உடையில் வெள்ளை, பேச்சில் பச்சை ! ஆர்.கே.நகர் தேர்தல் அவலம்! #SpotReport


                                               ஆர் கே நகர்   அ.தி.மு.க.வின் இரு அணிகள்.                                                 

சென்னை ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கும், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நடப்பது தெரிந்தகதை. தெரியாத கதை ஒன்றும் உண்டு. போட்டியைத்தாண்டி, இருதரப்பும் தனிப்பட்ட முறையில்  மோசமான வார்த்தைகளால் பொதுமக்கள் முன்னிலையிலேயே ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதுதான் அது. ஆர்.கே.நகர்த் தொகுதியின் மேற்குப்பகுதியில் உள்ள நேதாஜிநகரில் டி.டி.வி. தினகரன் அணி, அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் செயல்படுகிறது. ஜெயலலிதா கடந்தமுறை போட்டியிட்டபோது நேதாஜி நகர்ப்பகுதி ஓ.பி.எஸ். கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப்போது, இந்தப் பகுதியை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ரவீந்திரநாத் மற்றும் அவருடைய ஐ.டி.விங் நண்பர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் இரண்டு அணியினருமே, தினமும் காலை 8 மணியளவில் ஏரியாவுக்குள் ஆஜராகி விடுகிறார்கள். கருணாநிதி நகர், சஞ்சய்காந்தி நகர், சாஸ்திரி நகர் பகுதிகளைக் கடந்து, நேதாஜிநகரின் கிழக்குப்பகுதி எல்லைவரை தினகரன் ஆட்கள் சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். மேற்குப்பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் ஆஜராகி விடுகிறார்கள். இரண்டு பிரிவினரும், வெள்ளை வேட்டி, வெள்ளைச்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், மக்களை முகம் சுளிக்க வைக்கின்ற ரகமாக உள்ளது.தினகரன் ஆட்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் தயார் நிலையில் இருக்கும் ஓ.பி.எஸ். ஆட்கள், கிழக்கில் இருந்து மேற்காக எதிர்புறம் நடந்துசென்று குறிப்பிட்ட இடத்தில் நின்று கொள்கிறார்கள். நேதாஜி நகருக்குள் ஏதோ எல்லைப்பிரச்னை இருப்பதுபோல் இருதரப்பினரும் இருபது அடி தூரத்திற்குள் இருஅணியினரும் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்தபடி நின்று கொள்கிறார்கள். நேரடியாகத் திட்டாமல், அவர்கள் மறைமுகமாக ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் படலம் இங்குதான் ஆரம்பிக்கிறது. ஓ.பி.எஸ். அணியில் உள்ள சிலர், "ஏண்டா டேய், கொலைகாரப் பாவிங்களா, ஒரு உயிரை 75 நாளா 'வெச்சு 'செஞ்சிருக்கீங்களே, உங்களை எத்தனை நாளைக்குடா 'வெச்சு' செய்யறது?" என்று ஆரம்பிக்கின்றனர். 

           ஆர் கே நகர் கட்சிகளின் பிரசாரக் காட்சி                                                

தினகரன் அணியினரோ பதிலுக்கு, "கட்சியை மொத்தமா மூட்டைகட்டி ஸ்டாலினுக்குப் பாதியும், மோடிக்கு மீதியும் வித்த தரகரின் ஆதரவாளர்கள்தானடா நீங்க?" என்று பதிலடி கொடுக்கின்றனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும்வரை இவர்கள், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் காட்சிகளை தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது.வெயில் ஏற, ஏற ஒவ்வொரு ஆளாக அவரவர் தங்கியுள்ள தேர்தல் பணிமனைக்குத் திரும்பி விடுகிறார்கள். மாலையில் பிரசாரத்துக்குப் போகும்போது இவர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதில்லை. அவரவர் சின்னங்களின் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இரவு நேரங்களில் தொகுதியின் பல்வேறு இடங்களில் இருதரப்பும் சந்திக்க நேரிட்டாலும், அப்போதெல்லாம் இவர்கள் மோதிக் கொள்வதில்லை. அதிகாலையில் வாக்கிங் போகும்போதும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். ஒன்றாகத் தேநீர் அருந்துகிறார்கள். காலை எட்டு மணிக்கு, வார்த்தைகளால் மோதிக் கொள்வது, இவர்கள்தானா? என்று கேட்கும் அளவுக்கு மாலை நேரத்தில் இவர்களின் செயல்பாடு இருக்கிறது. நேதாஜி நகர்தான் என்றில்லை. தொகுதியின் எல்லா இடங்களிலும், இப்படித்தான் வம்புபேசத் தொடங்குகிறார்கள். யார் முதலில் ஆரம்பிப்பது என்பதை தீர்மானிப்பது, காலையில் சீக்கிரமாக அந்தப் பகுதிக்கு யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஆர்.கே.நகர்த் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடப்பதாக வரும் புகார்களும், வெளியூர் ஆட்கள் நிரம்பிவழிவதை உறுதிப்படுத்தும் சம்பவங்களும் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம், தொகுதிமக்களை முகம்சுளிக்கச் செய்யும் வகையிலான இதுபோன்ற அருவெறுக்கத்தக்க பேச்சுகள் அமைந்துள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது அன்றாடப் பணிகளைக் கவனிக்க முடியவில்லை என்கின்றனர் அப்பகுதிவாசிகள். குறிப்பாக, இல்லத்தரசிகள், மாணவ-மாணவிகள், கூலித் தொழிலாளிகள் என அனைத்துத் தரப்பினரும் இரு அணிகளைச் சேர்ந்த வாய்ப் போர் வீரர்களின் கொச்சையான  பேச்சுகளுக்கு நடுவே தங்கள் பிழைப்பை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அருவெறுக்கத்தக்க இந்த பேச்சுகளின் உச்சக்கட்டமாக, கடந்த 6-ம் தேதி அன்று, வெயிலின் தாக்கம் 105 டிகிரியைத் தாண்டி தகித்துக் கொண்டிருந்தது... அன்று மாலை வழக்கம்போல் வெயில் தணிந்து காற்று வீசும் என்று எதிர்பார்த்த நிலையில்தான், தினகரன் அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இரும்புக்கம்பியால் தாக்கிக் கொண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, வாக்குப்பதிவு நடைபெறும்நாள் வரை, தினமும் என்ன நடக்குமோ என பொதுமக்களுடன் போலீஸாரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

-ந.பா.சேதுராமன்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!