்பாட்டுக்கு மெட்ரோ வாட்டரும் மட்டும் நமக்குப் போதுமா? காவிரியும், முல்லைப் பெரியாறும், நொய்யலும் பாலாறும், வைகையும், தாமிரபரணியும் பாழானால் தண்ணீர் ஏது நமக்கு?

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் ஆடை வரை, நவீன வசதிகளுடன் நகரங்களில் வாழும் நமக்கும், தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலுள்ள உழவனுக்கும் இடையே நிலவும் சமூக உறவை நாம் உணர வேண்டும். பெருகி வரும் நகரமயமாதலால் தொலைந்துபோன நம் வரலாற்றையும் வாழ்வியலையும் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு முதலில் நம் மண்ணையும், மக்களையும் பற்றி, அதைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளைப் பற்றி, அதற்கான தீர்வுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் முழுமையாக அறிந்து கொள்வோம்" என்கிறார் 'ஊர்க்குருவிகள்'-ன் இன்னொரு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி.

ஊர்க்குருவிகளின் வாயிலாக, சிட்டுக் குருவிகளாக மாறிடுவோம்!
மண்ணையும், மக்களையும் நோக்கிய நமது பயணத்தைத் தொடங்குவோம்!

- ந.புஹாரிராஜா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close