'அடுத்து தேர்தல் நடத்தினால்... பணத்துக்கு எங்கே செல்வோம்!?' - தீபா அணியினரின் 'அடடே' கவலை #VikatanExclusive

 

தீபா

 ஆர்.கே.நகரில் ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலை மீண்டும் நடத்தினால் பணத்துக்கு எங்கே செல்வோம் என்ற கவலையில் தீபா அணியினர் உள்ளனர். 

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. இதனால் அந்த தொகுதியில் போட்டியிட்ட 62 வேட்பாளர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தேர்தலால் திருவிழாவைப் போல காட்சியளித்த ஆர்.கே.நகர், கட்சியினர் நடமாட்டம் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஓட்டல்கள், குளிர்பான கடைகளில் கூட்டம் இல்லை. பாதுகாப்புக்கு வந்த மத்திய பாதுகாப்பு படையினரும் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளும் பரபரப்பில்லாமல் வழக்கமான பணிகளில் மூழ்கியுள்ளனர். 
 செல்ல ராஜாமணிஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன், செல்ல ராஜாமணி ஆகியோர் கூறுகையில், "தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தோம். மேலும், மத்திய பாதுகாப்பு படையினரை தேர்தல் பாதுகாப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தோம். அதன்படி தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். வேட்பாளர் டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய நாங்கள் கொடுத்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. 
 வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. தொகுதியில் அசாதாரண சூழ்நிலை உருவாகினால் தேர்தலை ரத்து செய்யலாம். ஆனால், அதைவிட்டு தேர்தலை நிறுத்தியது கண்டத்துக்குரியது. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்"என்றனர். 


 இதையடுத்து தீபா, இன்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பில் தேர்தல் ஆணையத்தையும், வேட்பாளர்கள் டி.டி.வி.தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரை விமர்சிக்க உள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். 


 இதற்கிடையில் தீபா அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம், "தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துவிட்டது. பிரசாரத்துக்காக நாங்கள் இதுவரை செலவழித்த பணத்துக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். எங்களைப் போன்றவர்கள் கடன் வாங்கி தேர்தலுக்கு பணத்தை செலவழித்து வந்தோம். மீண்டும் தேர்தலை நடத்தினால் எங்களுக்கு இரட்டிப்பு செலவு. அந்தப் பணத்துக்கு நாங்கள் எங்கே போவோம். பணக்கார வேட்பாளர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. பேரவையில் உள்ள நிர்வாகிகள் தங்களால் முடிந்த பணத்தைக் கொண்டு பிரசாரத்துக்கு செலவு செய்தோம். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை எங்களை பெரிதும் பாதிக்க வைத்துள்ளது"என்றனர் கவலையுடன். 

- எஸ்.மகேஷ் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!