கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் - ஆர்.கே.நகரில் பதற்றம்! | rk nagar become tension

வெளியிடப்பட்ட நேரம்: 01:49 (07/04/2017)

கடைசி தொடர்பு:12:33 (07/04/2017)

கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் - ஆர்.கே.நகரில் பதற்றம்!

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இப்போதுதான், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில்,  கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் போன்றவையும் அரங்கேறியுள்ளன. ஆர்.கே.நகர், நேதாஜி நகர்  ஏரியா-வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாகப் பணியாற்றிவந்தனர்.

 

 

 

இந்தப் பகுதியில்தான் நேற்று, ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனும் தேர்தல் பிரசாரம்செய்ய வந்தனர். அதனால், இரு அணியைச் சேர்ந்தவர்களும் தங்களது பலத்தைக் காட்ட, ஆட்களைத் திரட்டி வைத்திருந்தனர். ஒரு பிரசார வேனில் ஜெயலலிதா பேச்சுகள் ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருந்தது. டி.டி.வி.தினகரன் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் நின்றபோது, அவரை ஆதரித்து ஜெயலலிதா பேசிய பேச்சுக்களை போட்டு, வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தனர்.  

இந்தப் பிரசார வேனுக்கு எதிரே, சாலை ஓரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சிறிய மேடை ஒன்று அமைத்து, குத்துப் பாட்டு டான்ஸ் நடத்திக்கொண்டிருந்தனர். இந்தக் களேபரங்களுக்கு இடையே அந்தச் சாலை, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. இரு தரப்பினரும் செய்த தேர்தல் பிரசாரத்தில், ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டனர். அப்போது, டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து கற்களும் தண்ணீர் பாக்கெட்டுகளும் ஓ.பன்னீர்செல்வம் ஆட்கள் மீது விசப்பட்டன. இதையடுத்து, இரண்டு தரப்பிலும் ஆவேசம் பொங்க ஒருவரை ஒருவர் அடிக்கப் பாயந்தனர். டி.டி.வி.தினகரன் ஆட்கள், இரும்பு ராடுகளை எடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை விரட்டி விரட்டி அடித்தனர். சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.

பிரச்னையை அறிந்த துணை கமிஷனர் ராமர், சம்பவ இடத்துக்கு வந்து அமைதிப்படுத்தினார். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் காயம் ஏற்பட்டதாகக் கூறி டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த ஆறு பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டனர். அவர்களைப் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். மேலும், டி.டி.வி.தினகரன் ஆட்கள் 'ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரவில் அரை மணி நேரம் ஆர்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் மிரட்டி விரட்டினர். 

- ந.பா.சேதுராமன், எஸ்.முத்துகிருஷ்ணன்

படம்: ஆ.முத்துகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க