‘மதுக்கடைகளே முக்கியம்!' மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலையாக மாற்றிய அரசுகள்! | States denotify highways post SC liquor shop ban!

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (10/04/2017)

கடைசி தொடர்பு:17:43 (10/04/2017)

‘மதுக்கடைகளே முக்கியம்!' மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலையாக மாற்றிய அரசுகள்!

டாஸ்மாக்

"தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும், நெடுஞ்சாலைகளில் எந்த விதத்திலும் மது விற்பனை கூடாது, 500 மீட்டருக்கு அப்பால் மட்டுமே மதுக்கடைகளை அமைக்க வேண்டும்" என்று கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில அரசுகள் தொடர்ந்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம், ஏற்க மறுத்துத் தள்ளுபடி செய்து விட்டது. 

இதனால், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றுக்கு அருகாமையில் இருந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. பல இடங்களில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் கடைகளை அமைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மூடப்பட்ட மதுபானக் கடைகளுக்குப் பதிலாகப் புதிதாக எங்கும் கடைகளை அமைக்க முடியாத நிலை உருவானது. இதனால், மாநில அரசுகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மேலும், நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், பப் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களின் வருகை இன்றி மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளன.

மாநில நெடுஞ்சாலை

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையும் நிறைவேற்ற வேண்டும், அரசுக்கு வருமானம் வருவதும் நிற்கக் கூடாது என்று யோசித்த மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநில அரசுகள், பல ஆயிரம் கி.மீ தொலைவிலான மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட, நகராட்சி, ஊராட்சிச் சாலைகளாகத் தகுதி இழப்பு செய்துள்ளன. ஹிமாச்சலப் பிரதேசத்தில் 16 மாநில நெடுஞ்சாலைகள் மாவட்டச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 275 கி.மீ தூரத்துக்கு மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு வேகவேகமாக இந்த நடவடிக்கையை மேற்குவங்க அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், இதற்கு எந்த ஒரு காரணத்தையும் அது தெரிவிக்கவில்லை.

மகாராஷ்டிராவில், மூன்று மாநகராட்சிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையை மாநகராட்சி சாலையாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. "இதுபற்றி விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார் மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் சந்திகாந்த் பாட்டில். இதேபோல், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் பல மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை மாவட்டச் சாலைகளாக மாற்றி, தங்களிடம் ஒப்படைக்கும்படி கடிதம் எழுதியுள்ளனவாம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கி.மீ ஆக உள்ள தேசிய நெடுஞ்சாலையை இரண்டு லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்போது மாநில அரசுகளின் கோரிக்கைகளை வைத்துப் பார்த்தால், தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலையின் அளவு பாதியாகச் சுருங்கிவிடும். ஆனால், அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு இல்லை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும்கூட இப்படி, பல மாநில நெடுஞ்சாலையை மாவட்டச் சாலையாக, மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மதுக்கடை பார் உரிமையாளர்கள், அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசும்கூட அத்தகைய யோசனையில் இருப்பதாகவும், எனவே, சில நாட்கள் காத்திருக்கும்படியும் டாஸ்மாக் அதிகாரிகள் பார் உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனராம். 

டாஸ்மாக் கூட்டம்

மாநில நெடுஞ்சாலைத் துறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். முதலமைச்சர் உள்பட தமிழக அரசே, ஆர்.கே நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வெற்றிக்காக, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று இத்தொகுதித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், விரைவில் நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகளாக மாற்றம் செய்து சப்தமின்றி அறிவிப்பு வெளியாகும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், தேர்தல் ரத்து அறிவிப்பால், அரசு நிர்வாகம் முடங்கிப்போயுள்ளது.

கடந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் படிப்படிப்பாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று பிரசாரம் செய்தார். மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றதும் 500 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டு, அவை மூடப்பட்டன. தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவால் சுமார் 3,300 மதுக்கடைகளை மூடவேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும், மாவட்டச் சாலைகளாக மாற்றும் முயற்சியை அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

இனியாவது தமிழக அரசு மதுக்கடைகள் மூடப்படும் விவகாரத்தில் ஆக்கபூர்வமாகச் செயல்படுமா என்று பார்ப்போம்!

- பா.பிரவீன் குமார்


டிரெண்டிங் @ விகடன்