ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு! | EC cancelled RK Nagar by poll

வெளியிடப்பட்ட நேரம்: 00:34 (10/04/2017)

கடைசி தொடர்பு:12:10 (10/04/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Election Commission

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வருகின்ற 12-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, வருமானவரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனை, சுமார் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில்... 'விஜய பாஸ்கரின் வீடுகள், அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன' என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் என்று சொல்லப்படுபவை வெளியாகின. அந்த ஆவணத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அவர்கள் மூலமாக ஒரு வாக்காளருக்கு 4,000 ரூபாய் வரை வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியைப் பாகம் பாகமாகப் பிரித்து, 85 சதவிகித வாக்களர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி 89 கோடி ரூபாய் வரை செலவிட கணக்கிட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

RK Nagar by poll cancelled

இதற்கான அறிவிப்பை, இந்தியத் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 29 பக்கங்களில், அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த  ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதில், " அரசியல் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுகிறது. பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள், வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. நூதன முறைகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி வரை ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்போன், வெள்ளித்தட்டு ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா புகாரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 35 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

 இதற்கு முன், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியிலும் இதேபோன்று நிலை ஏற்பட்டது.  தற்போது, தேர்தல் நியாயமாக நடைபெறும் சூழல் இல்லை. எனவே, தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.