கத்திக் குத்து, கலவரம், அதிகாலை 4 மணி! - ஆர்.கே.நகரில் படரும் ‘திடீர்’ அபாயம் #VikatanExclusive | Dramatic Turn of Events at R.K.Nagar!

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (05/04/2017)

கடைசி தொடர்பு:15:33 (05/04/2017)

கத்திக் குத்து, கலவரம், அதிகாலை 4 மணி! - ஆர்.கே.நகரில் படரும் ‘திடீர்’ அபாயம் #VikatanExclusive

ஆர்.கே.நகர் கலவரம்

அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் பிரசார செயல்பாடுகளை, அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றன தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.' அதிகாலை நான்கு மணிக்குத்தான் பண விநியோகத்தைத் தொடங்குகின்றனர் தினகரனின் ஆட்கள். நேற்று பண விநியோகத்தைத் தடுத்ததற்காக தி.மு.க மாணவர் அணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. கலவர சூழலில் இருக்கிறது ஆர்.கே.நகர்" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன், தீபா, பா.ஜ.கவின் கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் பிரசாரத்தில் வேகத்தைக் கூட்டி வருகின்றனர். "தினகரன் ஆதரவாளர்களால்தான் தொகுதிக்குள் பண மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களும் வாக்குக்கு தலா இரண்டாயிரம் என விநியோகிக்கத் தொடங்கிவிட்டனர். பெண்களுக்கு விதம்விதமான சேலைகள், சுடிதார், பாத்திரங்கள், ஆண்களுக்குத் தேவையான டி சர்ட்டுகள், ஜீன்ஸ் பேண்டுகள் என கணக்கு வழக்கில்லாமல் வாரியிறைத்து வருகின்றனர். இதுதொடர்பாக, நேற்று பாரிமுனையில் உள்ள தனியார் பாத்திரக்கடை ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தினகரன்தொகுதிக்குள் விநியோகித்தால், தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குப் புகார் செல்லும் என்பதால், மறைமுக வழிகளில் பரிசுப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர்" என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர், "நேற்று இரவு தொகுதிக்குள், ஆளும்கட்சி நிர்வாகிகள் பண விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தடுப்பதற்காக தி.மு.க மாணவர் அணியைச் சேர்ந்த பார்த்தசாரதி, முகமது அஸ்லாம் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்தனர். பணத்தைக் கொடுக்கவிடாமல் தடுத்ததால், ஆவேசமான அ.தி.மு.க அம்மா கட்சி நிர்வாகிகள் கத்தியைப் பயன்படுத்தி இருவரையும் தாக்கியுள்ளனர். இதில், இவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காக தி.மு.க தொண்டர்களும் களத்தில் இறங்கியதால் பெரும் கலவரச் சூழல் ஏற்பட்டுவிட்டது. கத்திக்குத்து வாங்கிய இருவரும் ஸ்டேன்லி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் செயல் தலைவர் ஸ்டாலின்" என்றார் கவலையோடு. 

சி.பி.எம் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சுந்தரராஜனிடம் பேசினோம். "தேர்தல் நாள் நெருங்குவதற்குள் பண விநியோகத்தில் விதம்விதமான யுக்திகளைப் பயன்படுத்தி வருகிறது தினகரன் அணி. இவர்களைத் தடுப்பதே பெரும் வேலையாக இருக்கிறது. பகல் நேரத்தில் விநியோகத்தால், எதிர்க்கட்சிகள் திரண்டு விடுவார்கள் என்பதால், வீடுதோறும் வித்தியாசமான முறையில் பரிசுப் பொருட்களை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'நேற்று இரவு பணத்தைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்' என்ற தகவலைக் கேள்விப்பட்டு, விடிய விடிய தூங்காமல் காத்திருந்தோம். ஒருவரும் வரவில்லை. அதிகாலை மூன்று மணியளவில் வீட்டுக்குத் திரும்பிவிட்டோம். பிறகு பார்த்தால், நான்கு மணியிலிருந்து தலைக்கு நான்காயிரம் ரூபாய் என பணத்தை விநியோகித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா

இதுகுறித்து ஆதாரத்தைத் திரட்டியுள்ளோம். 'எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும்' என்ற மனநிலையில் தினகரன் ஆதரவாளர்கள் வலம் வருகின்றனர். இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் பண விநியோகம் செய்வார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆர்.கே.நகரில் வரலாறு காணாத அளவுக்கு, பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். தேர்தல் ஆணையம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.

ராமகிருஷ்ணன்"ஆர்.கே.நகரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். இதுகுறித்து இன்று காலை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்துப் புகார் மனு கொடுக்க இருக்கிறோம். வாக்குக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். 

“வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அதற்குள் முறையற்ற வகையில் பணத்தை விநியோகித்து வருகின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். அரசு இயந்திரத்தையும் அதிகார பலத்தையும் வைத்துக் கொண்டு தொகுதிக்குள் வலம் வருகின்றனர். இவர்களது முறையற்ற செயலைத் தடுக்கப் போன, எங்கள் கட்சித் தொண்டர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற கலவரச் சூழல்களை ஏற்படுத்தி, வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆளும்கட்சியினர் செயல்படுகின்றனர். அ.தி.மு.க அம்மா அணியின் செயல்பாடுகள் அனைத்தும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, எங்கள் சட்டத்துறை நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்க இருக்கின்றனர்" என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பிரசன்னா. 

தி.மு.க தொண்டர்கள் மீதான தாக்குதல் குறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், "நேற்று மீனவ சமுதாய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பணப் பட்டுவாடாவை தி.மு.க நடத்தியது. இதை எதிர்த்து நாங்களும் குரல் கொடுத்தோம். நேற்று நடந்த கலவரச் சூழலை திட்டமிட்டு உருவாக்கியது தி.மு.கதான். 'எப்படியாவது தேர்தலை நிறுத்திவிட வேண்டும்' என்ற முனைப்பில் அவர்கள் செயல்படுகின்றனர். பிரசாரம் செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை" என்கின்றனர். 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்