"தில்லாலங்கடி தினகரன்..?” தினகரன் வழக்குகள் குறித்த முழுமையான ஆவணங்கள் வெளியீடு! | Complete Documentation of Dinakaran's FERA Case Released

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (07/04/2017)

கடைசி தொடர்பு:11:07 (07/04/2017)

"தில்லாலங்கடி தினகரன்..?” தினகரன் வழக்குகள் குறித்த முழுமையான ஆவணங்கள் வெளியீடு!

டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 -ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 'தில்லாங்கடி டி.டி.வி.தினகரன் தான், ஆர் கே நகர் வேட்பாளரா ?' என்ற கையேடு ஒன்றை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 'ஹாவாலா தினகரன்தான் ஆர். கே. நகர் தொகுதியின் வேட்பாளரா ?'என்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. 

இப்போது, சட்டப்பஞ்சாயத்து இயக்கமும் தினகரனின் முறைகேடுகள் குறித்து கையேடு வெளியிட்டிருப்பது மேலும் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதுவரை தினகரன் இழுத்தடித்து வந்த வழக்குகள் மற்றும் அந்நியச்செலவாணி மோசடி,சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எப்படி தப்பினார்? போன்ற விரிவான விவரங்களுடன் கையேட்டை வெளியிட்டுள்ளது சட்டப்பஞ்சாயத்து இயக்கம்.

வாஜ்பாய் அரசுக்கு அழுத்தம் கொடுத்த தினகரன்

ஜெயலலிதா, சசிகலா இருவரும் செய்த ஊழலின் பினாமியாக தினகரன் எப்படி வெளி நாடுகளில் பணத்தைப் பதுக்கினார் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது. அந்நியசெலாவணி மோசடியில் எப்படி ஆரம்பத்தில் அவருடைய பெயர் அடிப்பட்டது என்பது குறித்தும் இந்தக் கையேட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் அதிகாரத்தை தினகரன் தவறாகப் பயன்படுத்தியது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அ.தி.மு.க எம்.பிக்களையும், அமைச்சர்களையும் வைத்து எவ்வாறு  காய் நகர்த்தினார் என்பது குறித்தும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின்  மாநிலப்பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். "அந்நியச்செலாவணி மோசடிவழக்கு ,சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவற்றில் சிக்கியவர் தினகரன்.இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மட்டும், சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டார். இந்த வழக்குகளில் இருந்துதப்பிக்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் குடிமகனாக தன்னை அடையாளபடுத்திக் கொண்டார். அப்படிப்பட்டவர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது, முதல்வராகப் பதவி ஏற்பதற்குதான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்துவரும் தினகரன் தமிழகத்தை ஆட்சி செய்வது எந்த வகையில் நியாயம்.அப்படி ஒரு துரதிஷ்டமான நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், தினகரனின் உண்மையான முகத்தைப் பற்றி ஆர்.கே.நகர் மக்கள் தெரிந்து கொள்வதற்காகவும் இந்தக் கையேட்டை வெளியிட்டுள்ளோம்"என்றார்.  

டி.டி.வி.தினகரன்

கையில்  புரள்வதற்கு கணக்குத் தெரியாதா? 

இந்த கையேடு தயாரிப்பதற்கு தனி குழுவை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் அமைத்திருந்தது. அதில் செயல்பட்டு வந்த சண்முக ஆனந்தனிடம் பேசினோம். "தினகரன் ஹவாலா மோசடியில் சிக்கியதே மிகவும் தற்செயலாக நடந்த ஒன்று. ஜெயின் ஹவாலா மோசடி வழக்கு  மிகவும் பிரபலமானது.அந்த வழக்கு  விசாரணை சென்னையில் நடந்து கொண்டிருந்தபோது அமீர் என்பவருடைய அலுவலகத்தில் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகளில் தினகரனின் பெயர் தென்பட்டது. அதில் இருந்துதான் தினகரனின் அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஆரம்பிக்கிறது.இந்த மோசடி விவகாரம் 1994 -ல் வெளியே வரக்கூடிய சூழல் இருந்தும், அதனை வரவிடாமல்  தடுத்து, தில்லாலங்கடி வேலைகளைச் செய்தவர் தினகரன். இதன் காரணமாக இந்த முறைகேடு  அப்படியே அமுக்கப்படுகிறது. அதன்பின்னர் 1995 -ல் தான் வெளியுலக்குத் தெரிய வருகிறது. அதன்பின்னர்  இந்த வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ள சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் தினகரன் தாவிக் கொண்டிருந்தார். அப்போது அவரைத் தேடப்படும் குற்றவாளியைப் போன்று காவல்துறை கையாண்டு வந்தது. இந்த நிலையில், சுதாகரன் திருமணத்தின் போதுதான், ரகசியமாக போலீசார் அவரைக் கைது செய்னர். அந்தத் தகவல்கள் அனைத்தும் முழுமையாக இந்த கையேட்டில் சேர்த்துள்ளோம் .

அதேபோன்று 1998 -ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொள்ள எந்த மாதிரியான அழுத்தங்களைக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளோம்.அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த தம்பித்துரை இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான வேலைகளில் எப்படி இறங்கினார் என்பது குறித்தும் இதில் இணைத்துள்ளோம். தினகரகன் மீது ஐந்து அந்நிய செலாவணி மோசடி குற்றசாட்டுகள் உள்ளது. ஆனால் இரண்டு புகார்களில் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற மூன்று வழக்குகளை எப்படி மறைத்தார்கள் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளோம். மேலும், ஆங்கில(பிரண்ட்லைன்) இதழ் ஒன்று தினகரனின் முறைகேடுகளைப் பற்றி அப்போது எழுதியிருந்தது. அதில் "கையில் புரளக்கூடியதை என்னவென்று சொல்லத் தெரியாத காரணத்தால் மாட்டிக் கொண்டவர் தினகரன் என்று எழுதியதை இந்த கையேட்டில் சுட்டிக்காட்டியுள்ளோம். சசிகலா மற்றும் ஜெயலலிதா மூலம் வந்த சொத்துக்களைக் கணக்கில் வராத சொத்துக்களாக மாற்றியவர் தினகரன். அப்படிப்பட்ட குற்றவாளியையா? ஆர். கே. நகர்  சட்ட மன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி  எழுப்பியுள்ளோம்" என்றார்.

இரட்டை இலைச் சின்னம் கிடைக்காமல் போனது,சிங்கப்பூர் குடியுரிமை விவகாரம் ,ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் , போன்றவை ஏற்கனவே தினகரனுக்குத் தலைவலியாக இருக்கின்ற சூழலில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விவகாரம் தொப்பியை பிடிக்குமா ?அல்லது தலையை பிடிக்குமா ?என்பது இனி வரும் நீதிமன்ற நாட்களே முடிவு செய்யும்.

-கே.புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்