அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை ஏன்? தளவாய் சுந்தரம் பகீர்!

 Thalavai Sundaram

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்படும் சோதனைகுறித்து, முன்னாள் அமைச்சரும்  டெல்லிக்கான தமிழக அரசுப் பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம், பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர். தகவல் அறிந்து, டெல்லிக்கான தமிழக அரசு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகளும் முறையாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் வெற்றிபெறுவது உறுதி எனத் தெரிந்துக்கொண்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். விஜயபாஸ்கர், தன்னுடைய பூத்திலே சிறந்த முறையில் செயல்பட்டார் என்பதைத் தெரிந்துக்கொண்டு, அவருடைய தேர்தல் வேலையைத் தடைசெய்யும் விதமாக, சோதனை நடத்தப்பட்டுவருகிறது. எத்தனையோ நாள்கள் இருக்கிறது. இந்தச் சோதனை, தேர்தலுக்கு முன்போ... தேர்தலுக்குப் பின்போ நடத்தியிருக்கலாம். தேர்தல் நடக்கக்கூடிய வேலையில், இந்த இயக்கத்துக்கு கெட்டப்பெயர் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயலை வருமானவரித்துறை அதிகாரிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபோன்ற செயல்களைச் செய்யும்போது, ஒரு கட்சியை டிமானிடைசேஷன் பண்ணலாம் என்பது மாபெரும் தவறு. இவர்கள் எதற்காக வந்தார்கள்; எந்தச் சூழ்நிலையில் வந்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஜெயலலிதாவின் இயக்கத்தின் வெற்றி வாய்ப்பு தெரிந்தவுடனேயே தேர்தல் ஆணையம் பல்வேறு அதிகாரிகளை மாற்றிய பிறகும் வருமானவரித்துறை அதிகாரிகள் நேரடியாக ஒரு அமைச்சர் வீட்டிலேயே புகுந்துகொண்டு, நாங்கள் சோதனைசெய்கிறோம் என்கிறார்கள்.

ஆறு மணியில் இருந்து இதுவரை சோதனைசெய்கிறார்கள். என்ன சோதனைசெய்கிறார்கள். அமைச்சர் வீட்டில் எதுவும் இல்லை. சோதனையில் ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால், அமைச்சரை வருமான வரித்துறையினர் மிரட்டுகிறார்கள். இதுபோன்ற மிரட்டலுக்கு அ.தி.மு.க-வும் சரி, தொண்டர்களும் சரி ஒருபோதும் பயந்தது கிடையாது" என்று கூறினார்.

மத்திய அரசு மிரட்டுகிறது என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தளவாய் சுந்தரம், மத்திய அரசு கொடுக்கிறாங்க, மாநில அரசு கொடுக்கிறாங்க என்பது அல்ல. இது மாநில அரசு. உங்களுக்கே தெரியும் அல்லவா? (பத்திரிகையாளர்களைப் பார்த்து). வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தச் சூழ்நிலையில் சோதனைநடத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றார்.

சட்டமன்ற விடுதிகளில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே... என்ற கேள்விக்கு, அனைத்துமே உண்மைக்குப் புறம்பான செய்தி என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!