ஆர்.கே நகரில் ‘சாமி கும்பிட்டாச்சா’னு கேட்டா என்ன அர்த்தம் தெரியுமா?

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 12-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டி.டி.வி. தினகரன், மருது கணேஷ், மதுசூதனன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைத்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகரிக்கும் பணப் பட்டுவாடா

ஆர். கே. நகருக்கு விசிட் செய்த போது, 'ஓட்டுப் போடுறதுக்கு காசு வாங்குறாங்களே' என புலம்பும் மக்களை பார்க்க முடிந்தது. 'சிலர் பணத்தை வாங்கினாலும் என் விருப்பப்படியே வாக்களிப்பேன் ' என்கின்றனர். 'கிடைக்கும் பணத்தை ஏன் விடணும்' என்பது பலரது கருத்து. புதிதாக யார் தலை தெறிந்தாலும்... 'பணம் கொடுக்கத்தான் வந்திருக்குறாங்க’ என, கருதும் மக்களையும் பார்க்க முடிந்தது. இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமே பணம் வாங்காமல் நேர்மையாக வாக்குச் செலுத்த விரும்புகின்றனர். இளைஞர்கள் மத்தியில் ஒரு வித சலிப்பும் அரசியல்வாதிகள் மேல் வெறுப்பு இருப்பதையும் அறிய முடிகிறது. எந்தக் கட்சியிலும் இல்லாவிட்டாலும் தினமும் 500 ரூபாய் வாங்கிக் கொண்டு யாருக்காவது வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடும் மூதாட்டிகளையும் ஆர்.கே நகரில் இப்போது பார்க்கலாம்.

ஆர்.கே. நகரில் இப்போது அறைகள் கிடைப்பது குதிரைக் கொம்பு. சிறிய அறை கிடைத்தால் கூட தினகரன் தரப்பு ஆள்கள் விடுவதில்லை. அங்கேயே தங்கிக் கொண்டு கவனிப்பைத் தொடங்கி விடுகின்றனர். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வாடகை கொடுப்பதற்கும் அவர்கள் தயாராக உள்ளனர். 15 நாள் தங்கினால் 15 ஆயிரம் என முன் கூட்டியே தந்து விடுகிறார்கள். பணத்தை முன்னரே தந்து விடுவதால் பலரும் தங்கள் வீட்டில் பயன்பாடு குறைவாக ஒரு அறை இருந்தால் அதை ஒதுக்கிக் கொடுத்து வருகின்றனர். 

வெளியூரில் இருந்து வந்திருக்கும் கட்சிக்காரர்களுக்கு உதவி செய்ய உள்ளூர் கட்சிக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியில் பெண்களும் உள்ளனர். பணப் பட்டுவாடா நடக்கும்போது, தேர்தல் பார்வையாளர்கள், போலீசார் வருகையைக் கண்காணிப்பது இவர்களது பொறுப்பு. 

ஆர்.கே.நகரில் பண விநியோகம்

வெளியூர் அ.தி.மு.க பிரமுகர்  ஒருவர் குறைந்தது 50 வாக்காளர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும். இவர்களுக்கு உள்ளுர் கட்சிக்காரர்கள் பக்கபலமாக இருப்பர். உள்ளூர் ஆட்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்களாக இருப்பர் என்பதால் இந்த ஏற்பாடு. தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும் படையினர் கண்கொத்திப் பாம்பாக சுற்றி வந்தாலும் சங்கேத வார்த்தையைப் பயன்டுத்தி பணப்பட்டுவாடா செய்கிறார்கள். செல்வத்தை 'லட்சுமி'  என்பார்கள். இப்போது ஆர்.கே. நகரில் 'சாமி கும்பிட்டாச்சா' என, அரசியல்வாதிகள் மக்களைப் பார்த்துக் கேட்டால், 'பணம் கிடைத்து விட்டதா' என்று அர்த்தம். பல இடங்களில் மக்களும்  'ஆமா... சாமி கும்பிட்டாச்சு' என பதில் சொல்கிறார்கள். பணம் கிடைக்காதவர்கள், 'சாமி இன்னும் வரலையே...' 'சாமியை எப்போ பார்க்க முடியும்' என சங்கேதமாக கேட்கிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் மட்டுமல்ல வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதற்காக டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனை சம்பந்தப்பட்ட கடைகளில் கொடுத்தால் பொருள்கள் கொடுத்து விடுகிறார்கள். சில இடங்களில் கிஃப்ட் வவுச்சரும் வழங்கப்படுகிறது. ஆர். கே. நகரில் வாக்கு ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் பட்டுவாடா செய்வதாக சொல்லப்படுகிறது. வேறு எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், தேர்தல் கமிஷனும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க பார்வையாளர்களை அதிகமாக களம் இறக்கியுள்ளது. ஆனாலும் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை. 

ஆர்.கே. நகரில் மொத்தமுள்ள 2 லட்சம் வாக்காளர்களில் ஒரு லட்சம் பேருக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

-எம்.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!