ஆர்.கே நகரில் தீவிரமானது இரவு ரோந்து! மைக்ரோ அப்சர்வர்கள் வந்துவிட்டார்கள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தொகுதி முழுவதும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், பறக்கும் படையினர், மைக்ரோ அப்சர்வர்கள் என்று பலரும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இரவும் பகலும்  சுற்றுவருகிறார்கள். வாகனச் சோதனையைப் பலப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு 10 மணிக்கு மேல், தொகுதிக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் சோதனைசெய்யப்படுகிறது. இரு சக்கர  வாகனங்களில் வருவோரையும் நிறுத்தி சோதனை செய்கிறார்கள்.

வாகனங்களில் இருக்கும் பொருள்கள்குறித்து விளக்கம் கேட்டு, சொல்வது சரியாக இருந்தால் மட்டுமே அனுப்புகின்றனர். இல்லை என்றால்,  துருவித் துருவி விசாரணை நடத்துகின்றனர். ஒருவர், தனது டைரிக்குள் வைத்திருந்த 2,000 ரூபாய் நோட்டு பற்றியும் கேள்வி கேட்டு படாதபாடுபடுத்தினர். ஏடிஎம்-ல் பணம் எடுத்ததற்கான அத்தாட்சியைக் காட்டிய  பிறகுதான் அவரை விட்டனர்.  கார்கள் செல்ல முடியாத சந்துகளுக்குள், போலீஸாரின் மோட்டார் சைக்கிளின் பின்னால், மைக்ரோ அப்சர்வர்  உட்கார்ந்துகொண்டு, சந்து சந்தாகச் சுற்றி வருகின்றனர்.

வெயில் தாக்கம், புழுக்கம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க, தெரு ஓரங்களில் படுத்துக்கிடந்தவர்களை மைக்ரோ அப்சர்வர்கள் தட்டி எழுப்பி விசாரணை நடத்தினர். பணம் கொடுக்க யாராவது வந்தார்களா? என்றும் விசாரித்தார்கள். அதற்கு அவர்கள், 'எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து விசாரிங்கள்...' என்று நிதானமாகப் பதில் சொன்னார்கள். ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பகலில் போக்குவரத்து நெரிசல் என்றால், இரவு நேரத்தில் இப்போது பறக்கும் படை, துணை ராணுவப்படை, மைக்ரோ அப்சர்வர்கள் என்று தேர்தல் ஆணையத்தின் ஆட்கள்தான் அங்கு சுற்றிச் சுற்றி வருகிறார்கள். எல்லாம் செட்டில் ஆன பிறகு, படை பட்டாளங்கள் ஆர்.கே.நகர் தொகுதியைச் சுற்றி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!