வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (05/04/2017)

கடைசி தொடர்பு:21:50 (05/04/2017)

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க இரண்டாக பிரிந்து சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மேலும் தி.மு.க சார்பில் மருதுகணேஷும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாக, ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தின் வீரியத்தை அதிகரித்துள்ளது. மேலும், தொகுதியின் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவும் செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இது தொடர்பாக சிலர் தேர்தல் ஆணையத்தால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று திருச்சி சிவா எம்.பி தலைமையில் டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த தி.மு.க-வினர், 'போலீஸ் அதிகாரிகள் மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது' என்று புகார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 22 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. 

இதில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியல் வருமாறு,

வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ஜெயராம்,

வடசென்னை இணை ஆணையராக பாஸ்கரன்,

வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக ஷசாங்சாய், 

புளியந்தோப்பு துணை ஆணையராக ராமர், 

வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர்,

திருவெற்றியூர் உதவி ஆணையராக ரகுராம்,

ராயபுரம் உதவி ஆணையராக தனவேல்,

எம்.கே.பி நகர் உதவி ஆணையராக அன்பழகன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், 14 இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்துக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்துக்கான உத்தரவை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி பிறப்பித்தார்.