வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (07/04/2017)

கடைசி தொடர்பு:21:55 (07/04/2017)

வடிவேலு காமெடி போல ‘நிர்வாண மிரட்டல்’ விடுத்த மகளிரணியினர்! (வீடியோ ஆதாரம்)

சோதனைக்குச் சென்ற இடத்தில், தேர்தல் பறக்கும் படையினர் முன்பு, டி.டி.வி.தினகரன் அணி மகளிரணியினர் நிர்வாணமான சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ, இப்போது வைரலாகப் பரவிவருகிறது.

ஆர்.கே.நகர்

நடிகர் வடிவேல் காமெடி, நிஜவாழ்க்கையோடு ஒன்றியணைந்தது. 'வடைபோச்சே' காமெடி பிரபலமடைந்த நிலையில், 'கம்பீரம்' படத்தில் வரும் வடிவேலுவின் போலீஸ் காமெடி, ஆர்.கே.நகர் தேர்தலில் நிஜமாகியிருக்கிறது. தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒருவீட்டில், பணம் பதுக்கிவைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.  அந்த வீட்டில் சோதனை நடத்த, பறக்கும்படையினர் துப்பாக்கிய ஏந்திய போலீஸாருடன் சென்றனர். அங்கு அவர்களுக்கு, சசிகலா அணி மகளிரணியினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகள், அந்த வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்.

இதுகுறித்து பறக்கும்படையினர் கூறுகையில், "எங்களுக்குக் கிடைத்த தகவலின்பேரில் சோதனை நடத்தச் சென்றோம். அப்போது, அங்கு இருந்த பெண்கள், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஒர் அறைக்குள் செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. அதைமீறி உள்ளே செல்ல நாங்கள் முயன்றபோது, வாசலை வழிமறித்த பெண்கள், ஆவேசமாக, சோதனைதானே நடத்தவேண்டும் என்று கூறியபடி சேலையை கழற்றி எறிந்தார். இதை எதிர்பார்க்காத நாங்கள், உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினோம். அதற்குள் ஒரு நடுத்தர வயது பெண், தன்னை முழு நிர்வாணமாக்கிக்கொண்டார்.   திக்குமுக்காடிய நாங்கள், அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டோம். சோதனை நடத்தச் சென்ற இடத்தில் பெண்கள் இப்படி செய்தால், எப்படி எங்களால் கடமையைச் செய்ய முடியும். அதிகார வர்க்கக் குறுக்கீடு, தொண்டர்களின் இப்படியான அடாவடி... இதையெல்லாம் தாண்டித்தான் எங்கள் கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறது!" என்றனர்.

 

 

இதுகுறித்து தினகரன் அணியினர் கூறுகையில், "யாரையோ திருப்திப்படுத்த தேர்தல் ஆணையம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. குறிப்பாக, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்கள் பிடிப்பட்டவுடன் அது, தினகரன் அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மகளிரணியைச் சேர்ந்த பெண், பறக்கும் படையினரை வேலைசெய்யவிடாமல் தடுக்கும் வகையில் நிர்வாணமானதாகச் சொல்லப்படும் சம்பவம்குறித்து விசாரித்துவருகிறோம். சம்பந்தப்பட்ட பெண் மீது சோதனைக்குச் சென்றவர்கள் போலீஸில் புகார் கொடுத்தால், அங்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளியே தெரிந்துவிடும்" என்றனர்.

இதுகுறித்து தேர்தல் வட்டாரத்தில் விசாரித்தபோது, "இந்தச் சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது" என்றனர்.

- எஸ்.மகேஷ்