வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/04/2017)

கடைசி தொடர்பு:21:00 (07/04/2017)

‘இனி பட்டினி சாவுதான்..!’ பத்து நாட்களாக தகிக்கும் காவிரி டெல்டா

காவிரி டெல்டா

குறுவையும் போச்சு, சம்பாவும் போச்சு, தாளடியும் போச்சு கூடவே எங்கள் வாழ்வாதாரமும் போச்சு, இனி போவதற்கு ஒன்றுமில்லை, எங்கள் உயிர் மூச்சைத்தவிர, என்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலையில் வாகனங்கள் இரைச்சல், வெயில், பனி, பட்டினிகளுக்கு மத்தியில் இரவு, பகலாக போராடி வருகிறார்கள், காவிரி உரிமை மீட்புக்குழுவினர்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒற்றை தீர்ப்பாயத்தை ரத்து செய்ய வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ம் தேதி தொடங்கிய போராட்டம் 11-வது நாளான இன்று வரை நீடித்து வருகிறது. தமிழகம் முழுவதிலிம் இருந்தும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா இயக்குநர்கள், விவசாய அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

நூதன போராட்டங்கள்:

ஆற்றில் மணல் அள்ளியதால் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதை எடுத்துக்காட்டுவதற்காக கூழாங்கற்களைத் தின்னுதல், வேப்பிலையைக் காதில் சுற்றிப்போராட்டம், தலையிலிருந்து கால் வரை சேற்று வாரி பூசிக்கொண்டு போராட்டம், மண்சட்டி ஏந்தி போராட்டம், பறை, தப்பாட்டம், விவசாயம் தொடர்பான கிராமியப் பாடல்களை பாடியும், நம்மாழ்வார் முகமூடி அணிந்தும் ஒவ்வொரு போராட்டம் விவசாயத்தையும், விவசாய நிலங்களும் தண்ணீர் இல்லாமல் வாடுகிறது. இப்படியே சென்றால் எங்களின் நிலைமை இப்படித்தான் போகுமென்று தொடர்ந்து போராட்டம் செய்து வருகிறார்கள் போராட்டக்குழுவினர்.

சேறு பூசி நூதன போராட்டம்

அச்சுறுத்தும் அரசு அதிகாரிகள்:

"போராட்டத்தைக் கைவிடுங்கள், உங்கள் கோரிக்கை என்னவோ அதை எழுதிக் கொடுங்கள் அதை நிறைவேற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்று மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை கேட்டுக்கொண்டதன் பேரில், 'காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் ரத்து செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை எழுதி கொடுத்துள்ளனர். உங்கள் கோரிக்கை மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை என்பதால் போக்குவரத்திற்கு இடஞ்சலாக இருக்கிறது. ஆகையால், நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், அதிகாரிகள். ஆனால், போராட்ட குழுவினரோ மத்திய அரசு தீர்க்கமான முடிவை அறிவிக்கும் வரையில், எங்கள் போராட்டம் தொடரும் என்று கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். காவிரிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மாணவர்கள் போராட்ட பகுதிக்கு வந்தால், அவர்களை அழைத்து எதற்காக, எங்கு வந்தீர்கள் என்று காவல்துறையினர் கேள்வி கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். ஒரு பல்கலைக்கழகம் மாணவர்களை போராட்டத்திற்கு அனுப்பியிருக்கிறது. இதை ஸ்மெல் செய்த காவல்துறையினர் அப்பல்கலைக்கழத்திற்கு எதிராக நின்றுகொன்று பல்கலைக்கழகத்திற்குள் சென்றுவிடுங்கள் என்று மாணவர்களை மிரட்டி வேறுபாதையில் திசை திருப்புகிறார்கள்.

போராட்டம் வெடிக்கும்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் த.வெள்ளையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க தலைவர் ப.சண்முகம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர் பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்பி.ராஜா, ஒரத்தநாடு எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், தீபாவின் கணவர் மாதவன், இயக்குநர்கள் மு.களஞ்சியம், கௌதமன் ஆகியோர் வந்து ஆதரவு தெரிவித்தனர். அனைவரும் "மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றால் போராட்டம் மிகப்பெரியளவில் வெடிக்கும்" என்றனர்.

நூதன போராட்டம்


தினம் தினம் வந்துகுவியும் பொதுமக்கள்:

கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், மன்னார்குடி, கும்பகோணம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி உள்பட தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நெடுவாசல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து போராட்ட குழுவினர் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு இரவு, பகலாக சேர்ந்து போராடி வருகிறார்கள்.

மாணவர் இயக்கத்தின் நூதன போராட்டம்:

கூடிப்பிரியேல் மாணவர் அமைப்பினர் தினந்தோறும் வந்து நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மண்டை ஓடு மாஸ்க் அணிந்து, பிரதமர் மோடி, நீர்பாசன அமைச்சர் உமா பாரதியிடம் மனு கொடுப்பது போன்று நூதன போராட்டத்தை நடத்தினர். பின்னர்,  தமிழ்நாட்டில் கங்கை நதிநீர் கிடைக்கிறது, காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க  வழி இல்லையே என கோஷங்களை எழுப்பி நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தஞ்சையை சுற்றுவட்டார பகுதியிலிருந்து கிராம மக்கள் தினம் ஒவ்வொரு கிராமத்தினர் போராட்டக்காரர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகளை வழங்கி வருகின்றனர். மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்து மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என்கிறார்கள், காவிரி உரிமை மீட்புக்குழுவினர்.

நம்மாழ்வார் முக மூடி அணிந்து நூதன போராட்டம்

காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனிடம் பேசினோம், "இந்தியா முழுமைக்கும் ஒற்றை தீர்ப்பாயம் சாத்தியமாகும் ஆகுமா? அந்த சட்டம் நிறைவேற்றிவிட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த முடியாது. காவரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு 2007ல்  வெளீவந்தது. 2013-ம் ஆண்டு அதை அரசிதழில் வெளியிட செய்தது. ஆனால், காவிரி மன்ற இறுதித் தீர்ப்பினை மோடி அரசு ஏன் தவறவிட்டது. காவிரி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு  உச்சநீதிமன்றத்திற்கு இணையானது. புதிதாக கொண்டு வந்துள்ள ஒற்றை தீர்ப்பாயத்தின் தீர்ப்புப்படி, காவிரிக்கான தீர்ப்பை நிறைவேற்றுவார்களா? என்பது சந்தேகமே. தண்ணீரை தடுத்துவிட்டால் விவசாயிகள், நிலங்களை தரிசு போடுவார்கள், விவசாயிகளே நிலத்தை விட்டுவிட்டு வெளியேறிவிட்டால், நாம் நிலங்களை குறைந்த காசு கொடுத்து வாங்கி, அதை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுத்துவிடலாம் என்பதுதான் மோடி அரசின் திட்டம். இது  குஜராத்திலும் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை வைத்திருப்பவர்தான் மோடி, ஆகையில் தமிழ்நாட்டில் எதையும் செய்ய தயங்கமாட்டார்.

பன்னாட்டு வேட்டை நிறுவனங்களுக்கு கதவை திறந்துவிடுவதில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒரே நிலைதான். அதனால், இதுபோன்ற திட்டங்களை காங்கிரஸ் கட்சி எதிர்க்காது. தமிழகத்தை காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இனவிரோததத்தோடு பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்கிறது. தமிழக மீனவனை சுட்டுக்கொன்றால் மத்திய அரசு ஒரு கண்டனம் கூட தெரிவிக்க மறுக்கிறது. தமிழன் என்ன இளிச்ச வாயனா? தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களை கண்டு 300க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால், தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆயிரம், பத்தாயிரம் என அதிகரிக்க தொடங்கும். மெல்ல, மெல்ல பட்டினியால் செத்தார்கள் என்ற நிலை வரும். அதை வரவிடாமல் தடுப்பதுதான் எங்கள் நோக்கம். எங்கள் நோக்கம் நிறைவேறுவரை எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் தொடர்ந்து இதே இடத்தில்தான் போராடப்போகிறோம்" என்றார்.

டெல்டாவில் காவிரிக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கான க்ளைமாக்ஸ் நெருங்கிக்கொண்டிருக்கிறது..!
 

 - ஏ.ராம், படங்கள் : கே.குணசீலன்


டிரெண்டிங் @ விகடன்