வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (05/04/2017)

கடைசி தொடர்பு:13:50 (05/04/2017)

‘மாணவர்கள் மற்றும் காதலர்கள் வரத் தடை’ - சென்னை மாநகர பூங்காவின் விபரீத அறிவிப்பு!

பூங்கா, சென்னை,

"நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்" 

- கவிஞர் அறிவுமதியின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று. ஆனால் சென்னையில் பிரதானமான எழும்பூர் காவல் சரகம் ராஜாமுத்தையா மன்றம் எதிரில் உள்ள மேயர் சுந்தர்ராவ் பூங்காவில், அநாகரிகமான வகையில் ஓர் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு முத்திரையுடன் உள்ள அதைக்கண்டு பொதுமக்களே திகைக்கின்றனர். அந்த அறிவிப்பில் ‘மாணவ-மாணவிகள் மற்றும் காதலர்களுக்கு பூங்காவில் அனுமதி இல்லை’  என அரசு முத்திரையுடன் பூங்காவின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த பூங்காவின் அருகில் பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், இரண்டு பெண்கள் கல்லூரிகள் ஆகியவை உள்ளன.

பூங்கா

 

அன்மையில் உத்தரபிரதேசத்தில் பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு உ.பி மாநில காவல்துறை 'கலாசார காவல் துறையாக' மாறிவிட்டதாக நாடு முழுவதும் முற்போக்காளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு தினமும் பூங்காக்களிலும், பொது இடங்களிலும் ஜோடியாக இருக்கும் ஆண்-பெண் இருபாலரையும் பிடித்து அங்கே தோப்புகரணம் உள்ளிட்ட தண்டனைகளை கொடுத்து வருகின்றனர். இன்னும் பல இடங்களில் ஜோடியில் இருக்கும் ஆணுக்கு அங்கேயே மொட்டை அடிக்கும் தண்டனையும்  வழங்கப்படுகிறது. சமூக ஊடகங்களிலும் இதுகுறித்து விமர்சனங்களும், மனித உரிமை மீறல் என்று கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலேயே இப்படியான அறிவிப்பு வெளியானது குறித்து அந்த பூங்காவின் காவலரிடம் விசாரித்த போது "அடிக்கடி இங்க வர்ற லவ்வர்ஸ்க்கு இடையில சண்டை வந்துடுது சார். போன வருஷம் ஒரு பொண்ணு கையை அறுத்துகிட்டதுன்னு சொல்லுறாங்க. நான் இங்க வந்து சிலநாள்தான் ஆச்சு. நான் வர்றப்பவே இந்த நோட்டீஸ் எல்லாப்பக்கமும் ஒட்டியிருந்தாங்க" என்ற சொன்னவரிடம் "பூங்கா எல்லோருக்கும் பொதுவானதுதானே? அதில் ஏன் மாணவர்களை வரக்கூடாதுன்னு சொல்லுறீங்க?" என்று கேட்டோம். 

பூங்கா

"இங்க சாயந்தர நேரத்தில் நிறைய தலைமைச் செயலக அலுவலர்கள் பேமிலியோட வாங்கிங் போறாங்க சார். அப்ப இந்த ஸ்கூல் பசங்க அங்கிட்டு இங்கிட்டும் விளையாடி தொந்தரவு பண்ணுறாங்க. ஜோடியா வர்றவங்க நெருக்கமா இருக்கிறது அவங்களுக்கு மரியாதை குறைச்சலா இருக்கு இல்லையா. அதனால ஒட்ட சொல்லி ஆர்டர் போட்டிருக்கலாம்" என்றார்.

இது குறித்து அந்தப் பகுதியின் காவல்துறை துணை ஆணையர் திரு.பெருமாள் அவர்களிடம் கேட்ட போது "எங்கள் தரப்பில் இருந்து இப்படியான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. உடனடியாக இது குறித்து விசாரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

கோடைக்காலம் உக்கிரமாக இருக்கும் வேளையில் அருகில் இருக்கும் கல்லூரி மாணவிகள் பூங்காவில் அமர்ந்து படிப்பது வழக்கம். இந்த அறிவிப்பினால்  பூங்காவின் உள்ளே செல்லவே தயங்கி வேறு இடம் தேடி அலைகின்றனர். மாநகராட்சியின் பூங்கா நிர்வாகம்  மேற்பார்வை பொருளாளர் திரு.காளிமுத்து அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தமக்கு எதுவும் தெரியாது என்றும் இந்தப் பிரச்சினை பற்றி மாநகராட்சி ஆணையரிடம் கேட்க அறிவுறுத்தினார். பலமுறை முயன்றும் ஆணையர் அலைபேசியை எடுக்கவில்லை. தனி மனித உரிமையான 'காதல் உணர்வு' இன்று ஆணவக்கொலைகளில் சிக்கி வதைபட்டு வரும் இந்த வேளையில், இது போன்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சட்ட ரீதியாக வயது வந்தவர்கள் காதலராக இருப்பதில் என்ன தவறு என்றே தெரியவில்லை. இது தனி மனிதர்கள் செயலா அல்லது ஆளும்கட்சியின் கொள்கை முடிவா என்று  விரைந்து அரசு விளக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.   

- வரவனை செந்தில்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்