மத்திய அரசின் ஆர்.கே. நகர் வியூகம்... ஐ.டி. ரெய்டு பின்னணி! | This Is the Reason behind the I.T raid

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (07/04/2017)

கடைசி தொடர்பு:13:08 (07/04/2017)

மத்திய அரசின் ஆர்.கே. நகர் வியூகம்... ஐ.டி. ரெய்டு பின்னணி!

ஐ டி ரெய்டு

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் தரப்புக்கு அடுத்த ஷாக் கொடுக்கத்தான் ஒரே நாளில் 30 இடங்களில் ஐ.டி ரெய்டு நடத்தி ஆளும்தரப்பை ஆட்டம் காட்டியுள்ளது மத்திய அரசு. 

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் இருந்தே மத்திய அரசு, தமிழக அரசைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அனைத்து முஸ்தீபுகளிலும் இறங்கியது. அரசுக்கு நெருக்கடி கொடுத்தால்தான் தங்கள் பக்கம் பணியவைக்க முடியும் என்று முடிவுசெய்து அ.தி.மு.க அரசின் கஜானா என்று சொல்லப்பட்ட மணல் அதிபர் சேகர் ரெட்டி நோக்கி ஐ.டி ரெய்டை ஏவியது மத்திய அரசு. அப்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் ஆடிப்போனார்கள். 

அ.தி.மு.க-வில் முன்னணியில் இருந்த பல அமைச்சர்கள் சேகர் ரெட்டியின் நண்பர்களாகவும், தொழில் பார்ட்னர்களாகவும் இருந்தனர். சேகர் ரெட்டியைத் தொடர்ந்து, அவருடைய கூட்டாளியான  புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு வருமானவரித் துறை குறிவைத்து ரெய்டு நடத்த... அமைச்சரான விஜயபாஸ்கர் பதற்றம் அடைந்தார். ஆனால், அப்போது விஜயபாஸ்கரைக் கண்டும் காணாமல் விட்டுள்ளது வருமானவரித் துறை. ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியபின் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக் கூவத்துாரில் அடைத்துவைத்திருந்தனர். கூவத்துாரில் எம்.எல்.ஏ-க்களைத் தங்கவைத்து அவர்களுக்கு வேண்டிய அனைத்துச் செளகரியங்களையும் செய்ததன் பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்தார் என்பதை உளவுத்துறையினர் மத்திய அரசின் காதில் போட்டுவைத்தனர். அப்போது முதல் ஐ.டி ரெய்டு எப்போது வேண்டுமானாலும் தம்மீது ஏவப்படலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் விஜயபாஸ்கர் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

ரெய்டு

அதன் தொடர்ச்சியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வர, களத்தில் முன்னிலையில் நின்றார் விஜயபாஸ்கர். ''ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பு பணமழையில் மக்களை நனையவைக்கிறார்கள்; தேர்தல் அதிகாரிகள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்” என்று எதிர்க் கட்சிகள் புகார் மீது புகாராக டெல்லிக்கும், தமிழகத் தேர்தல் ஆணையருக்கும் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆனால் ஆர்.கே.நகரில் பணவிநியோகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு தொகுதியின் தேர்தலில் முதல்முறையாக ஐந்து பார்வையாளர்கள், மேலும் சிறப்புப் பார்வையாளர் ஒருவர், முப்பது நுண் பார்வையாளர்கள் எனப் பெரும் படையையே ஆர்.கே.நகர் பணிக்கு அனுப்பியது மத்திய தேர்தல் ஆணையம். ஆனால், கடந்த இரண்டு தினங்களாகக் காலை நேரத்தில் தினகரன் தரப்பினர் ஓட்டுக்கு 4,000 ரூபாய் எனப் பண விநியோகம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தேர்தல் ஆணையத்துக்கும் பெரும் தலைவழியை இது ஏற்படுத்தியது. 

பணம் கொடுப்பதைத் தடுக்க முடியவில்லை. சரி, பணம் எங்கிருந்து வருகிறதோ... அதை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தபிறகுதான், ஆர்.கே.நகர் தேர்தல் செலவை முன்னிலையில் நின்று பார்ப்பது யார் என தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நோட்டமிட்டதில் சிக்கியவர்தான் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அனைத்து அமைச்சர்களிடமிருந்து இவரே பெரும் தொகையை வசூல் செய்து தொகுதி முழுவதும் விநியோகம் செய்துவருவதாக ஆதாரத்தைக் கைப்பற்றியது வருமானவரித் துறை. அதோடு, நேற்றைய தினம் (07-04-17) சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை தினகரன் வீட்டுக்கு அழைத்துவந்ததும் விஜயபாஸ்கர்தான் என்கிறார்கள். இதன் பின்னணியில் பெரும்தொகை கைமாறியதையும் வருமானவரித் துறையினர் மோப்பம் பிடித்துள்ளனர். அதன்பிறகு அமைச்சர் வீட்டைக் குறிவைத்து ரெய்டு நடத்த நேரம் குறித்துள்ளார்கள் வருமானவரித் துறையினர். சென்னையில் உள்ள அதிகாரிகளோடு டெல்லியில் இருந்தும் சில அதிகாரிகள் சென்னை வந்து அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து ரெய்டு நடத்தும் பாயின்ட்களை முடிவு செய்துள்ளனர்.


 விஜயபாஸ்கர்சென்னை, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் உள்ளே நுழையத் திட்டமிடப்பட்டு கச்சிதமாக காய்நகர்த்தி சோதனை ஆரம்பித்துள்ளார்கள். ஆர்.கே.நகரில் ஆதரவு தெரிவித்ததன் பின்னிணியை நோண்டத்தான் சரத்குமார் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 25 இடங்களில் இந்த ரெய்டு தற்போது நடைபெற்று வருகிறது. அவருக்குத் துணையாக இருந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. விஜயபாஸ்கர், எப்போதும் தனது அரசியல் நண்பர்களைவிடத் தன்னுடைய துறை அதிகாரிகள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பார். அந்த விவரங்களைத் தெரிந்துகொண்ட வருமானவரித் துறையினர் சுகாதாரத் துறை அதிகாரிகள் வீடுகளில்தான் பணம் பதுக்கிவைக்கபட்டிருக்கிறது என்று கூறி துறையின் முக்கிய அதிகாரிகள் வீடுகளிலும் ரெய்டு நடத்தியுள்ளார்கள். 

இந்த ரெய்டினால் தினகரன் தரப்பு ஆடிப்போய் உள்ளதாம். காரணம், ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு சாரதியாக இருந்ததே விஜயபாஸ்கர்தான். விஜயபாஸ்கரை இப்போது முடக்கியதால் அடுத்து என்ன செய்வது என்று தினகரன் தரப்பு யோசித்து வருகிறது. இரண்டு நாட்களாக ஆர்.கே.நகரில் விறுவிறுப்பாக நடந்த பண விநியோகத்தினால், தொப்பிக்கு அங்கு மவுசு கூடிவந்தது. ஆனால், இப்போது அதற்கும் சிக்கல் வந்துவிட்டது. இனியும் வேறு வழியில் பண விநியோம் நடந்தால் ஆர்.கே.நகர் தேர்தலையே நிறுத்தும் முடிவைத் தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று தெரிகிறது. 

 

 

- அ.சையது அபுதாஹிர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்