வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (07/04/2017)

கடைசி தொடர்பு:15:03 (07/04/2017)

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை! மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி

 Ma. Subramanian- Vijaya baskar

'தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது' என்று கூறியுள்ள தி.மு.க எம்எல்ஏ., மா.சுப்பிரமணியன், வருமான வரித்துறை சோதனை, தமிழகத்துக்கு ஏற்பட்ட தனிகுனிவு என்றார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். மேலும், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

அமைச்சர் வீடு மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகுறித்து தி.மு.க எம்எல்ஏ., மா.சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சோதனை, தமிழகத்துக்கு ஏற்பட்ட தனிகுனிவு.  ஏற்கெனவே தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் பிரச்னை, தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அமைச்சர் வீடுகளில் நடத்தப்படும் சோதனையை, மற்ற மாநிலத்தினர் கேவலமாகப் பார்க்கக்கூடிய சூழ்நிலைதான் ஏற்படும்" என்று கூறினார்.