வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (06/04/2017)

கடைசி தொடர்பு:09:08 (06/04/2017)

பி.ஜே.பி-யின் சர்ச்சை நாயகன் ஹெச்.ராஜா! கடிவாளம் போடுமா டெல்லி தலைமை?!

ஹெச். ராஜா

மிழக பி.ஜே.பி-யின் சர்ச்சை நாயகன் ஹெச்.ராஜா, வாய்க்கு வந்தபடியெல்லாம் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து அந்தக் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருவது, பொதுமக்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசம் உள்பட நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் நரேந்திர மோடியின் தலைமைக்கு அங்கீகாரம் அளித்து, பி.ஜே.பி அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தமிழகம், மேற்குவங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் மட்டுமே பி.ஜே.பி-யால் தடம்பதிக்க முடியாமல் போனது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்,. தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளில் உள்ள கட்டமைப்பைப் போன்று, பி.ஜே.பி-க்கு கிராமப்புறங்களில் செல்வாக்கு கிடையாது.மேலும் தமிழக பி.ஜே.பி-யில் மக்களைக் கவரக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லாததும் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. தவிர, அந்தக் கட்சிகளைப் போன்று நிரந்தர வாக்கு சதவீதமும் பி.ஜே.பி-க்கு கிடையாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்பதில் பி.ஜே.பி தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஜெ. மறைவுக்குப் பின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், அந்தக் கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாகச் செயல்படுகிறார். சசிகலா ஆதரவுடன் டி.டி.வி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, தற்போது ஆர்.கே.நகர்த் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழகத்தில் பி.ஜே.பி-யில் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதில் அந்தக் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அந்தக் கட்சி சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில், பி.ஜே.பி. தேசிய செயலாளராக இருக்கும் ஹெச்.ராஜா, வழக்கம்போல் தனது சர்ச்சைக்குரிய கருத்துகளை அன்றாடம் தெரிவித்து வருவது, அந்தக் கட்சியின் மீதான பொதுமக்களின் மதிப்பை குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. 

ஏற்கெனவே பலமுறை ஹெச்.ராஜாவின் கருத்துகள் மிகுந்த சர்ச்சையில் சிக்கியதுண்டு.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராஜா அளித்த ஒரு பேட்டியில், "முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவதால், அவர்கள் தேர்வுகளில் எளிதாக காப்பி அடிக்க முடிகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் பர்தா அணிவதைத் தடை செய்ய வேண்டும். பர்தா அணிவதால், மாணவிகளிடையே பிரிவினைதான் உண்டாகும்" என்று தெரிவித்தார், அவரது இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அவரது பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பட்டுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "டெல்லியில் உண்ணாவிரதம் இருந்துவரும் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசாதது ஏன்?" என்று ஒரு நிருபர் கேட்டபோது, கடும் கோபம் அடைந்த ஹெச்.ராஜா, அவரை தேசத் துரோகி என்று விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். மேலும் அந்தப் பேட்டியின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளக்காரி என்றும், இத்தாலி நாட்டவர் என்றும் ராஜா பேசியது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. "வெள்ளைத் தோலைக் கண்டால் பயப்படுறீங்க. காங்கிரஸ் ஆட்சியின்போது, விவசாயிகள் சோனியா காந்தியை ஏன் சந்திக்கவில்லை. போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஒரு மோசடிப் பேர்வழி. அவரை எனக்குத் நன்றாகத் தெரியும். உள்நோக்கத்துடன், டெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், "மோடியைப் பற்றி தவறாகப் பேச யாருக்கும் எந்த அருகதையும் கிடையாது" என்றும் அந்த செய்தியாளரிடம் ஹெச்.ராஜா சீறினார். அவரது இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியினரும், செய்தியாளரை கண்டிப்புடன் பேசியதற்காக பத்திரிகையாளர்களும் ஹெச். ராஜாவுக்கு கண்டனங்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

ஒரு சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சைக்குள் இறங்கி விட்டார் அவர். "காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா ஆகியோர் தேச விரோதமாகச் செயல்பட்டார்கள். இவர்களைத் தொடர்ந்து, அந்த அணியில் ப.சிதம்பரம் தற்போது இணைந்துள்ளார்" என்று டிவிட்டரில்  ஹெச்.ராஜா குறிப்பிட்டிருப்பது புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. "ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் விரைவில் கைதுசெய்யப்படலாம்; சிறையில் இருக்கும் வைகோவுக்கு. சிதம்பரம் கம்பெனி கொடுப்பார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரம் குறித்து ஹெச். ராஜாவின் டிவிட்டர் பதிவு புதிய சர்ச்சையாகி உள்ளது. 

"தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சி மலரும்; பி.ஜே.பி அரசு அமைந்தால், ஊழலற்ற ஆட்சியை அளிப்போம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது" என்றெல்லாம் தெரிவித்து, குழம்பிய அரசியல் குட்டையில் மீன் பிடித்து விடலாம் என்ற கனவில் பி.ஜே.பி மத்திய தலைமை காய்களை நகர்த்தி வரும் நிலையில், ஹெச்.ராஜாவின் இதுபோன்ற சர்ச்சைக்குரி கருத்துகள், அந்தக் கட்சியின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் என்பது திண்ணம்.

H raja

இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக கருத்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது மிரட்டல் தொனியில் பேசுவது, மற்ற கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசி கொச்சைப்படுத்துவது, தேச விரோதிகள் என பல்வேறு அரசியல் தலைவர்களையும் குறிப்பிடுவது என ஹெச். ராஜா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்ற வேண்டும் என உண்மையிலேயே அந்தக் கட்சியின் தேசிய தலைமை கருதுமானால், சர்ச்சை நாயகன் ஹெச். ராஜாவை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஹெச். ராஜாவுக்கு பி.ஜே.பி டெல்லி தலைமை கடிவாளம் போட தவறும்பட்சத்தில், இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அந்தக் கட்சியை வளர்க்கும் முயற்சி வெறும் கனவாகவே நீடிக்கும் என்பது உறுதி!

-சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்