இவர்கள்தான் 'அலிபாபா 40 திருடர்கள்'!- பொன்.ராதாகிருஷ்ணன் விளாசல்

Pon Radhakrishnan

ஆர்.கே.நகர்த் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு, 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். லட்சக்கணக்கான பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக, சசிகலா அணியைச் சேர்ந்த அ.தி.மு.க அம்மா கட்சியினரும், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கேலிக்கூத்தாக மாற்ற முயற்சிசெய்கின்றனர். பணப்பட்டுவாடாசெய்யும் வேட்பாளர், ஆறு ஆண்டுகள் போட்டியிட முடியாத அளவுக்கு சட்டம் தேவை. எக்காரணம் கொண்டும் ஆர்.கே.நகர்த் தேர்தலை ஆணையம் ஒத்திவைக்கக் கூடாது. வீடு வீடாகக் கட்டாயப்படுத்தி பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. பணப்பட்டுவாடாசெய்யும் வேட்பாளர்கள், அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்குச் சமமானவர்கள்" என்று குற்றம் சாட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!