விஜயபாஸ்கரிடம் வருமான வரி சோதனை - இந்தத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையின் தீடீர் சோதனை குறித்து தமிழக தலைவர்கள் ரியாக்‌ஷன் என்ன? அதைப் பார்ப்போம்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: ''ஊழல் ஏதோ திடீரென்று நடைபெற்றது அல்ல. கடந்த ஐந்து வருடமாக அ.தி.மு.க ஆட்சியிலும் நடந்தது. இப்போதைய அ.தி.மு.க ஆட்சியிலும் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை வருமான வரித்துறை சோதனைக்குள்ளான கரூர் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, ராம்மோகன்ராவ் உள்ளிட்ட அனைவர் மீதும் எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வருமான வரித்துறை சோதனைகள் ஏதோ அம்மையார் ஜெயலலிதா மரணம் போலவே மர்மமாக நீடிக்கிறது.

 

விஜயபாஸ்கர்

இன்றைக்கு சுகாதாரத்துறை செயலாளர் வரை நீளும் வருமான வரித்துறை சோதனை மணல் மாபியா சேகர் ரெட்டி விஷயத்தில் ஏன் பொதுப்பணித்துறை அமைச்சர், செயலாளர்கள் வரை நீளவில்லை? மிகச்சிறந்த தமிழக அரசின் நிர்வாகம் இப்படி ஊழல் அமைச்சர்களால் இன்று நிலை குலைந்து இந்திய மாநிலங்களில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தருகிறதே என்பதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. 
ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு முதலமைச்சர்களாக இருந்தவர்கள், அவரது மறைவுக்கு முன்பு அமைச்சரவையில் இரண்டாவது அந்தஸ்தில் இருந்து ஊழலுக்கு துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் சாம்ராஜ்யத்துக்கும் முடிவு கட்டும் வகையில் வருமான வரித்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்".
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: ''தமிழ்நாட்டில் பதவியில் உள்ள அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அண்மைக்காலத்தில் இதுவே முதல் முறையாகும். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மீது குற்றச்சாட்டுகள் இருந்தபோது, சென்னை தலைமைச் செயலகத்தில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது. இப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி, பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இவை தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகம் என்றாலே ஊழல் மாநிலம் என்ற அவப்பெயர் மீண்டும் ஒருமுறை ஏற்பட்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி முன்வரவில்லை. தமிழக அரசு ஊழலை ஊக்குவிப்பதற்கு இதுவே உதாரணமாகும்.
தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம் தருவதுதான் அனைத்து ஊழல்களுக்கும் அடிப்படை என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காகவே கூடுதலாக ஊழல் செய்யும் அவலம் இப்போது நடைபெற்றிருக்கிறது. ஓட்டுக்குப் பணம் தருவதற்காக ஊழல் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்யவேண்டும்''.
பி.ஜே.பி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை: ''வருமான வரித்துறை சோதனை என்பது ஆதாரம் இல்லாமல் நடக்காது. வருமானவரித்துறை அதிகாரிகள் சரியாக கண்காணித்து, ஆதாரம் கிடைத்த பிறகுதான் சோதனை நடத்துவார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி சோதனை அல்ல. எனவே, பி.ஜே.பி மீது வீண் பழி சுமத்தக் கூடாது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கருப்பு பணத்திற்கு எதிரானது. லஞ்ச, ஊழலுக்கு எதிரானது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்''.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்காரசர்: ''தவறாக பணம் சேர்த்து உள்ளவர்கள் யாராக இருந்தாலும் மத்திய அரசு, வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை. ஆனால், தேர்தலை முன்னிட்டு சிலருடைய வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்வது அரசியல் உள்நோக்கத்துடன் சில காரியங்களை செய்வதாக சந்தேகம் எழுந்து உள்ளது. பல அணிகள் ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டு கேட்டு வரும்போது ஒரு கட்சியை மட்டும் குறிபார்த்து சோதனை நடத்துவது ஏன்? இதன் மூலம் மத்திய அரசு சொல்ல வருவது என்ன? அவர்கள் என்ன காரியத்தை சாதிக்க துடிக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துவைத்து இருக்கிறார்கள்''.
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம்: ''ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், எங்களின் தேர்தல் வேலையை தடை செய்யும் வகையில், அமைதியாக தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். எங்கள் கட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கும் வகையில் சிலர் இந்தச் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். அவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்களின் வெற்றி வாய்ப்பு தெரிந்தவுடன், இதுபோன்று அவர்கள் நடந்து கொள்வது தவறு.   விஜயபாஸ்கரை சோதனை என்ற பெயரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டலுக்கு எங்கள் கட்சி தொண்டர்கள் யாரும் பயப்பட மாட்டோம். இந்த சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது''.
மார்க்சிஸ்ட்  மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: ''வருமான வரித்துறையின் சோதனை என்பது எப்போதுமே ஒரு நாள் மட்டும் பேசப்பட்டுவிட்டு பிறகு கிணற்றில் போட்ட கல்லாக ஆகிவிடுகிறது. கரூரில் அன்புநாதன் வீட்டில் நடந்த சோதனைக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட பல இடங்களில் நடந்த சோதனையில் யாருடைய பணம் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்பது போன்ற தகவல்களை சம்பந்தப்பட்ட துறையினர் உடனே வெளியிடவேண்டும். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்''.

- எஸ்.முத்துகிருஷ்ணன்


-
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!