வெளியிடப்பட்ட நேரம்: 07:41 (09/04/2017)

கடைசி தொடர்பு:09:47 (09/04/2017)

“நான் இவரிடம்தான் பணம் கொடுத்தேன்...!” : விஜயபாஸ்கர் வாக்குமூலம்

பன்னீர்செல்வம்

நேற்று (08.04.2017) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பிறந்த நாள்! பாவம், மனுஷன் ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார். விஜயபாஸ்கரின் வீடு, ஆபீஸ்... என்று ஆரம்பித்து அவரது நண்பர்கள், உறவினர்கள், உதவியாளர்கள் ஆகியோரது வீடுகள் மற்றும் அவரது சொந்தக் கிராமத்து வீடு... என்று மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து, ரெய்டின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறி சில டாக்குமெண்டுகள் தொலைக்காட்சிகளில் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

லீக் செய்தது யார்?

தொலைக்காட்சிகளில் வெளியான டாக்குமென்டுளில், 'ஆர்.கே நகர் தொகுதியில் முதல்வர் உள்ளிட்ட 6 அமைச்சர்கள், 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை... யார் யாருக்கு எவ்வளவு பணப் பட்டுவாடா செய்தார்கள்...' என்பது போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த டாக்குமென்டின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விவாதம் கிளம்பியிருக்கிறது. இந்த டாக்குமென்ட்டை வருமான வரித்துறையினர்தான் லீக் செய்து உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், 'இந்த ஆதாரத்தை விளம்பரப்படுத்தி ஆர்.கே நகர் தேர்தலை தள்ளிவைக்கப்போகிறார்கள்' என்றும் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் தினகரன் அணியினர். 'இந்த டாக்குமென்டு வெளியானதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று வருமானவரித்துறையினர் மறுத்துவருகிறார்கள். 

'யாரிடம் பணத்தை கொடுத்தேன்?' விஜயபாஸ்கர் பகீர் வாக்குமூலம்..

விஜயபாஸ்கர்ரெய்டின் போது நடந்த காமெடி சம்பவம்... வருமானவரித்துறையின் உயர் அதிகாரி ஒருவர், 'இதில் குறிப்பிட்டுள்ள பணத்தை யார்? யாருக்கு கொடுத்தீர்கள்? என்று சொல்லுங்கள்' என்றாராம். விஜய பாஸ்கர் சிரித்துக்கொண்டே, 'நான் உண்மையை சொன்னால் அப்படியே பதிவு செய்வீர்களா?' என்று கேட்டாராம். 'சொல்லுங்கள்...நிச்சயமாக செய்கிறோம். சொல்லிவிட்டால், உங்களை விட்டுவிடுகிறோம்' என்றாராம். 'ஒ.கே. நான் சொல்வதை அப்படியே பதிவு செய்யுங்கள். நான் கொடுத்தது ஒ.பன்னீர் செல்வத்திடம்தான்' என்றாராம் கூலாக. அதைக்கேட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி ஆகிவிட்டார்களாம்.

பி.ஜே.பி. மேலிட பிரஷர்

கூவத்தூரில், சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ-க்களை அடை காத்தார்கள் அல்லவா? அப்போது எம்.எல்.ஏ-களுக்கு மூன்று சி-யும், மூன்று கிலோ தங்கமும் தட்சணையாக வழங்கப்பட்டதாக ஒ. பன்னீர்செல்வம் கோஷ்டியினர் குற்றம்சாட்டினர். இதேபோல், சில நாட்களுக்கு முன்பு, ஆர்.கே நகரில் தினகரன் சார்பாக தலைக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல்கட்டமாக பணப் பட்டுவாடா நடந்ததாகவும் எதிர்க்கட்சியினர் புகார் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கும் முன்போ அல்லது நடக்கும் போதோ... வருமானவரித்துறையினர் அரசியல் உள்நோக்கத்தோடு கண்டுங்காணாமல் இருந்தார்கள். இப்போது திடீரென ரெய்டில் இறங்கியதற்கு காரணம் பி.ஜே.பி. அரசின் ரகசிய உத்தரவுதானாம்.

விஜயபாஸ்கருடன் சுப்பிரமணியன் குறி வைக்கப்பட்டது ஏன்?

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் முன்னணி வரிசைக்கு வந்துகொண்டிருப்பவர் அமைச்சர் விஜயபாஸ்கர். தினகரனின் வலதுகரமாகத் திகழ்கிறார். விஜயபாஸ்கரின் ஆசி பெற்றவர் சுப்பிரமணியன். நாமக்கல்காரர். அபிராமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் நடத்திவருகிறார். சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் எங்கெங்கு பில்டிங் வேலை நடக்கிறதோ... அதில் சுப்பிரமணியத்தின் பங்கு அதிகமாக இருக்கும். விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பான டெண்டர் வைபவத்தில் சுப்பிரமணியனும் கலந்துகொண்டார். அவருக்கும் ஒ.கே. ஆனது. ஆனால், டெண்டர் கிடைக்காதவர்கள் உடனே சுப்பிரமணியத்தின் மீது பிரச்னையை கிளப்பினார்கள். 'இதற்கு முன்பு, சுப்பிரமணியம் இவ்வளவு பெரிய கட்டடங்களை கட்டியதில்லை. ஆனால், அவர் கட்டியதாகச் சொல்கிறார். அது வடிகட்டிய பொய். அவர் அளித்த டாக்குமென்டுகளை சரிபார்க்கவேண்டும்' என்பது அவர்களின் கோரிக்கை. ஆனால், எதுவும் நடக்கவில்லை என்றதும், பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் போய் புகார் செய்தார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்த ரெய்டு என்கிறார்கள்.

விருதை வாங்கிய ஐ.ஏ.எஸ்

ரெய்டு நடந்த நாளன்று ஜனாதிபதி கையால் தமிழக அரசுக்கான ஒரு விருதை அமைச்சர் விஜயபாஸ்கர் வாங்க டெல்லி போயிருக்கவேண்டும். ஆனால், அவரைப் போகவிடாமல் தடுத்துவிட்டதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் மீது புகார் சொன்னார் விஜயபாஸ்கர். இதையடுத்து அந்த விருதை யார் பெற்றுக்கொண்டார்... தெரியுமா? டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-தான் நேரில் போய் விருதை பெற்றுக்கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடக்காத மர்மம் 

விஜயபாஸ்கரை மையமாக வைத்து சுமார் 35 இடங்களில் ரெய்டு நடத்த வருமானவரித்துறையினர் ரகசிய லிஸ்ட் தயாரித்தனர். அதில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகமும் இடம்பெற்றிருந்தது. நேற்று (07.04.2017) காலை ரெய்டுகள் ஒரே நேரத்தில் ஆரம்பித்தபோது, வருமானவரித்துறையின் சில அதிகாரிகள் தலைமைச் செயலகம் அருகே போய்விட்டார்கள். மத்திய ரிசர்வ் படை துணையுடன் முன்பு தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் அறையில் ரெய்டு நடத்தியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மௌனமாக இருந்ததை ராம மோகன ராவ் விமர்சித்தார். தற்போது அதே தலைமைச் செயலகத்தில் விஜயபாஸ்கரின் அறையில் ரெய்டு நடத்த வருமானவரித்துறையினர் சென்றார்கள். கடைசி நிமிடத்தில் டெல்லியில் இருந்து வந்த உத்தரவு அவர்களை தடுத்து திருப்பி அனுப்பியது. 

இதற்கிடையில், முதல்வர் எடப்பாடியாருக்கும் தினகரனுக்கும் இடையேயான நட்பு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறதாம். விஜயபாஸ்கரின் வீட்டுக்கே எடப்பாடியாரை போய் விசாரிக்கச் சொன்னார்களாம் தினகரன் தரப்பினர். ஆனால், எடப்பாடியார் மறுத்துவிட்டாராம். 'தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்த வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன். விஜயபாஸ்கர் வீட்டுக்கு நான் போவது சரியல்ல...' என்று சொல்லிவிட்டாராம். கடுப்பான தினகரன் தரப்பினர் வேறு சில அமைச்சர்களையும், துணை சபாநாயகரையும் விஜயபாஸ்கர் வீட்டுக்கு போய்வரும்படி சொன்னார்களாம், அதன்படியே அவர்களும் போய் வந்தார்கள்.
மொத்தத்தில், கடந்த சில நாட்களாக நடந்த ஆர்.கே நகர் வன்முறை சம்பவங்கள், வருமானவரித்துறை ரெய்டில் கிடைத்த டாக்குமென்டுகள்... இவற்றையெல்லாம் வைத்து டெல்லியில் தற்போது தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். இன்று இரவு அல்லது நாளை...ஆர்.கே. நகரில் தேர்தலை தள்ளிவைப்பதாக அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்க்கட்சியினர் சொல்லிவருகிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்!

-பாலகிஷன்.


டிரெண்டிங் @ விகடன்