வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (09/04/2017)

கடைசி தொடர்பு:17:55 (09/04/2017)

"சாலையில் திடீர் பள்ளம்: நடந்தது என்ன?" நடத்துநர் பேட்டி!

 

 

 

சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில் திடீரென்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கிக் கொண்டதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

annasalai cave-in


அண்ணாசதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி இன்று மதியம் சென்று கொண்டிருந்த தடம் 25G எனும் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தை ஓட்டுநர் குணசீலன் ஓட்டிச் சென்றார். இப்பேருந்தில் நடத்துநராக ரமேஷ் இருந்தார். பேருந்து ஆயிரம்விளக்கு சர்ச் பார்க் அருகேயுள்ள நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றபோது இந்த விபத்து நேரிட்டது. 

விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் குணசீலனும், நடத்துநர் ரமேஷூம் நம்மிடம் தெரிவித்ததாவது:
"பிற்பகல் 2 மணியளவில் ஆயிரம் விளக்கு நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினோம். அப்போது, சிலர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று சாலையில் விரிசல் ஏற்படுவது போன்று உணர்ந்தோம். உடனடியாக, பேருந்தில் இருந்த 35 பயணிகளையும் அவசரமாக பேருந்தை விட்டு இறங்குமாறு கேட்டுக் கொண்டோம். இதனால், எல்லா பயணிகளும் வேகமாக இறங்கினர். கண்இமைக்கும் நேரத்திற்குள் சாலையில் விரிசல் ஏற்பட்டதால், பேருந்தை வேறுஇடத்திற்கு நகர்த்த முடியாமல் போய் விட்டது. எனினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதே நல்ல விஷயம்தான்" என்று விவரித்தார்.

பேருந்தை பின்தொடர்ந்து வந்த ஒரு காரும், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார். நடந்தது பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் முன், அவர் காரை விட்டு குதித்து தப்பியோடி விட்டார். இந்த திடீர் விபத்தைத் தொடர்ந்து, அண்ணாசாலை ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பள்ளத்தில் சிக்கிய கார் உடனடியாக மீட்கப்பட்டது. பேருந்தை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
-ஜெ.பிரகாஷ்,  அன்பரசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க