‘தினகரன் மட்டுமா... தி.மு.கவும்தான்!’ - சீறும் சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன் #VikatanExclusive | Not just Dinakaran, DMK too did the same, slams CPM candidate loganathan

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (10/04/2017)

கடைசி தொடர்பு:16:02 (10/04/2017)

‘தினகரன் மட்டுமா... தி.மு.கவும்தான்!’ - சீறும் சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன் #VikatanExclusive

லோகநாதன்

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியானதை வரவேற்கின்றனர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள். ‘தினகரன் ஆட்களும் தி.மு.கவினரும் வாக்காளர்களுக்குப் பணத்தை விநியோகித்தனர். இவர்களை அடுத்து வரக் கூடிய தேர்தலில் போட்டியிடச் செய்யாமல், தகுதி இழப்பு நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்’ என்கிறார் சி.பி.எம் கட்சியின் வேட்பாளர் லோகநாதன். 

அ.தி.மு.க அம்மா அணி சார்பில், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாக, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குப் புகார் எடுத்துச் சென்றார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். ‘பணம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கிவிடலாம் எனக் கணக்குப் போடுகின்றனர். இப்படியொரு சூழலில் தேர்தல் நடக்காமல் இருப்பதே சிறந்தது’ எனக் கடந்த 7-ம் தேதி கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ராமகிருஷ்ணன். இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இந்த அறிவிப்பை ஆளும்கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன. 

தினகரன்‘இந்த அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என ஆர்.கே.நகரில் சி.பி.எம் கட்சியின் வேட்பாளர் லோகநாதனிடம் கேட்டோம். “எங்களைப் பொறுத்தவரையில், தேர்தல் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் நடைபெறாமல் தடுக்க, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்த வேண்டும் என்பது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. தனிநபர்களை முன்னிறுத்தாமல் கட்சிகளுக்கு ஓட்டுப் போடும் நிலைமை வந்தால், இதுபோன்ற அவலங்களைத் தடுக்க முடியும்.

தனி நபர்கள் தங்களின் செல்வாக்கால், வாக்குக்குப் பணம் கொடுக்கும் செயல்களில் இறங்குகின்றனர். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், தேர்தல் பணிகளுக்கு மத்திய அரசு அதிகாரிகளைத் தனி அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். ஆர்.கே.நகரில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும், மாநகராட்சியில் பணிபுரிகின்றனர். இவர்களால் எங்களைப் போன்றவர்களைத்தான் அதட்ட முடிகின்றது. ஆளும்கட்சியினரின் முறைகேட்டை இவர்களால் தட்டிக் கேட்க முடியாது. ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் அதிகாரிகள் இருந்தால்தான், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் அச்சம் இருக்கும். இந்தத் தேர்தலில் தினகரன் செய்த அதே முறைகேட்டைத் தி.மு.கவும் செய்தது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு வாக்கு விழுந்த வார்டுகள் மற்றும் பாரம்பர்ய தி.மு.க வாக்காளர்கள் என அறுபதாயிரம் பேரைக் கண்டறிந்து, தலா இரண்டாயிரம் ரூபாய் என பணத்தைக் கொடுத்துள்ளனர். அவர்கள் கட்சியின் வாக்கு வங்கியைத் தக்க வைக்கும் முயற்சியாகவே இதைச் செய்துள்ளனர். ‘தினகரனோ, மதுசூதனனோ தங்கள் கட்சியின் வாக்காளர்களை விலைபேசிவிடக் கூடாது’ என்பதில் தி.மு.கவும் உறுதியாக இருந்தது. ‘தேர்தல் ரத்து செய்யப்படலாம்’ என்பதால்தான் பன்னீர்செல்வம் அணியினர் அமைதியாக இருந்தனர். தேர்தல் ரத்து அறிவிப்பு வராமல் போயிருந்தால், இன்று பன்னீர்செல்வம் அணியினர் பணத்தைக் கொடுக்கும் முடிவில் இருந்தார்கள். இன்றைய சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தேர்தலை ரத்து செய்துவிட்டார்கள். இந்த ரத்துக்கு யார் காரணமோ, அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவர்கள் மீண்டும் போட்டியிடாமல் தடுத்தால்தான், பணம் கொடுக்கப்படுவதை ஓரளவாவது தடுக்க முடியும். அதேபோல், ஆரத்தி எடுப்பது, கும்பமேளா வரவேற்பு கொடுப்பது போன்றவற்றை தேர்தல் செலவீனங்களுக்குள் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி எடுப்பதற்காக தட்டு, பழங்கள் போன்றவற்றுடன் 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கின்றனர். இதன்பேரில் வழங்கப்படும் தொகை மிக அதிகம். பணம் கொடுப்பதால்தான் மக்கள் ஆரத்தி எடுக்கின்றனர். இனி வரும் தேர்தல்களில் ஆரத்தி மீதும் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் கொந்தளிப்புடன். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்