வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (06/04/2017)

கடைசி தொடர்பு:16:42 (06/04/2017)

'என் மகளை அடித்தே கொன்றுவிட்டனர்'‍- ராணுவ வீரர் குடும்பத்தினர்மீது தந்தை பகீர்

என் மகளை ராணுவ வீரர் ராகவன் குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்துவிட்டதாக பெண் காவலர் சர்மிளாதேவியின் தந்தை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் சர்மிளாதேவி (25) புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினரான வீரராகவன் என்பவரை கடந்த 2013ல் காதல் திருமணம் செய்துகொண்டார். ராணுவ வீரரான வீரராகவன் ஒடிசாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் விகாஷ் என்ற ஆண்குழந்தை உள்ளது. எட்டு மாத கர்ப்பிணியாக சர்மிளாதேவி இருந்துள்ளார். கடந்த 20 நாள்களுக்கு முன்பு கணவருடன், சர்மிளாதேவி சொந்த ஊரான கட்டிகுளத்துக்கு வந்துள்ளனர். நேற்று மாலை கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கணவர் வீட்டில் சர்மிளாதேவி தூக்குப்போட்டு மயங்கி கிடந்ததாகக்கூறி உறவினர்கள் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மகள் சர்மிளாதேவி உயிரிழந்த தகவல் கேட்டு பெற்றோர் மானாமதுரை காவல்துறையில் புகார் அளித்தனர், அதில், எங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த புகாரின் பேரில் மானாமதுரை டிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது.

இதுகுறித்து சர்மிளாதேவியின் தந்தை லட்சுமணன் கூறுகையில், "எனது மகள் தூக்குப்போட்டு இறந்ததாக கூறப்படும் மாடி அறை ஓட்டு வீடு. அதில்  தூக்கில் தொங்க வாய்ப்பில்லை. ராகவன் குடும்பத்தினர் எனது மகளை அடித்துக் கொலை செய்துள்ளனர்" என்று கூறினார்.

- சாய் தர்மராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க